Thursday, August 27, 2015

வால் நட்சத்திரத்துக்கு ஆறு வால்கள்

வால் நட்சத்திரத்துக்கு ஆறு வால்கள்



ஐரோப்பியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வால் நட்சத்திரங்களை ‘பிசாசுகள்’ என்று கருதினர். நவீன காலத்தில் சர் பிரெட் ஹாயிலும் (Sir Fred Hoyle) சந்திரா விக்ரமசிங்கேயும்(Wickramasinghe) வால் நட்சத்திரங்களை கிருமிகளைக் கொண்டு வரும் ‘வில்லன்கள்’ என வர்ணித்தனர். எனினும் வால் நட்சத்திரங்களை சூரிய மண்டலத்தின் கோமாளிகள் என்றும் சொல்லலாம்.

சர்க்கஸ் கோமாளி அவ்வப்போது வெவ்வேறு வேஷத்தில் வருவது போல வால் நட்சத்திரங்கள் விதவிதமான வடிவில் வருகின்றன. அட்டகாசமான வாலுடன் காணப்படும் வால் நட்சத்திரங்கள் உண்டு. சில வால் நட்சத்திரங்கள் பெரிய தலையுடன் காணப்படுகின்றன. பொதுவில் வால் நட்சத்திரத்துக்கு ஒரு வால் தான் உண்டு. ஆனால் மூன்று வால்கள் அல்லது ஆறு வால்களுடன் மிரட்டிய வால் நட்சத்திரங்கள் கடந்த காலத்தில் தெனபட்டுள்ளன.

1744 ஆம் ஆண்டில் தோன்றிய வால் நட்சத்திரம் இவ்விதம் ஆறு வால்களைக் கொண்டதாக இருந்தது. அக்காலத்தில் கேமிரா கிடையாது. பிரெஞ்சு ஓவியர் வரைந்த படத்தைக் கீழே காணலாம்.

ஆறு வால்களுடன் கூடிய வால் நட்சத்திரம்.
தலை அடிவானத்துக்கு கீழே உள்ளது.
1957 ஆம் ஆண்டில் தோன்றிய ஒரு வால் நட்சத்திரத்துக்கு கூரிய மூக்கு இருந்தது. படம் கீழே.

கூர் மூக்கு வால் நட்சத்திரம்

வால் நட்சத்திரங்கள் அனைத்துமே சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதை மறந்து விடக்கூடாது. ஆகையால் தான் அவை சூரியனைச் சுற்றுகின்றன.

ஒரு கால கட்டத்தில் பூமி தான் மையத்தில் இருப்பதாகவும் சூரியன், சந்திரன், கிரகங்கள் என அனைத்தும் பூமியைச் சுற்றுவதாகவும் தவறான கருத்து நிலவியது. போலந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி கோப்பர்னிகஸ்(Copernicus) சூரியன் தான் நடுவில் இருக்கிறது என்று கண்டுபிடித்தார். ஆனால் அதை வெளியே பகிரங்கமாகச் சொல்லப் பயந்தார். பின்னர் அவரது கொள்கை நிலைநாட்டப்பட்டது.  ஆனாலும் வால் நட்சத்திரங்களைப் பற்றி கோப்பர்னிகஸுக்குப் பிறகு வந்த கெப்ளர் (Kepler)அல்லது வேறு விஞ்ஞானிகளால் சரியான விளக்கத்தை அளிக்க இயலவில்லை.

எட்மண்ட் ஹாலி
கடைசியில் சர் ஐசக் நியூட்டன்(Sir Isaac Newton) தான் சரியான விளக்கத்தை அளித்தார். நியூட்டனின் சம காலத்தவரான எட்மண்ட் ஹாலி(Edmond Halley) தனது நண்பர் நியூட்டன் உருவாக்கிய இயக்க விதிகளைப் பயன்படுத்தி ஒரு பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். 1531, 1607, 1682 ஆகிய ஆண்டுகளில் வானில் தென்பட்ட வால் நட்சத்திரம் ‘பழைய சுப்பன் தான்’ என்று அவர் கண்டுபிடித்துக் கூறினார். அதாவது கி.மு 240 ஆம் ஆண்டிலிருந்து அது திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கிறது. அதே வால் நட்சத்திரம் தான் இப்படி வருகிறது என்று அதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பழைய குறிப்புகளையும் தாம் போட்ட கணக்குகளையும் வைத்துத் தான் எட்மண்ட் ஹாலி 1705 ஆம் ஆண்டில் அக்கண்டுபிடிப்பைச் செய்தார். அந்த வால் நட்சத்திரம் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலை காட்டும் என்று கூறிய ஹாலி அது மீண்டும் 1758 ஆம் ஆண்டில் வரும் என்று சொன்னார்.

ஹாலி வால் நட்சத்திரத்தின்
சுற்றுப்பாதை 
அதன்படியே அந்த வால் நட்சத்திரம் அந்த ஆண்டில் மீண்டும் வந்தது. ஆனால் அப்போது ஹாலி உயிருடன் இருக்கவில்லை. அந்த வால் நட்சத்திரத்துக்கு அவரது பெயர் வைக்கப்பட்டு அது ஹாலி வால் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது (Halley's Comet). ஹாலி தமது ஆயுட்காலத்தில் 24 வால் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையைக் கணக்கிட்டுக் கூறினார். ஹாலி வால் நட்சத்திரம் மாதிரியே பல வால் நட்சத்திரங்கள் திரும்பத் திரும்ப வருகின்றன.

திரும்பத் திரும்ப வருகிற வால் நட்சத்திரங்களை அதுவரை யாராலும் அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் போனது ஏன்? முதலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். எட்மண்ட ஹாலி சுற்றுப்பாதையைக் கணக்கிட்டுத் தான் ஹாலி வால் நட்சத்திரம் மீண்டும் வரும் என்று கூறினார். அடையாளத்தை வைத்து அல்ல.

தவிர, ஒவ்வொரு வால் நட்சத்திரமும் சூரியனை நெருங்கும் போது நிறைய பொருளை இழக்கிறது. ஆகவே அடுத்த தடவை வரும் போது அது இளைத்துக் காணப்படுகிறது. சொல்லப் போனால் ஹாலி வால் நட்சத்திரம் 1986 ல் மறுபடி தலை காட்டிய போது அது சோபை இழந்து காணப்பட்டது. அடுத்து 2061 ஆம் ஆண்டில் அது மறுபடி தலை காட்டும் போது மேலும் இளைத்துக் காணப்படலாம்.

ஹாலி வால் நட்சத்திரம் இப்போது
நெப்டியூன் கிரகத்துக்கு அப்பால் உள்ளது.
ஒவ்வொரு தடவையும் சூரியன் காரணமாக ஏராளமான பொருளை இழக்கும் வால் நட்சத்திரங்கள் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற கட்டத்தை எட்டும் போது என்ன ஆகும்? பனிக்கட்டி, தூசு, உறைந்த வாயுக்கள் என அனைத்தையும் இழந்த பின் வால் நட்சத்திரம் வெறும் பாறையாக அதாவது அஸ்டிராய்ட் (Asteroid) ஆக மாறி விடும். அப்போது அது பறக்கும் பாறை அல்லது பறக்கும் குட்டி மலை என்று சொல்லத்தக்க அளவில் இருக்கும்.

உதாரணமாக 1949 ஆம் ஆண்டில் ஒரு வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்ப்ட்டது. அதற்கு 107 P/Wilson-Harrington வால் நட்சத்திரம் என்று பெயரிட்டார்கள். பின்னர் 1979 ஆம் ஆண்டில் ஒரு அஸ்டிராய்ட் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு 1979 A என்று பெயரிட்டனர். பிறகு உன்னிப்பாக ஆராய்ந்ததில் அது 1949 ல் கண்டுபிடிக்க்ப்பட்ட அதே வால் நட்சத்திரம் என்று தெரிய வந்தது. அதாவது வால் நட்சத்திரமாக இருந்து அது பின்னர் அனைத்தையும் இழந்து பாறையாகி விட்டது.

 இதற்கு நேர் மாறாக ஒன்று நடந்தது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்டிராய்ட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.அதற்கு 596 ஷெல்லா (596 Schella) என்று பெயரிட்டார்கள். எனினும் அமெரிக்க அரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் லாசன் 2010 ஆம் ஆண்டு வானை ஆராய்ந்த போது மேற்படி அஸ்டிராய்டு வால் நட்சத்திரம் போலத் தென்படுவதைக் கவனித்தார். பின்னர் மற்ற்வர்களும் ஆராய்ந்த போது உண்மையில் அது வால் நட்சத்திரமே என்பது தெரிய வந்தது. இப்படியாக ஆரம்பத்தில் அஸ்டிராய்டுகள் எனக் கருதப்பட்டவை பின்னர் வால் நட்சத்திரங்கள் என்று தெரிய வந்துள்ளது.



இது புதிய நிலைமையை உண்டாக்கியது. சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் இடையே கோடானு கோடி அஸ்டிராய்டுகள் கிரிவலம் செய்யும் பக்தகோடிகளைப் போல ஓர் ஒழுங்குடன் தனிப்பாதை அமைத்துக் கொண்டு சூரியனை சுற்றி வருகின்றன. இக்கூட்டத்தில் உள்ளவை அனைத்தும் சிறியதும் பெரியதுமான பாறைகளே.

இப்போது இந்த அஸ்டிராய்ட் கும்பலின் நடுவே வால் நட்சத்திரங்களும் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது. வானவியல் விஞ்ஞானிகள் இவற்றுக்கு Main Belt Comets  என்று பெயரிட்டுள்ளனர். இவை கிரகங்கள் மற்றும் அஸ்டிராய்டுகள் போல வட்ட வடிவப் பாதையில் சுற்றுகின்ற காரணத்தால் சூரியனுக்கு அருகில் வருகின்ற வாய்ப்பே இல்லாதவை.

வால் நட்சத்திரங்களைப் பற்றி மேலும் விவரமாக அறியும் பொருட்டு நாஸாவும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் கடந்த பல ஆண்டுகளில் வால் நட்சத்திரங்களை நோக்கி ஆளில்லா விண்கலங்களை அனுப்பின. இவற்றில் பலவும் வால் நட்சத்திரங்களுக்கு அருகாமையில் சென்று அவற்றைப் படம் பிடித்து அனுப்பின.

வில்ட்-2 என்னும் வால்
நட்சத்திரத்திலிருந்து தூசு
சேகரித்த ஸ்டார்டஸ்ட்
விண்கலம்
அந்த விண்கலங்களில் ஒன்று வால் நட்சத்திரத்தில் அடங்கிய பொருளின் சாம்பிளை சேகரித்து பூமிக்கு அனுப்பியது. நுண்ணிய வடிவிலான அப்பொருட்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது தெரிய வந்த தகவல்கள் வால் நட்சத்திரங்கள் எப்படி உண்டாயின என்பது பற்றி விஞ்ஞானிகள் இதுவரை கொண்டிருந்த கொள்கைகளை அடியோடு தகர்க்கும் வகையில் உள்ளன.

இப்படியாக வால் நட்சத்திரங்கள் புதுக் குழப்பத்தை உண்டாக்கியுள்ளன. இந்த நிலையில் வால் நட்சத்திரங்கள் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொள்ள இன்னும் சில காலம் ஆகலாம் என்று தோன்றுகிறது.

Friday, May 15, 2015

சூரிய குடும்பத்தின் வயது என்ன?

solarfamily_620
நமது தாய்வீடான பூமி தோன்றி சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகின்றன என அறிவியல் கிட்டத்தட்ட துல்லியமாய் கண்டுபிடித்து விட்டது. சந்திரனிலிருந்து எடுத்துவந்த கல்லிருந்தும், பூமியில் இருக்கும் கற்களின் வயதை அறியும் கதிர்வீச்சு சோதனை (radiometric age dating of meteorite material) மூலமும் இது அறியப்பட்டது. இதில் 1% மாறுபாடு இருக்கலாம். அவ்வளவே..! மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜாக் மலையிலிருந்து கிடைத்த சிர்கான் படிகங்கள்தான் (Zircon crystals) இதுவரை கிடைத்த படிகங்களிலேயே வயதானது. அதன் வயதுகுறைந்த பட்சம் 404 கோடி ஆண்டுகள் இருக்கலாம். சூரியனின் நிறை மற்றும் பிரகாசம் போன்றவற்றை மற்ற விண்மீன்களுடன் ஒப்பிடும்போது நமது சூரியனுக்கும், சூரிய குடும்பத்திற்கும் சுமார் 456.7 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்பது தெரிய வருகிறது. அதுமட்டுமல்ல இதன் மூலம் பூமியின் வயதும் 454 கோடி ஆண்டுகள் என்பதும், பூமி, சூரிய, சந்திரர்கள் சம வயதுக்காரர்கள் என்றும் கூட தெரிய வருகிறது.

சனி கோள்

சனி என்பது சூரியனை ஆறாவது கோளாக சுற்றி வருகிறது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியான பெரிய கோள் சனிதான். சனி என்பது பழங்கால ரோமனிய விவசாயக் கடவுளின் பெயராகும். சனிக்கோளின் வானவியல் சின்னம், ரோமானிய விவசாயக் கடவுளின் சின்னமான அரிவாள்தான்.
இரவு வானில் சூரியக் குடும்பத்தின் 5 உறுப்பினர்களை வெறும் கண்ணால் எந்த கருவியும் இன்றி பார்க்க முடியும். அவைகளில் ஒன்றுதான் சனிக் கோள். நம் மூதாதையர்களும், இதனை வெறும் கண்ணால் பார்த்தனர். கண்ணால் பார்க்கும் கோள்களில் இதுதான் தொலைவில் உள்ளது என்றும் தெரிந்து கொண்டனர். சனிக்கோள் மஞ்சள் நிறத்தில் மின்னாமல் பளிச்சென்று தெரியும். பூமியிருந்து பார்க்கும்போது வானில் தெரியும் கோள்களில் மூன்றாவது பிரகாசமான கோள் சனி. சனிக்கோளை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதர்கள் பார்த்து வந்திருக்கின்றனர்.
sani_620
கலிலியோவும், சனிக்காதும்..!
தொலைநோக்கி மூலம் முதன் முதல் 1610 ஆம் ஆண்டு சனிக்கோளை பார்த்தவர் கலிலியோ தான். சனிக்கோளை வானில் நோக்கிய கலிலியோவுக்கு பிரமிப்பே மிஞ்சியது. காரணம் அதன் வித்தியாசமான தோற்றம்தான். ஆனால் அதனைப் பார்த்து ரொம்பவே குழம்பிவிட்டார். பின்னர்தான் இது என்னடா, இரண்டு பக்கமும் காது போன்ற தோற்றம் உடையதாய் இருக்கிறதே என்று அதன் வளையங்களைப் பார்த்து திகைத்தார். ஏனெனில் அவரது தொலை நோக்கி சிறியதாக இருந்ததால், வளையங்களின் அமைப்பு சரியாகத் தெரியவில்லை.அந்த காதுகள்தான் சனியின் வளையங்கள் என்றும், அவை பனிக்கட்டிகளால் ஆனவை என்றும் அவருக்கு அப்போது தெரியாது. பிறகே அவை சனியின் வளையங்கள் என்று தெரிந்து கொண்டார்.
தட்டை துருவங்கள்..!
சனிக்கோள் வியாழனுக்கும், நெப்டியூனுக்கும் இடையில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது சூரியனிடமிருந்து 140 கோடி கி.மீ. (1,400,000,000௦௦௦ கி.மீ ) தொலைவில் உள்ளது. இது 9 வானவியல் அலகு ஆகும். ஒரு வானவியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள 14.9 கோடி கி.மீ.தொலைவுதான். சனி இருக்கும் தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தைப் போல சுமார் 9 மடங்கு. சனியின் நடுக்கோட்டு விட்டம் 120,536 கி.மீ. சனியின் விட்டமும் கூட பூமியைப் போல சுமார் 10 மடங்கு. எனவே இதில் வரிசையாக 9 பூமிகளை நிற்க வைக்கலாம். உள்ளே தூக்கிப் போட்டு அடக்கலாம். அவ்வளவு பெரியது. ஆனால் சனிக்கோளின் துருவங்கள் தட்டையான பந்து/ஆரஞ்சு போல காணப்படுகிறது. துருவங்களில் விட்டம் 108,728 கி.மீ தான்.
சனிக்கோள் மிக வேகமாக சுற்றுவதால்தான் துருவப்பகுதிகள் தட்டையாகிவிட்டன என்றும் சொல்லப்படுகிறது. சனிக்கோள் மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் மற்றும் அனைத்து வாயுக் கோள்களின் துருவங்களும் தட்டையாகவே உள்ளன. பாறைக் கோளான நம் பூமியின் நிலையும் அதுதானே. சனிக்கோளின் அடர்த்தி நீரின் அடர்த்தியை விட மிகவும் குறைவு. எவ்வளவு தெரியுமா? சனியின் அடர்த்தி 0.69 தான். நீரின் அடர்த்தி 1. சூரிய குடும்பத்தில் மிக மிக அடர்த்தி குறைவான, மிகவும் லேசான கோள் சனி மட்டுமே. பூமியின் அடர்வு 5.32. இதிலுள்ள ஹைடிரஜனும், ஹீலியமும்தான் இதன் அடர்த்தி குறைவுக்கு முக்கிய காரணி. நீங்க சனிக்கோளை தூக்கி கடலில் போட்டால், இடுப்பு ஒட்டியாணம் மாட்டிக் கொண்ட சனிக்கோள், நீரில் ஜம்மென்று ஓர் ஆரஞ்சு பழம் போல மிதக்கும்.
சனியிலிருந்து சூரியனைப் பார்த்தால், நாம் பூமியிலிருந்து பார்ப்பதைப் போல பிரகாசமாக இருக்காது. ஒரு பிரகாசமான விண்மீன் போலவே தெரியும். சனிக்கோளில் பூமியில் தெரியும் சூரிய ஒளியில் 1% மட்டுமே தெரியும். உங்களின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சனியில் 75 கிலோ.
பூமி தன அச்சில் 23 .5 பாகை சாய்ந்துள்ளது. அது போலவே சூரிய குடும்பத்து அனைத்து கோள்களும் தன் அச்சில் சாய்ந்தே உள்ளன. சனிக் கோளும் தன் அச்சில், 26.73 பாகை சாய்வாகவே சூரியனைச் சுற்றி வருகிறது. நம் பூமியின் கணக்குப்படி சனிக் கோள் ஒரு முறை தன்னைத் தானே சுற்ற 10 மணி, 32 நிமிடம் 35 நொடிகள் ஆகிறது. இந்த துல்லியமான தகவல் 2007 செப்டம்பரில் விண்கலங்கள் வாயேஜர், புரோப் மற்றும் கசினி மூலம் அறிந்தது. இதுதான் சனியின் ஒருநாள் என்பதாகும். ஆனால் பொதுவாக சனியின் ஒரு நாளின் நேரம் என்பது காலப் போக்கில் மாறுகிறது என்பதனை கடந்த 25 ஆண்டுகளில் அறிந்துள்ளனர். முன்பு சனியின் ஒரு சுற்றலின் நேரம் 10 மணி 39 நிமிடம் ஆக இருந்தது. பின்னர், அதன் வேகம் 10 மணி 45 நிமிடம் ஆகிவிட்டது. சனி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர நம் பூமி நேர கணக்கில் 29 ஆண்டுகள், 167 நாட்கள், 6 மணி மற்றும் 40 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால் சனிக்கோளுக்கு இது ஓர் ஆண்டு தான்.

சனியின் மையப்பகுதியில் இரும்பு, நிக்கல் மற்றும சிலிகனும் ஆக்சிஜனும் கலந்த பாறை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனைச் சுற்றி உலோக ஹைடிரஜன் உள்ளது. சனிக்கோளின் மேலுள்ள வாயு பகுதிக்கும் பாறைக்கும் இடையில் திரவ ஹைடிரஜனும், திரவ ஹீலியமும்தான். சனிக்கோளின் உள்ளே இருக்கும் உலோக ஹைடிரஜன்தான் மின்னேற்றத்தை உற்பத்தி செய்து சனிக்கோளின் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. ஆனால் சனியின் காந்தப்பரப்பு, பூமியின் காந்தப் பரப்பை விட பலவீனமானது. வியாழனின் காந்தப் பரப்பில் இருபதில் ஒரு பகுதிதான் (20 :1) சனியின் காந்தப் பரப்பு.
சனியின் வளிமண்டல வெப்பநிலை அதிக பட்சம் -130 °C லிருந்து -191 °C. வரை. இதன் வெளியே இவ்வளவு குளிராக இருக்கிறதே என்று இதைப் பற்றி கொஞ்சம் குறைவாக எடை போட்டு, இது மிக அமைதியான கோள் என நினைத்து விட வேண்டாம். மேற்பரப்பில்தான் குளிரும் உறைபனியும். இதன் உள்ளே மையம் பூமி போலவே கொதித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதன் உட்பகுதி வெப்பம் என்ன தெரியுமா? 12,000°C .வெப்பம்.
சனி தான் சூரியனிடமிருந்து பெற்ற வெப்பத்தைவிட 2.5 மடங்கு அதிக கதிர்வீச்சு ஆற்றலை அதன் மேற்பரப்பிலிருந்து வெளியிடுகிறது. பெற்ற வெப்பத்தை விட அதிகமாக எப்படி வெளிவிட முடியும்? இது எப்படி? சனியினுள் உருவாகும் அதிகப்படியான ஆற்றல், அதன் மெதுவான ஈர்ப்புவிசை அழுத்தத்தினால், கெல்வின்-ஹேல்ம்ஹோல்ட்ஸ் செயல்பாடு(Kelvin–Helmholtz mechanism) மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சனியின் அதிகப்படி ஆற்றலுக்கு இது மட்டுமே காரணி அல்ல. இதற்குள்ளே வேறொரு செயல்பாடும் நடந்து கொண்டிருக்கிறது. சனியின் உள்ளே உள்ள ஹீலியம் துகள்கள் மழையாகப் பொழிந்து வெப்பத்தை தக்கவைத்துக் கொள்கின்றன.
sani_1_620
சனிக் கோளின் வளிமண்டலத்தில் காற்று உள்ளது. இது சூறைக்காற்று போல, எப்போதுமே மணிக்கு 1800 கி.மீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. பூமியிலிருந்து அனுப்பட்ட வாயேஜர் (Voyager) விண்கலம்தான் சனியின் வளிமண்டலத்தில் கிழக்கு நோக்கிய காற்றின் வேகத்தை கண்டுபிடித்தது. நம் சூரிய குடும்பத்தில் அதிக வேகத்தில் காற்று வீசும் கோள் சனி மட்டுமே. 2007ல் செலுத்தப்பட்ட கசினி (Cassini) விண்கலம், சனிக்கோளின் வடபகுதி யுரேனஸ் போலவே, அழகிய நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் நீல நிறத்தில் மின்னுகிறது என்பதை தெரிவித்தது. ரெலைக் என்ற பிரிட்டிஷ்க்காரர் தான் முதலில் சூரியன் மறையும் தருவாயில் மின்காந்த கதிர்வீச்சு அல்லது ஒளிச்சிதறல் மூலம் ஒலியலைகளை விட சிறிய துகள்கள் இந்த நீல நிறத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார். அதனால் இந்த சிதறலுக்கு ரெலைக் சிதறல் (Rayleigh scattering) என்று பெயர். மேலும் துருவங்களில் துருவ வொர்டெக்ஸ்( warm polar vortex,) என்ற புயல் உருவாகிறது. இது சூரிய குடும்பத்தில் சனிக்கோளில் மட்டுமே நடக்கிறது. அங்கே வெப்பநிலையும் உச்சத்தில் 122°C என இருக்கும் என்றும் அறியப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலைதான் சனிக்கோளின் அதிக பட்சமாக கோடையின் வெப்பமாகும்.

அறுகோண மேகம்..!
சனிக்கோளின் வடதுருவ வொர்டெக்ஸைச் சுற்றி ஓர் அறுகோண அமைப்பு மேகமும் காணப்படுகிறது. இதனைக் கண்டுபிடித்தது நாம் செலுத்திய விண்கலமான வாயேஜர்தான். ஆனால் தென் துருவத்தில் வொர்க்டெக்ஸோ, அறுகோண மேகமோ கிடையாது. இங்கே, நம் கடலில் சூறாவளி உருவாகும்போது ஒரு கண் இருப்பது போன்ற கண் அமைப்பு தென் பகுதியில் தென்படுகிறது.

வாயுக் கோளத்தின் வாயுக்கள்..!
சனிக்கோளில் 96.3% ஹைடிரஜன் வாயுவும், 3.25% ஹீலியமும் உள்ளது. மேலும் 0.05% அளவு மீத்தேன் மற்றும் கொஞ்சூண்டு அம்மோனியாவும் (ammonia,) அசிட்டிலீன் (acetylene), ஈத்தேன் (ethane), புரொப்பேன் (propane), பாஸ்பைன் (phosphine) மற்றும் மீத்தேனும் (methene) சனியின் வளிமண்டலத்தில் உள்ளன, அதனால் தான் சனி இவ்வளவு லேசாக இருக்கிறது.
சனியின் வளிமண்டல் மேகங்களில் பூமி போலவே மின்னல்கள் உருவாகின்றன. அதன் அதிர்ச்சி என்பது, பூமியில் உருவாவதைப் போல பல கோடி, கோடி மடங்கு அதிகம். நம் பூமி 23.5 டிகிரி சாய்வாக உள்ளதால் பருவ காலங்கள் வருகின்றன. அது போலவே, சனியிலும் பருவகால மாற்றங்கள் உண்டு. அதன் காரணி சனி தன் அச்சில் 26 டிகிரி சாய்ந்திருப்பதே.
பூமியில் ஏற்படுவது போலவே, சனியிலும் அதன் பெரிய துணைக்கோளால் கிரகணம் உண்டா கிறது. சிறு கோள்களால் துணைக்கோள் நகர்வு (Transit)தெரிகிறது.
சனியின் வளையங்கள்
சனியின் நடுகோட்டுப் பகுதியில்தான் இந்த வளையங்கள் காணப்படுகின்றன. வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களில் வளையங்கள் இருந்தாளும் கூட, அவை சனியில் இருப்பதைப் போல் அவ்வளவு தெளிவாக, அழகாக தெரிவதில்லை. சனியின் வளையங்கள் அதன் நடுக்கோட்டுக்கு மேலே 6,630 கி.மீ.லிருந்து 120,700 கி..மீ தூரம் வரை விரவிக்கிடக்கின்றன. ஆனால் அவற்றின் கனம் வெறும் 23 மீட்டர் மட்டுமே. சனிவளையங்களின் பொருட்கள் வளையங்களில் 93% பனியின் துகள்களாலும், பாறைத் துணுக்குகளாலும், மீத்தேன் தூசுகளாலும் ஆனவை. மீதி 7% அமார்பாஸ் கார்பன் (amorphous carbon). அந்த துகள்களின் அளவு குட்டியூண்டு துகள்களிருந்து அதிக பட்ச அளவு 10 மீ. சில இவற்றை சின்ன தொலை நோக்கியால் கூட அழகாக காணமுடியும். கொஞ்சம் பெரிய தொலைநோக்கி என்றால் சனிக் கோளின் நிறைய வளையங்களைக் காணலாம்.
கலிலியோவிற்கு அடுத்தபடியாக இந்த வளையங்களை 1655ல் பார்த்து அவைகளுக்கு விளக்கம் சொன்னவர் கிறிஸ்டியன் ஹைஜீன்ஸ் ( Christiaan Huygens). சனிக்கோள் உருவானபோதே இதன் வளையங்களும் உருவாகி இருக்க வேண்டுமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த வளையங்கள் ஒருகாலத்தில் சனியின் துணைக்கோளாய் இருந்து மோதி உடைந்ததின் மிச்ச சொச்ச துண்டுகளே இப்படி வளையமாய் சனியைச் சுற்றி உள்ளன என்றும் தெரிவிக்கின்றனர். சனியின் வளையங்களை எப்போதும் காணமுடியாது.
சில சமயம் அவை படுக்கை வசத்தில் இருந்தால் வளையம் ஒரு கோடு போல இருக்கும். அப்போது வளையங்கள் நமக்குத் தெரியாது. 2008-2009ல் அவ்வாறு வளையங்கள் மறைந்து போயின. இனி மீண்டும் 2024-2025 ஆண்டுகளிலும் சனியின் வளையம் காணாமல் போகும். மீண்டும் மீட்கப்படும்.
சனியின் துணைக்கோள்கள்..!
சனிக்கோளுக்கு இதுவரை 62 துணைக் கோள்கள்/சந்திரன்கள் இருப்பதைக் கண்டுபிடித் துள்ளனர். இவற்றில் 20 சந்திரன்கள் வரை கசினி விண்கலத்தால் கண்டுபிடிக்கப் பட்டன. இவற்றில் 53 சந்திரன்/ நிலாவுக்கு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவைகளுள் மிகப் பெரிய துணைக்கோள் டைட்டான்(Titan) தான். இதுதான் சனியின் சுற்றுப்புறத்திலுள்ள பொருள்களில் 90% நிறையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சனியின் வளையங்களையும் சேர்த்துத்தான் இந்த கணக்கு. இந்த டைட்டன் துணைக்கோள், நம்ம சூரிய குடும்பத்தின் முதல் புதல்வன் புதனை விடப் பெரியது. அது மட்டுமல்ல, சூரிய குடும்பத்தின் இரண்டாவது பெரிய துணைக்கோள். முதல் பெரிய துணைக்கோள் வியாழனின் கனிமேடுதான். டைட்டனின் வளிமண்டலத்தில் கனமான நைட்ரஜன் நிரம்பி இருக்கிறது. ஒரு காலத்தில் நம் பூமியில் உயிரினம் உருவாகாதபோது இருந்த மாதிரியே இதுவும் இன்று இருக்கிறது. நம் பூமியின் வளிமண்டலம் 60 கி.மீ உயரம் வரை விரிந்துள்ளது. ஆனால் டைட்டனின் வளிமண்டலம், பூமியைப் போல 10 மடங்கு பெரியது. சனியின் அடுத்த இரண்டாவது பெரிய நிலாவின் பெயர் ரியா(Rhea). இதில் மிக மெல்லிய வளையமும், குறைவான வளிமண்டலமும் உள்ள நிலா. மற்ற நிலாக்கள் ரொம்ப சிறியவை. 34 நிலாக்கள் 10 கி.மீ விட்டம் மட்டுமே உள்ளவை. பெரும்பாலான நிலாக்களுக்கு, டைட்டனின் கிரேக்க புராணப்படியே பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் பெரிய வளிமண்டலம் உள்ள துணைக்கோள் டைட்டன் மட்டுமே. இதில் தான் ஹைடிரோகார்பன் ஏரி உள்ளது. சனியின் துணைக்கோள்களில் ஒன்றான என்சிலாடஸ் (Enceladus) எதிர்காலத்தில் நுண்ணுயிர்கள் வர வாய்ப்பு உள்ள இடம் என்றும் சொல்லப்படுகிறது .

சனியை அறிய அனுப்பிய விண்கலங்கள்..!
சனியின் வளிமண்டலம், அதன் வளையங்கள், துணைக்கோள்கள் பற்றி அறிய, அதனை நோக்கி நான்கு விண்கலங்கள் செலுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க நாசாவின் பயோனிர் 11 (Pioneer 11) என்ற விண்கலம்தான் முதன் முதலில் 1979ல் சனிக்கோளைப் போய் எட்டிப்பார்த்து கதை பேசிவிட்டு வந்தது. பின்னர் வாயேஜர் 1 (செப்டம்பர் 12, 1980) மற்றும் வாயேஜர் 2 (August 25, 1981) விண் கலன்கள் அனுப்பப்பட்டன. கசினி (Cassini) விண்கலம 2004ல் செலுத்தப்பட்டது. இது இன்னும் சனியைச் சுற்றி வருகிறது. சனியின் இரவுப்பக்கம் கசினி சென்றபோது, வெளிச்சம்படாத சனியின் இந்தப் பகுதி நியான் விளக்கு போல மின்னியது. அதன் வளையங்கள் அழகான நிறங்களில் மினுக்குகின்றன. இது மின்னலடிக்கும் நீலம், மரகதப் பச்சை, புதினா பச்சை என பல வண்ணங்கள் காட்டி நம்மை மயக்குகின்றன. சூரிய ஒளி படாத இந்தப் பகுதியில் சனியின் உள் வெப்பமே இந்த ஒளியை உருவாக்குகிறது.

செவ்வாய் கிரகத்தில் மனித இனத்தின் குடியேற்றம் சாத்தியமா

கடந்த மாதம் "The Mars Science Laboratory" (MSL-nicknamed "CURIOSITY") செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரை இறங்கியது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் காலடி வைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்னும் நம்பிக்கை தருகிறது. சூரிய மண்டலத்தில் பூமியைத் தவிர்த்து மனித இனம் வசிக்கக் கூடிய ஒரு சில சாத்தியக் கூறுகளைக் கொண்ட ஒரே ஒரு கிரகம் செவ்வாய் மட்டுமே. ஆனால் மனித இனம் செவ்வாய் கிரகத்தில் குடியேறுதல் என்பது சாத்தியமா? (மனிதன் செவ்வாய் கிரகத்திற்குப் போய் வருவது அல்ல). இதற்குக் கண்டிப்பாக பில்லியன் கணக்கில் செலவுகள் வந்தாலும் அதை அனைத்து நாடுகளும் பங்கிட்டுக் கொள்ளும் என்று வைத்துக் கொண்டு பணத்தை ஒரு தடையாக எடுக்காமல் இக் கட்டுரையை எழுதுகிறேன். செவ்வாயில் மனிதன் குடியேறத் தடையாக இருப்பவற்றில் இரண்டு விஷயத்தை மட்டுமே (ONLY TWO POINTS) இன்று இங்கே பார்ப்போம்.
mars_orbit_400
(1) தூரம்:
பூமிக்கு அடுத்ததாகச் செவ்வாய் உள்ளமை ஒரு சௌகர்யமே. பூமியும் செவ்வாயும் தமக்குரிய நீள் வட்டப் பாதைகளில் (Elliptical Orbits) சூரியனைச் சுற்றி வருவதால் இவையிரண்டும் இப் படத்தில் உள்ளது போன்று குறுகிய இடைவெளியில் அருகருகே வரும் போது (Known as Opposition) பிரயாணம் செய்ய வேண்டிய தூரம் குறையும். ஆனால் அருகருகே வருவது ஒவ்வொரு 26 மாதங்களில் (இரண்டு வருடங்களும் இரண்டு மாதங்களும்) மட்டுமே நிகழும். இதனால் தான் கடந்த சில வருடங்களில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட விண்கலங்களின் (Missions) ஏவல் (Launch) திகதிகளில் இரண்டு வருட இடைவெளியைக் காணலாம். இச் சமயம் இவ்விரண்டு கோள்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி 54.6 மில்லியன் கி.மீ. ஆனால் இது கணக்கில் மட்டும் தான். நிஜத்தில் கடந்த ஐம்பதினாயிரம் வருடங்களில் 2003-இல் மட்டும் இவையிரண்டும் குறைந்த இடைவெளியில் (56 மில்லியன் கி.மீ.)வந்துள்ளன. ஜூலை 27, 2018-இல் திரும்பவும் ஓரளவு குறைந்த இடைவெளியில் (57.6 மில்லியன் கி.மீ.) வரவுள்ளன.
எரிபொருளின் அளவிற்கேற்பப் பிரயாண நேரம் 8-10 மாதங்கள் வரை செல்லலாம். இக் கால எல்லையில் விண்கலத்தில் பயணிப்போர் இறக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில் Bone Loss (எலும்பு பலவீனமாதல்), Cabin Fever (விண்கலத்தினுள் இருப்பதனால் வரும் நோய்), Cosmic Radiation (கதிர் வீச்சு) ஆகியவற்றிலிருந்து இவர்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும். பிரயாணம் செய்யும் போது 26 மாதங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் அடுத்த விண்கலம் வர இன்னும் 26 மாதங்கள் எடுக்கும். அடுத்த விண்கலத்தில் வருவோர் தங்களுக்குரிய பொருட்களை எடுத்து வருவதால் முதலில் போனவர்களுக்குத் தேவையான பொருட்களை தங்களுடன் எடுத்துப் போக முடியாது. எனவே செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறினால் தொடர்ந்தும் பூமியின் உதவியை எதிர்பார்க்காமல் வாழ வேண்டும்.
(2) எரிபொருள்:
பூமியும் செவ்வாயும் ஒரே திசையில் சுற்றி அருகருகே வந்தாலும் பூமியும் செவ்வாயும் நிலைத்து ஒரே இடத்தில் இருப்பவை அல்ல. தன்னையும் சுற்றி, தனக்குரிய பாதையில் சூரியனையும் சுற்றும் பூமியிலிருந்து தன்னையும் சுற்றி தனக்குரிய வேறு பாதையில் சூரியனைச் சுற்றும் செவ்வாய்க்குக் குறி வைப்பது எவ்வளவு கஷ்டம்? எனவே சரியான தருணம் பார்த்து ஒரு விண்கலத்தை ஏவுதல் என்பது இலகு அல்ல. எனவே விஞ்ஞானிகள் விண்கலத்திற்கு என்று ஒரு சுற்றுப் பாதையை அமைக்கிறார்கள். முதலில் பூமியின் சுற்றுப் பாதையில் (Orbit of Earth) தனது பாதையைத் தொடங்கும் ஒரு விண்கலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதையை மாற்றித் தனது பாதையில் பயணித்து செவ்வாய் கிரகத்தின் பாதையுடன் (Orbit of Mars) ஊடறுத்துக் கலந்து செவ்வாய் கிரகம் நெருங்கும் போது அதில் தரை இறக்கப்படுகிறது அல்லது அதைச் சுற்றி வருகிறது.
பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை ஏவுதல் நேரடியாக நடைபெறுவதில்லை. ஏனெனில் இதற்கு நிறைய எரிபொருள் விரயமாகும். செவ்வாய் கிரகம் எதிர்காலத்தில் இந்த இடத்துக்கு வரும் என்றதைத் துல்லியமாக் கணக்கிட்டு அந்த இடத்தை நோக்கித் தான் ஒரு விண்கலம் செலுத்தப்படுகிறது. ஒரு விண்கலம் ஒரு கட்டத்தில் பூமியினுடைய ஈர்ப்பை (Earth's Gravity) விட்டு வெளியேறித் தனது பாதையின் ஈர்ப்பை அடைய வேண்டும். எனவே ஒரு விண்கலம் ஏவப்படும் போது பூமியின் சுழற்சிக்கு (Spin of the Earth) ஏற்ப ஏவப்படுகிறது. இதனால் அது பூமியின் ஈர்ப்பைக் கடக்கும் போது அது பூமியின் சுழற்சியை உபயோகித்து வேகத்தை அதிகரித்து குறைந்த அளவு எரிபொருளை உபயோகப்படுத்துகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, கணக்கிட்டு ஒரு விண்கலம் ஏவப்படும் நாள் குறிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மனிதர்கள் செவ்வாயில் வசிக்கப் போவதானால் மிகப் பெரிதான ஒரு விண்கலம் தேவை. அதற்கு நிறைய எரிபொருள் தேவை.
இப்போது சாத்தியம் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் விஞ்ஞானம் இந்த இரண்டு தடைகளையும் இலகுவாக்கலாம்!!

மனிதர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்?

இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரு தாய் மக்களே.
அந்தத் தாய் யாரென்று அறிந்தால் மிகவும் ஆச்சரியமும், பெருமையும் கொள்வீர்கள். அந்தத் தாய் 'நட்சத்திரம்' தான். நம்மில் பலர் நட்சத்திரம் (ஸ்டார்) ஆக வேண்டும் என்று கனவு கண்டிருப்பார்கள். அவர்களுக்கு, தாங்கள் நட்சத்திரத்தின் குழந்தைகள்தான் என்ற செய்தி பெருமையாகத்தானே இருக்கும்.
நாம் அனைவரும் எப்படி நட்சத்திரத்திலிருந்து வந்தோம் என்று விளக்கமாக பார்ப்போம்.
உயிர்கள் உருவாக பல தனிமங்கள் தேவை. மனிதர்களாகிய நமக்கு ரத்தம் சுத்தமாவதற்கு வேண்டிய ஆக்சிஜென், எலும்பின் உறுதிக்குத் தேவையான கால்சியம், ரத்தத்திற்கு வேண்டிய இரும்புச் சத்து, மற்றும் கார்பன், நைட்ரஜன், பாஸ்பரஸ் என்று தனிமங்களும், கூடவே உப்பில் உள்ள சோடியம் மற்றும் பொட்டசியம், மக்னிசியம் போன்ற பல தனிமங்கள் தேவை. அவை இல்லை என்றால் உயிர் வாழ இயலாது என்பது அனைவர்க்கும் தெரியும்.
மேலும் தங்கம், வெள்ளி, அலுமினியம் போன்ற பல தனிமங்கள் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளன.

இந்தத் தனிமங்களை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி அறிவியலாளர்கள் ஓர் அட்டவணையை ஏற்படுத்தியுள்ளனர் (PERIODIC TABLE). இந்தத் தனிமங்களைப் பற்றி ஆராய்ந்து அதன் அமைப்பு, குணங்கள், பயன்கள் போன்றவற்றை அறிந்து, அவைகளைப் பயன்படுத்தி, நாம் வாழ்வை இனிதே நடத்த அறிவியலாளர்கள் வழி வகுத்திருக்கிறார்கள்.
மாரடைப்பு வந்தால் உயிருக்குப் போராடும் ஒருவருக்குத் தேவையான, ஆக்சிஜன் மற்றும் பல மருந்துகளைக் கொடுத்து, பாசக்கயிறைப் போட்டு இழுத்துக் கொண்டிருக்கும் எமனிடம் போராடி, அந்த பாசக்கயிறை அறுத்து, போய்க்கொண்டிருந்த உயிரை மீண்டும் கொண்டு வர உதவுவார் மருத்துவர்.
ஒவ்வொரு தனிமங்களின் குணங்களை வெகு நாள் ஆய்ந்து அறிந்த அறிவியலாளர்கள் பணி தான் அவர்களுக்கு உதவியாயிருக்கின்றது.
இந்த தனிமங்கள் எல்லாம் பூமியில் கிடைக்கின்றன. சரி பூமிக்கு இவை எப்படி வந்தன?
நட்சத்திரங்களில் தான் முதலில் இவை எல்லாம் உருவாகின என்று அறிவியலாளர்கள் சொல்லுகிறார்கள். ஏன் பூமியில் நாம் காணும் அனைத்துப் பொருட்களும் நட்சத்திரத்திலிருந்துதான் உருவாயின. நட்சத்திரத்திலிருந்து அவை பூமிக்கு எப்படி வந்தன?
நம் சூரியன் என்ற நட்சத்திரத்தில் இது போன்ற பொருட்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது. ஆனால் நம் சூரிய‌னில் உருவாகும் பொருட்கள் நமக்குக் கிடைக்காது. நம்முடைய சூரியனுடைய தாத்தாவாகிய முதல் தலைமுறை நட்சத்திரம் உருவாக்கியதை நாம் அனுபவிக்கிறோம். முன்றாம் தலைமுறையைச் சேர்ந்த நமது சூரியன் உருவாக்கும் பொருட்கள் நமக்குப் பின்னால் வரும் தலைமுறைக்கும், உயிர்களுக்குத்தான் உபயோகமாகும்.
எப்படி என்று பார்க்கலாமா?
சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி, ஒரு பலூனைப் போல விரிவடைந்த இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இரண்டே இரண்டு தனிமங்கள் தான் இருந்தது. அவை ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்(சுமார் 75 சதவீதம் ஹைட்ரஜன், 25 சதவீதம் ஹீலியம்). வாயுக்களான இவை இரண்டுமல்லாமல் நாம் காணும் நட்சத்திரங்கள், கோள்கள் எதுவுமே, ஏன் எந்த தூசும் கூட பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் இல்லை.
ஆச்சரியம் என்னவென்றால் அந்த இரண்டு தனிமங்கள் (வாயுக்கள்) தான் இப்போது நாம் காணும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், அதைச் சுற்றிவரும் கோள்களும், இந்த பூமியும், அதில் நாம் காணும் அனைத்துப் பொருட்களுமாக உருமாறின.
எப்படி?
பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் தோன்றிய ஹைட்ரஜன் அணுக்களின் ஈர்ப்புவிசையினால் ஏற்பட்ட பிணைப்பினால் தான் பிரபஞ்சத்தின் முதல் தலைமுறை நட்சத்திரங்கள் உருவாகின. பல கோடி வெப்பத்தைக் கொண்ட இந்த நட்சத்திரத்தின் உள்ளே, அந்த வெப்பத்தினால் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் என்ற தனிமம் புதிதாக உருவாகியது. இந்த இணைப்பில் தோன்றும் ஆற்றல் தான் ஒளியாகிறது. நட்சத்திரங்களுக்குள்ளே தொடர்ந்து பல கோடி ஆண்டுகளாக இந்த இணைப்பு நடந்துகொண்டே இருக்கின்றது.
நட்சத்திரதிற்குள்ளே இரண்டு ஹைட்ரஜன் இணைந்து ஒரு ஹீலியம் அணு புதிதாக உருவாவதுபோல, கூடவே இன்னும் பல அணுச்சேர்க்கைகள் நடக்கின்றன. புதிதாக உண்டான இரண்டு ஹீலியம் அணுக்கள் இணைந்து 'பெரிலியம்' என்ற தனிமம் உண்டாகிறது. அதோடு நிற்காமல் ஒரு ஹீலியம் அணுவும் ஒரு பெரிலியம் அணுவும் சேர்ந்து உயிர்களுக்குத் தேவையான முக்கியமான தனிமம் 'கார்பன்' உருவாகிறது.
புதிதாக தோன்றிய அணுக்களின் இணைப்பு மேலும் தொடர்கிறது. இரண்டு பெரிலியம் அணுக்கள் இணைந்து நம் உயிரின் ஆதாரமான பிராணவாயு (OXYGEN) உருவாகிறது. இரண்டு கார்பன் அணுக்கள் இணைந்து ஒரு 'மெக்னீசியம்' அணு உருவாகிறது. இப்படி பற்பல அணுச்சேர்க்கைகள் நடந்து ஒன்று, இரண்டு என்று தனிமங்களை வரிசைப்படுத்திய அட்டவணையில் உள்ள 26 என்ற எண் கொண்ட இரும்பு வரை நட்சத்திரங்களுக்கு உள்ளே பெருமளவில் உற்பத்தியாகிறது.
நட்சத்திரங்களுக்குள் உள்ள சுமார் கோடி டிகிரி வெப்பத்தில் தான் இந்த அணுச்சேர்க்கைகள் நடக்க முடிந்தது. அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் புதிய தனிமங்களை உண்டாக்கும் பணியில் மனிதன் இறங்கி சில தனிமங்களை உண்டாக்கி வெற்றியும் பெற்றுள்ளான். முன்னதாக பூமியில் உள்ள தனிமங்களிலிருந்து தான் அவை உருவாக்கப்பட்டன. சிறிய அளவில் தான் இவைகளை உண்டு பண்ண முடியும். பெருமளவில் பூமியில் கிடைப்பவை நட்சத்திரங்களில் உற்பத்தியானவை.
தனிமங்களின் அட்டவணையில் இரும்பிற்கு மேல் உள்ள தனிமங்களான தங்கம், வெள்ளி, யூரேனியம் போன்றவை உண்டாக, நட்சத்திரங்களில் உள்ள வெப்பத்தைக் காட்டிலும் அதிக வெப்பம் தேவை. அதனால் நட்சத்திரங்களுக்குள் தனிமங்கள் உற்பத்தி, மூடப்பட்ட தொழிற்சாலை போல நின்று விடுகிறது.
பிறகு எப்படி அவை உருவாகின?
அந்த முதல் தலைமுறை சூரியன் தன வாழ்நாட்கள் முடிந்தபின் அதிபயங்கரமாக வெடித்துச் சிதறும். பிரபஞ்சத்தில் அது மிக அற்புதமான காட்சியாகும். சூப்பர் நோவா என்று கூறுவார் இதனை. அப்படி வெடிக்கும் போது உண்டாகும் அதிபயங்கர வெப்பத்தில் இரும்பு அணுக்களும் அணுச்சேர்க்கையால் இணைந்து இரும்பிற்கு மேல் அணு எண் கொண்ட யூரேனியம், தங்கம், வெள்ளி போன்ற மற்றெல்லா தனிமங்களும் உண்டாகி, நட்சத்திரம் வெடிக்கும் போது, வாயுக்களாக பிரபஞ்சத்தில் தூக்கி எறியப்பட்டன. பல கோடி மைல்கள் பரந்து விரிந்து கிடக்கும், பார்க்க பரவசமூட்டும் இந்த வாயுக்கூட்டங்களை 'நேபுல்லா' என்றழைப்பர்.
இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டதில் நட்சத்திரத்தில் உருவான எல்லா தனிமங்களுடன், பிரபஞ்சத்தில் ஏற்கனவே உள்ள ஹைட்ரஜன் வாயுவும் கலந்திருக்கும்.
 பிரபஞ்சத்தில் காணும் இந்த நேபுல்லா என்ற வாயுக்கூட்டங்களை காணும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு அந்த வாயுக்கூட்டத்தில் 'நட்சத்திரங்கள்' பிறக்கப் போகின்றன என்று தெரியும்
காரணம் , ஈர்ப்பு விசை தன் பணியை அங்கு துவக்கும். ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றை ஒன்று இழுத்து, வெப்பமும் அடர்த்தியும் அதிகமாகி, புதிய அடுத்த தலைமுறை நட்சத்திரம் (நமது சூரியனைப் போல) உருவாகும். நட்சத்திரத்தின் தோற்றம் ஒரு அதி பயங்கர வெடிப்புடனும், அதிர்வுடனும் நடக்கும். புதிதாக தோன்றிய நட்சத்திரத்தைச் சுற்றி, தூசுகளும், வாயுக்களும் வெடிப்பினால் எறியப்பட்டு அவைகள் அந்த நட்சத்திரத்தை சுற்ற ஆரம்பிக்கும். அவைகளும் ஈர்ப்பு விசையால் இணைந்து, முதலில் சிறு சிறு பாறைகளாக உருவாகி, அந்தப் பாறைகள் மேலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, அந்த நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கோள்களாக உருவாகும். அந்த தூசுகளிலும், வாயுக்களிலும் தான் எல்லா தனிமங்களும் உள்ளனவே. அதனால்தான் அந்தக் கோள்களில் ஒன்றான நமது பூமியிலும் அனைத்து தனிமங்களும் கிடைக்கின்றன.
சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் தவிர மற்ற பாறைகளிலும் (ASTEROID) இந்த தனிமங்கள் இருக்கும். ஏனென்றால் சூரியன் உருவாகும்போது உண்டான கோள்களைப்போல தோன்றியதுதான் அந்த பாறைகளும். நமது சூரிய குடும்பத்தைச் சுற்றிவரும் அந்தப் பாறைகளில் தங்கம் உட்பட பல தனிமங்கள் இருப்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்தில் ஒரு கோள் கண்டுபிடிக்கப் பட்டது. பூமியை விட இரண்டு மடங்கு பெரிய அந்தக் கோள் முழுவதும் வைரங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஒருதடவை சென்று வந்தால், உலகத்தின் முதல் கோடீஸ்வரன் ஆகிவிடலாம். சிக்கல் என்னவென்றால் அந்த கோள் நாற்பது ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. எப்படியாவது முயற்சி செய்து அங்கே போய் சேர்ந்து விடலாம் என்று நினைப்போருக்கு ஒரு மோசமான தகவல் என்னவென்றால் அங்கு வெப்பம் சுமார் 4000 டிகிரி வரை உள்ளது என்பதுதான்.

பூமியுடன் ஒத்துப் போவதா வேண்டாமா?

பூமியுடன் ஒத்துப் போவதா வேண்டாமா?


 
நமக்கு லீப் வருஷம் தெரியும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாளை சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் நாம் அவ்வப்போது ஒரு நாளுடன் ஒரு வினாடியை சேர்த்துக் கொண்டு வந்திருக்கிறோம் என்பது பலருக்கும் தெரியாது. இப்படிச் சேர்க்கப்படும் வினாடியானது லீப் வினாடி என்று குறிப்பிடப்படுகிறது.

இப்படி ஒரு வினாடியை தொடர்ந்து சேர்த்துக் கொள்வதா வேண்டாமா என்பது உலக அளவில் பிரச்சினையாகியிருக்கிறது. சேர்த்துக் கொள்வதால் பிரச்சினை ஏற்படுகிறது. ஆகவே "கூடாது, இதை நிறுத்த வேண்டும்" என்று அமெரிக்கா தலைமையிலான நாடுகள் எதிர்க்கின்றன. ஒரு வினாடியை சேர்த்துக் கொள்வதை நீடிக்க வேண்டும் என்று பிரிட்டன் தலைமையிலான நாடுகள் வற்புறுத்துகின்றன.
” நான் இப்போ கொஞ்சம் ஸ்லோ”
அண்மையில் ஐரோப்பாவில் ஜெனீவா நகரில் சர்வதேச தகவல் தொடர்பு யூனியன்(ITU) கூட்டத்தில் இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டது. இப்பிரச்சினையில் முடிவு எடுக்கும் அதிகாரம் இந்த அமைப்புக்கு உள்ளது. இந்த அமைப்பில் இந்தியா உட்பட 191 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. எனினும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. 2015 ஆம் கூட்டத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஒரு வினாடிப் பிரச்சினையானது ஒரு நாள் என்பதுடன் சம்பந்தப்பட்டது. பூமி தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிப்பதையே நாம் ஒரு நாள் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு 24 மணி நேரம் ஆவதாகவும் வைத்துக் கொண்டிருக்கிறோம். 24 மணி நேரம் என்பதை வினாடிகளாக மாற்றுவோம். அப்படிச் செய்தால் ஒரு நாள் என்பது 86,400 வினாடிகளுக்குச் சமம்.
ITU தலைமையகம்
பூமி மட்டும் தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிக்க மிகச் சரியாக 86,400 வினாடிகளை எடுத்துக் கொண்டால் பிரச்சினை இராது. ஆனால் பூமி இப்போது சராசரியாக 86,400.002 வினாடிகளை எடுத்துக் கொள்கிறது. அதாவது பூமியின் சுழற்சி வேகம் சற்றே குறைந்துள்ளது. பூகம்பங்கள், சூரியனின் ஈர்ப்பு சக்தி, சந்திரனின்  ஈர்ப்பு சக்தி என பல காரணங்கள் இதற்கு உண்டு. பூமியின் அச்சில் ஏற்படும் நடுக்கமும் ஒரு காரணம்.

இந்த வித்தியாசத்தை அவ்வப்போது சரிக்கட்டாவிட்டால் பிரச்சினை ஏற்படும். ஒருவரின் கடிகாரம் தினமும் 2 வினாடி மெதுவாக ஓடுவதாக வைத்துக் கொள்வோம். ஒரு மாதம் கழித்துப் பார்த்தால் அந்த கடிகாரம் காட்டும் நேரம் ஒரு நிமிஷம் குறைவானதாக இருக்கும். ஆகவே அவர் மாதக் கடைசியில் தனது கடிகாரத்தில் நிமிஷம் காட்டும் முள்ளை ஒரு நிமிஷம் முன்னே தள்ளி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.  இப்போதுள்ள பிரச்சினை இப்படியாகத் தான் உள்ளது.

உலகம் முழுவதற்கும் இப்போது மிகச் சரியான நேரம் என்பது ஒன்று உண்டு. அது அணுக் கடிகாரம் ஆகும். நாம் பின்பற்றுகின்ற அந்த நேரம் Civil  Time என்று குறிப்பிடப்படுகிறது. பல அணுக்கடிகாரங்களின் அடிப்படையில் அது நிர்ணயிக்கப்படுகிறது. அந்த நேரமும் பூமியின் சுழற்சிப்படியான நேரமும் ஒத்துப் போக வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்படுகிறது. அதாவது நாம் பூமியுடன் ஒத்துப் போகிறோம். பூமியுடன் இப்படி ஒத்துப் போவதா வேண்டாமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி.

அமெரிக்காவைப் பொருத்தவரையில் அவ்வப்போது ஒரு வினாடியை சேர்த்துக் கொள்வதானது நடைமுறையில் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் கருதுகிறது. ஒரு வினாடியை அவ்வப்போது சேர்ப்பதால் விமான சர்வீஸ் நேர ஏற்பாடு, பங்கு மார்க்கெட்டுகளின் இயக்கம், தகவல் தொடர்பு ஏற்பாடுகள் கம்ப்யூட்டர் சிஸ்டம் முதலியவற்றில் பிரச்சினை உண்டாவதாக அது கூறுகிறது.

ஆகவே அவ்வப்போது ஒரு வினாடியைச் சேர்த்துக் கொள்கின்ற ஏற்பாடு கூடாது என்று அது கூறுகிறது. அமெரிக்காவின் கருத்தை பிரான்ஸ், ஜப்பான், மெக்சிகோ ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன. இந்தியாவும் லீப் வினாடி ஏற்பாடு தேவையில்லை என்று கூறுகிறது. லீப் வினாடி ஏற்பாடு தொடர்ந்து இருக்க வேண்டும் என பிரிட்டன், சீனா, ரஷியா முதலான நாடுகள் கூறுகின்றன.

லீப் வினாடியைக் கைவிட்டு விட வேண்டும் என்ற யோசனை இப்போது கிளம்பியது அல்ல. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இது விவாதிக்கப்பட்டு வருகிறது.

லீப் வினாடியைச் சேர்க்கும் ஏற்பாடு இல்லாமல் போனால் கால வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே போகும். 500 ஆண்டுகளில் இது ஒரு மணி நேரமாக அதிகரித்து விடும். பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் அணுக்கடிகாரங்கள் காலை என்று காடடும். ஆனால் அப்போது சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கும்.
1972 ஆம் ஆண்டிலிருந்து நாம் இவ்விதம் அவ்வப்போது ஒரு வினாடியைச் சேர்த்துக் கொள்ளும் முறையைப் பின்பற்றி வருகிறோம். பொதுவில் டிசம்பர் 31 ஆம் தேதி அல்லது ஜூன் 30 ஆம் தேதி இவ்விதம் ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்படுகிறது. 1972 ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு தேதிகளிலும் இது சேர்த்துக் கொள்ளப்பட்டது . கடந்த 40 ஆண்டுகளில் இவ்விதம் 24 தடவை ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்பட்டது.
 அமெரிக்காவில் உள்ள அணுக் கடிகாரம்
பூமி சில சமயம் விசித்திரமாகச் செயல்பட்டு அதன் சுழற்சி வேகம் தற்காலிகமாக சில மில்லி செகண்ட் அதிகரிப்பது உண்டு. உதாரணமாக 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானுக்கு கிழக்கே கடலுக்கு அடியில் கடும் பூகம்பம் ஏற்பட்ட போது பூமியின் சுழற்சி வேகம் 1.8 மில்லி செகண்ட் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது (இந்த கடலடி பூகம்பம் காரணமாகவே கடும் சுனாமி ஏற்பட்டு புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது).

1999 ஆம் ஆண்டிலிருந்து 2011 வரையிலான காலத்தில், 2005 மற்றும் 2008 ஆண்டுகளில் மட்டுமே ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்பட்டது.

சர்வதேச தகவல் தொடர்பு யூனியன் கூட்டத்தில் இப்போதைக்கு முடிவு எதுவும் எடுக்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டதால் வருகிற ஜூன் 30 ஆம் தேதி வழக்கம் போல ஒரு வினாடி சேர்த்துக் கொள்ளப்படும்

புளூட்டோ

புளூட்டோவை நோக்கி: ஆறு ஆண்டுகளாகப் பயணம்



மனிதன் செலுத்திய விண்கலம் ஒன்று கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக அதிவேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அது தனது இலக்கை எட்டுவதற்கு இன்னும் மூன்றரை ஆண்டுகள் ஆகும். நியூ ஹொரைசன்ஸ் (New Horizons) எனப்படும் அந்த ஆளில்லா விண்கலம் புளூட்டோவை (Pluto) நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த விண்கலத்தை செலுத்திய அமெரிக்க நாஸா(NASA) விண்வெளி அமைப்பானது இடைக்கால அறிக்கை போல அந்த விண்கலம் இப்போது எங்கே உள்ளது என்பது பற்றி அண்மையில் தெரிவித்தது.

அந்த விண்கலம் இப்போது ஒரு நாளில் பத்து லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கிறது. அவ்வளவு வேகத்தில் சென்றாலும் புளூட்டோவை நெருங்க இன்னும் மூன்றரை ஆண்டுகள் ஆகும். இதிலிருந்து புளூட்டோ எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

  நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் செல்லும் பாதை.
இன்னும் செல்ல வேண்டிய தூரம் சிவப்பு நிறத்தில் உள்ளது.
(இடம் கருதி இப்படத்தில் புதன், சுக்கிரன், செவ்வாய் 
கிரகங்கள் குறிப்பிடப்படவில்லை)
புளூட்டோ சுமார் 591 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் சூரியன் பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பல சமயங்களிலும் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை ஓர் அலகாகக் கொள்வது உண்டு. இத்தூரத்தை ஒரு வான் அலகு (Astronomical Unit) என்று நிபுணர்கள் கூறுவர். இந்த கணக்கின்படி புளூட்டோ ஒரு சமயம் 48 கோடி வான் அலகு தூரத்திலும் வேறு சில சமயங்களில் 29 வான் அலகு தூரத்திலும் இருக்கிறது. புளூட்டோவின் சுற்றுப்பாதை நீள் வட்டமாக இருப்பதே அதற்குக் காரணம். புளூட்டோ ஒரு தடவை சூரியனை சுற்றி முடிக்க 248 ஆண்டுகள் ஆகின்றன.

புளூட்டோ சூரிய மண்டலத்தின் கடைசி ஸ்டேஷன். அதைத் தாண்டினால் நாம் அனேகமாக எல்லையற்ற விண்வெளியில் காலடி எடுத்து வைப்பவர்களாகி விடுவோம். சூரிய மண்டல எல்லையில் உள்ள ஒன்று எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்காகத் தான் 2006 ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தைச் செலுத்தினார்கள். அது 2015 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் புளூட்டோவை நெருங்கி அதைப் படம் பிடித்து அனுப்புவதுடன் புளூட்டோ பற்றிய தகவலக்ளையும் அனுப்பும்.

யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்களை நெருங்கி ஆராய்வதற்கு கடந்த கால்த்தில் பயனீர்(Pioneer), வாயேஜர்(Voyager) ஆகிய ஆளில்லா விண்கலங்கள் செலுத்தப்பட்டன. அந்த விண்கலங்கள் இந்த இரு கிரகங்களையும் நெருங்கிச் சென்று அவை பற்றிய தகவலகளையும் ப்டங்களையும் அனுப்பின. புளூட்டோ ஒன்று தான் மீதி இருந்தது.

புளூட்டோ சமாச்சாரம் ஒரு சோகக் கதை. சூரிய மண்டலத்தில் நமது அண்டை வீடு என்று சொல்லத்தக்க செவ்வாயைத் தாண்டிச் சென்றால் இருக்கக்கூடிய வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்குமே ராட்சதக் கிரகங்கள். ஆனால் சூரிய மண்டலத்தின் வெளிக் கோடியில் காவல்காரன் போல இருக்கின்ற புளூட்டோ, புதன் கிரகத்தைக் காட்டிலும் சிறியது. எனினும் புளூட்டோவை நான்கு குட்டி சந்திரன்கள் சுற்றி வருகின்றன.

புளூட்டோவும் மற்ற சில கிரகங்களும்
சூரிய மண்டலத்தில் புளூட்டோவையும் சேர்த்து ஒன்பது கிரகங்கள் உள்ளதாகக் கடந்த பல ஆண்டுகளாகப் பள்ளிகளில் போதிக்கப்பட்டு வந்தது. விஞ்ஞானிகளும் அவ்வாறே கூறி வந்தனர்.

ஆனால் 2006 ல் நடந்த சர்வதேச வானவியல் நிபுணர்கள் சங்க மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு அதன் சிறிய வடிவம் காரணமல்ல. ஒரு கிரகம் என்ற அந்தஸ்து இருக்க வேண்டுமானால் அது தனது வட்டாரத்தில் உள்ள வேறு சிறிய வான் பொருட்கள் இல்லாதபடி அவற்றை ஈர்த்து அந்த வட்டாரத்தில் தனது ஆளுமையை நிலை நாட்டியிருக்க வேண்டும். அந்த அளவுகோலின்படி புளூட்டோ கிரகம் அல்ல என்று முடிவு செய்யப்பட்டது.

புளூட்டோ.
ஹப்புள் டெலஸ்கோப் எடுத்த படம்
இதை வேறு விதமாகச் சொல்வதானால் ஒரு பேட்டையில் ‘தாதா’ ஒருவர் தனது போட்டியாளர்களை ஒடுக்கி தனது அதிகாரத்தை நிலை நாட்டியிருக்க வேண்டும். அப்படியானவரே ‘தாதா’ என குற்றக் கும்பல் வட்டாரத்தினரால் மதிக்கப்படுவார்.

புளூட்டோ இருக்கின்ற வட்டாரத்தில் பல ‘சிறு கோள்கள்’ உள்ளன. அந்த வகையில் புளூட்டோவும் ‘சிறு கோள்’ என்று தீர்மானிக்கப்பட்டது. எனினும் புளூட்டோவை கிரகம் என்ற அந்தஸ்திலிருந்து அகற்றியது சரியல்ல என்று கருதுவோர் நிறையவே உள்ளனர். நியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தை அனுப்பிய குழுவினர் புளூட்டோ ஒரு கிரகம் தான் என்று கருதுகின்றனர்.

புளூட்டோவை கிளைட் டாம்பா (Clyde Tombaugh) என்ற அமெரிக்க வானவியல் விஞ்ஞானி நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள வான் ஆராய்ச்சிக்கூடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது 1930 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அதனால் நியூ மெக்சிகோ மாகாண சட்ட மன்றம் புளூட்டோ ஒரு கிரகம் தான் என்று அடித்துக் கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. டாம்பா இல்லினாய் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் இல்லினாய் மாகாண சட்ட மன்றமும் புளூட்டோ ஒரு கிரகம் தான் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கலிபோர்னியா மாகாண சட்ட ம்ன்றமும் புளூட்டோவுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியது.

புளூட்டோவுக்கு ஆதரவாக இயக்கம் நீடிக்கிறது
புளூட்டோவுக்கு கிரக அந்தஸ்து கிடையாது என்று சர்வதேச வானவியல் யூனியன் (International Astronomical Union) 2006 ஆம் ஆண்டில் எடுத்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளதற்குக் காரணம் உண்டு. இந்த யூனியனில் மொத்தம் 9000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2700 பேர் தான் மாநாட்டில் பங்கு கொண்டனர். புளூட்டோவை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அரங்கில் 424 பேர் தான் இருந்தன்ர். இக்காரணத்தாலும் புளூட்டோ பற்றிய தீர்மானம் குறித்து இன்னமும் சர்ச்சை நிலவுகிறது. புளூட்டோவுக்கு மீண்டும் கிரக அந்தஸ்து கிடைக்கச் செய்ய இன்னமும் இயக்கம் நடந்து வருகிறது.

கிரேக்க புராணப்படி புளூட்டோ பாதாள உலகின் மன்னன். புளூட்டோ மரணத்தின் தேவன் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன.