Saturday, November 9, 2013

இலியட்

இலியட்






மகாகவி ஹோமரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இலியட் காவியத்தை ஐரோப்பியப் பண்பாட்டின் அடிப்படைகளைத் தீர்மானித்த பெருங்காப்பியங்களில் ஒன்றாகச் சொல்லலாம். கலைக்களஞ்சியங்களில் பெரும்பாலும் ஹோமரைப்பற்றி அதிகமாக ஏதுமிருப்பதில்லை. உதாரணமாக மெரியம் வெப்ஸ்டரின் இலக்கியக்கலைக்களஞ்சியம் ஹோமரைப்பறி அனேகமாக ஏதும் தெரியாது , தெரிந்த செய்திகளும் ஊகங்களே என்றுதான் சொல்கிறது. கிரேக்கத்தின் ஹெலனிய காலகட்டத்தில் முக்கியமானவையாகக் கருதப்பட்ட நான்கு குலங்களில் ஒன்றாகிய அயோனிய குலத்தைச் சேர்ந்தவராக அவர் இருக்கலாம். அவரது தாய்மொழி அயோனியம்.
கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரோடடஸ் தனக்கு நானூறு வருடம் முன்பு வாழ்ந்தவர் என ஹோமரைச் சொல்கிறார். ஆகவே கிமு ஒன்பதாம் நூற்றாண்டில் ஹோமர் வாழ்ந்திருக்கலாமென்பது ஓர் ஊகம். ஹோமரின் பாடுபொருளான டிரோஜன் போர் கிமு பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம். ஹோமர், கண் தெரியாதவர் என்ற வாய்மொழி மரபுக்கூற்று இருக்கிறது. புராதன கிரேக்க சலவைக்கல் சிலைகள் சிலவற்றில் கண் தெரியாதவராக அவரைச் சித்தரித்துள்ள வடிவங்கள் கிடைத்துள்ளன.
ஹோமரின் பிறப்பு, வாழ்க்கை பற்றிப் பல்வேறு தகவல்கள் கிடைத்தாலும்கூட அவர் ஆசியாமைனர் பகுதியில் பிறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அந்நிலப்பகுதி இன்று துருக்கிய எல்லைக்குள் இருக்கிறது. அவரைப்பற்றிய ஆய்வுகள் ஏராளமாக நடந்தபடியே இருக்கின்றன. ஹோமர் எழுதிய மொழி, கிரேக்கமொழியின் ஒரு துணைமொழியாக இருந்த அயோனிய மொழி. இலியட் , ஒடிஸி என்ற இரு காவியங்களை அவர் எழுதியதாக மரபு சொல்கிறது. இவற்றில் இலியட் காலத்தால் முந்தையது. அது அவரது ஆக்கம். ஒடிஸி அவரது பாதிப்பால் உருவானதாகக்கூட இருக்கலாம் என வெப்ஸ்டர் கலைக்களஞ்சியம் சொல்கிறது.
அரிஸ்டாடிலால் அவரது காவியஇயல் நூலில் காவியக் கட்டுமானத்தை உருவாக்கிய முன்னோடியாகவும் முதன்மைக்கவிஞராகவும் ஹோமர் முன்வைக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை ஐரோப்பிய மொழிக்குலத்தின் முதன்மைக் காவியகர்த்தராகவே அவர் கருதப்படுகிறார்.

வீர கதைப்பாடகர்கள்

ஹோமர் ஒரு தொழில்முறை வீரகதைப்பாடகர் [Bard] என்று சொல்லப்படுகிறது. வீரர்களின் கதைகளை ஊர் ஊராகப் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்துவந்தவர் அவர். அந்த மரபு வீரயுகம் முடிவுக்கு வந்தபின்னரும் நெடுங்காலம் நீடித்தது. வீரயுகத்தில் இந்தப் பாடகர்கள் சமூகப்படிநிலையில் இரண்டாமிடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு சமூக மரியாதையும் இருந்தது. அவர்கள் பொய்யாகப் பாடமாட்டார்கள் என்ற நம்பிக்கையும். ஆகவே அவர்களால் பாடப்படுவதே வீரனின் வெற்றி என்ற எண்ணமும் இருந்திருக்கிறது. ஹோமர் அவரது காவியத்தை எழுதிவைக்கவில்லை, அவர் வாய்மொழிப்பாடகர் என்றும் நெடுங்காலம் அவரது காவியம் வாய்மொழிமரபில் குரு – சீட முறைப்படி பாடப்பட்டு பின்னர் எப்போதோ எழுதப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
சமஸ்கிருத காவியமரபில் இதற்கிணையாகச் சொல்லப்படவேண்டியவர்கள் சூதர்கள். இவர்கள் தொழில்முறை வீரகதைப்பாடகர்கள் என்று சொல்லலாம்.மகாபாரதத்தில் இவர்கள் குதிரையைப் பார்த்துக்கொள்பவர்களாகவும், தேரோட்டிகளாகவும் இருந்திருக்கிறார்கள். பிறப்பால் சூத்திர ஜாதியைச் சேர்ந்தவர்கள். வீரர்களின் நினைவைப் பாடி சமூகஞாபகத்தில் நிலைநிறுத்துவது இவர்களின் வழக்கம். மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் ராமன் அர்ஜுனன் போன்ற வீரர்கள் தங்களுக்கு வரும் மிகக்கீழ்நிலையாக ‘என்னைச் சூதர்கள் பாடாமல் ஒழிவார்களாக’ என்று சொல்வதைக் காணலாம். கர்ணன் சூதனாகிய தேரோட்டியின் மகன் என்பதனால் அவனுக்கு ஆயுதமேந்தும் உரிமை இல்லை என்று மறுக்கப்பட்டதைப்பற்றிய குறிப்பு வருகிறது. சூதர்களுக்கு என ஒரு நாடு கிடையாது. எல்லா நாடுகளுக்கும் இவர்கள் செல்லலாம். அதன்மூலமே செய்தி பரவுகிறது.
அதே சமயம் மகாபாரதத்திலேயே சூதர்கள் ரிஷிகளாக இருந்த தகவலும் வருகிறது.நைமிசாரண்யத்தில் வியாசமகரிஷியிடமிருந்து பெற்ற புராணங்களைப் பிற ரிஷிகளுக்குச் சொன்ன சூத ரிஷி ஓர் உதாரணம். இவர் வியாசரின் சீடர் என்றும் லோமஹர்ஷன் என்ற இன்னொரு ரிஷியின் மகன் என்றும் தேவிபாகவதக் குறிப்பு இருக்கிறது. அதாவது ஒரு சூதன் தன் கல்வியின் பெருமையால் அடுத்த கட்டத்தை, ரிஷி என்ற கௌரவத்தை அடைந்திருக்கிறார் என்று சொல்லலாம்.
தமிழில் இதற்கிணையானவர்கள் பாணர்கள். சங்க இலக்கியத்தில் பாணர்கள் பற்றி வரும் குறிப்புகளைக் கொண்டு இவ்வாறு அடையாளப்படுத்தலாம். இவர்கள் ஒரு தனி சாதி. ஊர்கள் தோறும் சென்று வீரர்களையும் மன்னர்களையும் புகழ்ந்து பாடுவது தொழில். இவர்களின் துணைவி விறலி அல்லது பாடினி. அவள் நடனமும் ஆடக்கூடியவள். நாடு என்ற எல்லைகள் இல்லாத சுதந்திரமான கலைஞர்களாக இவர்கள் இருந்தார்கள். பொதுவான சமூக ஒழுக்கநெறிகளை இவர்கள் பேணவில்லை. பெண்களும் மது அருந்துவது போன்றவற்றை இயல்பாகச் செய்திருக்கிறார்கள். ‘என்னைப் பாணர்கள் பாடாதொழிக’ என்ற வரியையே இங்குள்ள வீரர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
இவர்களின் சமூகஇடம் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. நற்றிணை போன்ற ஆரம்பகால நூல்களில் இவர்கள் மரியாதையுடன் சொல்லப்படுகிறார்கள். மன்னர்கள் இவர்களை மரியாதையுடன் வரவேற்கிறார்கள். கலித்தொகை காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு காமதூதனாக இவர்கள் இருந்திருக்கிறார்கள். மருதத்திணையில் தலைவி இவர்களை அப்படி வசைபாடுகிறாள். சங்கம் மருவிய காலகட்டத்தில், அனேகமாகக் களப்பிரர் காலகட்டத்தில், இவர்கள் கீழ்நிலைச் சாதிகளாக ஆனார்கள். பக்தி காலகட்டத்தில் இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களாக இருந்ததை நீலகண்ட யாழ்ப்பாணர் கதைமூலம் அறிகிறோம்.
அபிதானசிந்தாமணியில் பாணர்களைப்பற்றிய தகவல் இவ்வாறு உள்ளது. இவர்கள் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் என மூன்றுவகை [அதாவது பாடகர், யாழ் வாசிப்பவர், பறை வாசிப்பவர் என மூன்றும் மூன்று உபசாதிகளாக ஆகிவிட்டிருக்கின்றன!] திருநெல்வேலி முதலிய பகுதிகளில் இவர்கள் தையல் தைத்து வாழ்கிறார்கள். பழங்காலத்தில் இவர்கள் அரசர்களைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்தார்கள். தற்காலத்திலும்கூட இவர்களில் சிலர் கூத்து ஆடி வாழ்கிறார்கள். இவர்களில் சிறந்த சிவனடியார்களும் இருந்தார்கள். அவர்கள் பாணபத்திரர், நீலகண்டயாழ்ப்பாணர்.
ஹோமரை நமது சூதர்களின், பாணர்களின் மரபில் வைத்துப் பார்க்கலாம். அவர் விழியிழந்தவராக இருந்தமையால் வீரனாகவோ அடிமையாகவோ ஆகாமல் கவிஞராக ஆனார் என்றுகூடக் கொள்ளலாம். வீரயுகத்துக்கு வீரம் என்ற விழுமியத்தை நிலைநாட்டக் கவிஞர்கள் தேவை. ஏனென்றால் வீரத்தின் பரிசு மரணம். மரணத்திற்கும் பிறகு நீடிக்கும் புகழே வீரர்களைக் களத்தை நோக்கிக் கொண்டுசெல்லமுடியும். ஆகவேதான் உலகமெங்கும் வீரயுகம் வீரகதைப்பாடல்களால் ஆனதாக இருக்கிறது.
நாடோடிகளான வீரகதைப்பாடகர்களால் முந்நூறாண்டுகளுக்கும் மேலாகப் பாடப்பட்டு வந்த கதைகளைத் தொகுத்து ஹோமர் தன்னுடைய பெருங்காவியங்களை உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. ராமாயணம் மகாபாரதம் ஆகியவையும் அவ்வாறு உருவாக்கப்பட்டவை என்ற கருத்தை ஆய்வாளர்கள் சொல்வதுண்டு.
தமிழில் பாணர்கள் இருந்ததையும் அவர்கள் வீரர்களைப் பாடியதையும் மட்டும் ஆதாரமாகக் கொண்டு கைலாசபதி சங்க இலக்கிய காலகட்டத்தை வீரயுகம் என்று வகுக்கிறார். சங்கப்பாடல்கள் காட்டும் அந்தக் காலகட்டத்தை அப்படி வகுப்பது ஓரளவு சரிதான். ஆனால் சங்கப்பாடல்களை வீரகதைப்பாடல்கள் என்று சொல்லமுடியாது. அவற்றில் வீரகதை பெரும்பாலும் இல்லை. நேரடியான வீர வரலாறு குறைவாகவே உள்ளது. வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி போன்ற திணைகள் பொதுவாக உருவகக் கதாபாத்திரங்கள் மூலம் வீரம் என்ற விழுமியத்தைப் பேசுபவையாக உள்ளன. பாடாண் திணை மட்டுமே வீரகதைப்பாடலுக்கு ஒத்துவருகிறது
வீரகதைப்பாடல்களின் யுகம் முடிந்தபின் வந்த அந்தப்பாடல்களின் அடுத்தகட்டப் பரிணாமமே நமது புறப்பாடல்கள் என்று நான் நினைக்கிறேன். நேரடியாக வீரனைப் புகழ்ந்து வரலாற்றில் அவன் கதையை நிலைநாட்டுவதில் இருந்து முன்னகர்ந்து, வீரத்தை ஒரு விழுமியமாக ஆக்கி அந்த விழுமியத்தை ஒட்டிப் பொதுவான உருவகக் கதாபாத்திரங்கள் மூலம் நாடகக் கணங்களை உருவாக்கி அவற்றைப் பாணர்கள் நடித்துக்காட்ட ஆரம்பித்திருக்கலாம். அதற்காக உருவாக்கப்பட்டவை இப்பாடல்கள்.
ஆனால் இந்த வீரகதைப்பாடல்களின் முன்வடிவம் நம்முடைய காப்பியங்களில் இருந்துகொண்டேதான் இருந்திருக்கும். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியை ஒருவகையில் ஒரு பெரும் வீரகதைப்பாடல் என்று சொல்லலாம். ஆனால் அதன் நாயகன் வெறும் வீரன் அல்ல. அவன் தத்துவத்தேடலும் கொண்டவனாக, முக்தி நோக்கிச் செல்பவனாக இருக்கிறான்.

குலக்கதையும் வீரகதையும்

தொழில்முறைப்பாடகர்களின் ஆதிவடிவம் குலக்கதைப்பாடகர்களே. அலெக்ஸ் ஹேலியின் ரூட்ஸ் நாவலில் நாம் ஆப்பிரிக்காவில் இருந்த பிரம்மாண்டமான குலக்கதைப்பாடகர்களின் வரிசையைக் காணலாம். அடிமையாகப் பிடிக்கப்பட்டு அமெரிக்கா சென்ற ஒருவனின் நாலாம்தலைமுறை வாரிசு அவர்களின் குலநினைவில் இருந்த சில சொற்கள் வழியாக அந்தப் பூர்வீக நிலத்துக்கு வந்து சேர்ந்தபோது அங்கே குலக்கதைப்பாடகர்களின் பாடலில் கடையாக அந்த மண்ணை விட்டுச்சென்ற அவரது மூதாதையின் பெயர் வரை குலவரிசை தெளிவாகவே அவருக்கு கிடைத்தது.
தொல்சமூகங்களில் இவ்வாறு குலக்கதைப்பாட்டுகள் மூலமே குலமரபு நீண்டகாலமாக நினைவில் நிறுத்தப்பட்டது. அதற்காகவே தொழில்முறைப் பாடகர்கள் உருவானார்கள். அவர்களே பின்னர் வீரகதைப்பாடகர்களாக ஆனார்கள். ஆகவே வீரகதைகள் குலக்கதைகளாகவும் இருந்தன. இந்த அம்சத்தை நாம் மகாபாரதத்தில் காணலாம். ஒவ்வொருவரும் மிக விரிவான பலதலைமுறைக்காலம் நீளும் குலமுறை வரிசையைச்சொல்லியே நமக்குச் சொல்லப்படுகிறார்கள். ஹோமரிலும் இவ்வியல்பு உள்ளது. பெரும்பாலும் வீரர்களின் தலைமுறைச்சங்கிலி கூறப்படுகிறது. இது அவரது மரபு என்ன என்பதை காட்டுகிறது.
மகாபாரதத்தில் இந்தக் குலமுறைச் சங்கிலியில் கடவுள்களும் இணைந்துவிடுகிறார்கள். அர்ஜுனன் இந்திரபுத்திரன். கர்ணன் சூரியபுத்திரன். அதையே நாம் ஹோமரிலும் காண்கிறோம். மாவீரனான அக்கிலஸ் பீலியூஸ் என்ற அரசனுக்கும் தீட்டிஸ் என்ற கடல்தேவதைக்கும் பிறந்தவன். அதாவது அவன் அலைகடலின் மைந்தன். வீரனுக்குப்பின்னால் ஒரு அமானுஷ்ய வட்டத்தைச் சேர்ப்பது அக்கால பொதுமரபாக இருந்திருக்கலாம்.



வீரகதைப்பாடலின் வடிவம்

பொதுவாக கதைப்பாடல்களைக் [Ballad] காவியங்களின் முன்னோடி வடிவம் என்று சொல்வதுண்டு. கதைப்பாடல்கள் குலக்கதைப்பாடல்களாக முதலில் இருந்து, பின்னர் வீரகதைப்பாடல்களாக உருமாறுகின்றன. அவை காவியத்தன்மை கொள்ளும்போது ஒட்டுமொத்தமான நோக்கு தேவையாகிறது. அந்நிலையில் அடிப்படை மானுடக் கேள்விகள் எழுந்து வருகின்றன. அவற்றை அவை கையாள ஆரம்பிக்கும்போது அவை அறத்தைப் பாடுபொருளாகக் கொள்கின்றன.
அறம், மையமான பாடுபொருளாக ஆவதே காவியம் என்ற வடிவத்தின் முதிர்ந்த கனிந்த நிலை என்று சொல்லலாம். காவியங்கள் காலத்தால் முன்னால்செல்லும்தோறும் அவை வெறும் வீரகதைப்பாடல்களாக மட்டுமே உள்ளன. காலத்தால் பிந்தப்பிந்த அறத்தைப் பாடுபவையாக ஆகின்றன. இலியட்டும் ஒடிஸியும் வெறும் வீரகதைக் காவியங்கள் மட்டுமே. அவை அறத்தை அதிகமாகப் பேசவில்லை. பிந்தைய காவியங்கள் அற விவாதம் நோக்கிச் செல்கின்றன.
ஐரோப்பிய மரபிலேயே அந்தப் பரிணாமப்பாதையை மூன்று பெருங்காவியங்கள் வழியாகத் தெளிவாகப்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஹோமரின் ஒடிஸ்ஸி ஒடிஸஸ் என்ற மாவீரன் ட்ரோஜன் போர் முடிந்ததும் நாடுதிரும்பும் சாகசப்பயணத்தை மட்டுமே விவரிக்கிறது.
அதே சாயலில் அமைந்த விர்ஜிலின் இனியட், தொள்ளாயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்டது. இதில் இனியாஸ் என்ற நாயகன் டிரோஜன் போர் முடிந்து வீடு திரும்பும் சாகஸங்கள் தத்துவார்த்தமான உருவகத்தன்மை அடைந்துள்ளன.
ஆனால் மேலும் ஆயிரத்து இருநூறு வருடங்கள் கழித்து தாந்தே எழுதிய பெருங்காவியமான டிவைன் காமெடி அதே சாகஸப்பயணத்தை முழுக்க முழுக்க ஆன்மீகமான அகவயப்பயணமாக ஆக்கிக் காட்டுகிறது.நரகத்தில் இருந்து துறக்கம் வழியாக சொர்க்கம் செல்லும் பாதையின் சித்தரிப்பு அது. விர்ஜிலே அங்கே வந்து தாந்தேயை அழைத்துச்செல்கிறார்.
இந்தியக் காவியங்களை எடுத்துக்கொண்டால் ஆதிகாவியங்களான மகாபாரதமும் ராமாயணமும் அறம் மையப்பொருளாக ஆன பின்னர் உருவானவை. அவற்றில் வீரகதைப்பாடல்களின் அம்சங்கள் நிறைய இருந்தாலும் எப்போதுமே அவை அறம் சார்ந்த சிக்கல்களையே விரித்துப்பேசுகின்றன. கம்பராமாயணம் அவை உருவாகி ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னர் உருவானது. ஆகவே அது முழுக்கமுழுக்க அறத்தைப்பற்றியே பேசுகிறது. போர்க்களத்தின் பிரம்மாண்டமான சித்தரிப்பாகிய யுத்த காண்டத்தில் கூட வீரத்தை விட அறமே பேசுபொருளாகிறது. வீரநாயகனாகிய ராமனை அறத்தின் மூர்த்தியான் என்று சொல்லும்போது அந்த இணைப்பு மிக வெற்றிகரமாகப் பொருந்திவிடுகிறது.
தமிழில், அல்லது சம்ஸ்கிருத இலக்கியத்தில் வீரகதைப்பாடல்கள் உண்டா? இல்லை என்றே நினைக்கிறேன். காரணம் இவ்விருமொழிகளும் செவ்வியல் மொழியாக ஆகிவிட்டவை. நமக்குக் கிடைப்பவை செவ்வியல் ஆக்கங்கள் மட்டுமே. ஆகவே நாட்டாரிலக்கியம் நோக்கிச் செல்லவேண்டியிருக்கிறது. அதிலும் தமிழில் பெரிய வீரகதைப்பாடல்கள் இல்லை. ஆகவே கேரளம் நோக்கி செல்கிறேன்.
சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் செவ்வியல் காலகட்டம் உருவானதுமே வீரகதைக்காலகட்டம் மறைந்தது. கேரளத்தில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை அந்தக் காலகட்டம் நீண்டது. இரு வகை வீரகதைப்பாட்டுகள் உள்ளன. தெக்கன்பாட்டுக்கள், வடக்கன்பாட்டுகள். தெக்கன்பாட்டுகள் எங்கள் ஊரான குமரிமாவட்டத்தை, அதாவது தென்திருவிதாங்கூரைச் சேர்ந்தவை. வடக்கன் பாட்டுகள் வடகேரளத்தில் தலைச்சேரி வடகரைப் பகுதியைச்சேர்ந்தவை.
இந்தப்பாடல்கள் போரில் உயிர்துறந்த மாவீரர்களைப் புகழ்ந்து பாடுபவை. ஒரு வீரனின் குலம், அவனது கல்வி, தனிப்பட்ட குணச்சிறப்புகள் புகழ்ந்துரைக்கப்படுகின்றன. அவனுடைய காதல், சகோதர பாசம், நட்பு போன்றவை உணர்ச்சிகரமான கதையாகச் சொல்லப்படுகின்றன. அவன் வென்ற போர்கள் ஆவேசமாக வர்ணிக்கப்படுகின்றன. அதன்பின்னர் அவனுடைய வீரமரணம் வர்ணிக்கப்படுகிறது. அவன் வீரசொர்க்கம் சென்றது சிலசமயம் சொல்லப்படுகிறது. அவனுடைய மரணத்துக்கு அவனைச் சார்ந்தவர்கள் எடுத்த வஞ்சினமும் பழிக்குப்பழி வாங்கியமையும் கூறப்படுகிறது.
வடக்கன்பாட்டுகளில் மன்னர்களை விட தசோளி ஒதேனக்குறுப்பு, ஆரோமல் சேகவர், கண்ணப்பனுண்ணி போன்ற தனிவீரர்களே பாடப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால் இப்பகுதியில் பெரிய அரசுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கூட அமையவில்லை. நாடுவாழிகள் என்னும் சின்னஞ்சிறு அரசர்களே இருந்தார்கள். அதாவது புறநானூற்றுக்கு முந்தைய காலகட்டத் தமிழகம்போன்ற சூழல். புறநானூற்றுக்காலம் என்பது வேளிர்கள் போன்ற சிறுமன்னர்களை மூவேந்தர்கள் வென்று அடக்கிய காலகட்டம். அந்தச் சிறு மன்னர்கள் அழிக்கப்பட்டதும் வீரயுகமும் முடிவுக்கு வந்தது. அக்காலத்தில் அந்தச் சிறுமன்னர்களைப்பற்றி நிறைய வடக்கன்பாட்டுகள் போல வீரகதைப்பாடல்கள் இருந்திருக்கலாம்.
வடக்கன்பாட்டுக்கள் புள்ளுவர், பெருவண்ணான், மலையன் என்ற சாதிகளைச் சேர்ந்த குலமுறைப்பாடகர்களால் பாடப்பட்டிருக்கின்றன. மறைந்த வீரர்களுக்காக அமைக்கப்பட்ட சமாதிக்கோயில்களில், அல்லது அவர்களின் நினைவுநாளில், அல்லது தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் இவை பாடப்பட்டன. குடம், தும்புரு போன்ற வாத்தியங்களை வாசித்து இவற்றைப் பாடினார்கள். அதற்காகத் தனிப்பரிசுகள் அளிக்கப்பட்டன. அத்துடன் அறுவடையின்போதும் பங்கு அளிக்கப்பட்டது. சாதிப்படிநிலையில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சற்றே மேலே, அதாவது தீண்டாமை அற்றவர்களாக, இருந்தார்கள்.
தெக்கன்பாட்டுக்களில் தனிவீரர்களை விட அரசர்களே அதிகம் பாடப்பட்டிருக்கிறார்கள் – பப்புத்தம்பி, ராமன் தம்பி போல. அல்லது அரசருக்காகப் போர் புரிந்தவர்கள் பாடப்பட்டிருக்கிறார்கள் – இரவிக்குட்டிப்பிள்ளை போல. தெக்கன்பாட்டுகள் வள்ளுவர், பாணர் போன்ற தொழில்முறைப் பாடகர் சாதிகளால் பாடப்பட்டன. வில்லை அடித்துப்பாடுவதும் மகுடம் என்ற சிறிய இசைக்கருவியைத் தாளமாக அடித்துப்பாடுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. இப்பாடகர்கள் நிலக்கிழார்களாலும் வீரர்குடிகளாலும் பேணப்பட்டார்கள். புலவர், கம்பர் போன்ற அடைமொழிகள் இவர்களுக்கு இருந்தன. சாதியால் கிட்டத்தட்டத் தாழ்த்தப்பட்ட மக்களாக இவர்கள் இருந்தார்கள்.
ஆக, தெளிவாகவே சங்ககால சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. பிற இடங்களில் அந்தக்காலகட்டம் மறைந்தபோது இங்கே அது அப்படியே நீடித்தது என்று கொள்ளலாம். வீரத்தால் மட்டுமே எல்லாம் தீர்மானிக்கப்பட்ட ஒரு காலகட்டம். வீரர்களை நினைவில் நிறுத்தும் வீரகதைப்பாடல்களும் அவற்றைப்பாடும் தொழில்முறைப்பாடகர்களும். இந்த வீரகதைப்பாடல்களை நாம் நாட்டார் இலக்கியம் என்கிறோம். இந்த மரபின் செவ்வியலக்கிய வளர்ச்சியே நம்முடைய காவியங்கள்.
இதேதான் கிரேக்கத்திலும் மூவாயிரம் வருடம் முன்புள்ள சூழ்நிலையாக இருந்திருக்கும். நாட்டார்பாடல்களாக இருந்த வீரயுகப்பாடல்களில் இருந்து செவ்வியலாக்கம் செய்யப்பட்ட ஒரு வடிவமே ஹோமரின் இலியட், ஒடிஸி ஆகிய காவியங்கள். அவை பெரும்பாலும் நாட்டார் மரபின் அழகியலையே கொண்டிருக்கின்றன. செவ்வியலாக்கம் சிறிதளவே நிகழ்ந்துள்ளது. முழுக்க முழுக்க செவ்விலக்கியமான கம்பராமாயணத்துடன் அதை ஒப்பிடும்போது வேறுபாடு திகைப்பூட்டும்படி தெரிகிறது.
ஹோமரின் காவியத்துக்கும் மலையாள வீரகதைப்பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமை வியக்கச்செய்வது. வீரனின் குலத்தில் தொடங்கி அவனுடைய ஆளுமையை, போரை, வீழ்ச்சியை வர்ணிக்கும் அமைப்பு மட்டும் அல்ல, அதை நீளமாகப் பாடிச்செல்லும் போக்கு, உணர்ச்சிகரமான விவரணைகள், தத்துவ கனமில்லாத யதார்த்த உரையாடல்கள், மிகையற்ற யதார்த்தமான உவமைகள் வர்ணனைகள் எல்லாமே அப்படியே உள்ளன. அவற்றைப் பின்னர் காணலாம்.
ஆக, ஹோமரின் இலியட்டை நாம் வான்மீகி ராமாயணத்துக்கும் முற்பட்ட அழகியல் காலகட்டத்தைச் சேர்ந்த நூல் என்று புரிந்துகொள்ளவேண்டும். நாட்டார் மரபில் இருந்து உருவான அழகியல் செவ்வியலைச் சந்திக்கும் ஒரு ஆரம்பப் புள்ளி இந்தக் காவியம். ஓர் ஒப்பீடாகச் சொல்வதாக இருந்தால் விர்ஜிலின் அழகியல்காலகட்டத்தைச் சேர்ந்தவை ராமாயணமும் மகாபாரதமும். கம்பராமாயணம், ரகுவம்சம் ஆகியவை அடுத்த கட்டம், அதாவது தாந்தேயின் காலகட்டம். கிட்டத்தட்டக் கால அளவும் இதற்குச் சமானமாகவே வருமென நினைக்கிறேன்.
இங்கே ஒன்றைச்சுட்ட விரும்புகிறேன், ஹோமரில் இருந்து விர்ஜிலுக்கும் அங்கிருந்து தாந்தேக்கும் வர ஏறத்தாழ ஆயிரம் வருடங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. வான்மீகி ராமாயணத்தில் இருந்து கம்பனுக்கும் காளிதாசனுக்கும் வரவும் அதேயளவு காலம் தேவைப்பட்டிருக்கிறது. காவியத்தன்மையில் ஒரு தெளிவான மாற்றத்தை அடையாளம் காண ஆயிரம் வருடம் தேவையா என்ன?


2

இலியட்டின் நாட்டார் அழகியல்

இலியட் காவியத்தின் நாட்டார் அம்சம் எதில் உள்ளது? செறிவை விட அது சரளத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதில்தான். அது நாட்டார் அழகியலின் முக்கியமான அம்சம். அதாவது இது கல்வி கற்ற, காவியப்பயிற்சி உடைய வாசகர்களுக்கானது அல்ல. ஒரு போர்க்களத்தில் போர் முடிந்தபின் இரவில் கணப்பருகே கூடும் வீரர்களிடமோ அல்லது நாட்டுப்புற விழாவிலோ அல்லது அறுவடைக்களத்தில் கூடும் விவசாயிகளிடமோ அல்லது பயணிகள் சத்திரத்திலோ பாடப்படும் பாடல் இது. ஆகவே இதன் முதல் இயல்பென்பது அசாதாரணமான எளிமையே.
காவியகாலகட்டத்தின் ஆரம்பத்தில் காவியகர்த்தன் ஒரு பெரும் தொகுப்பாளனாகவே இருக்கிறான். அசாதாரணமான நினைவாற்றலே அவனுடைய முதன்மைத்தகுதியாக இருக்கிறது. ஹோமர் பார்வையிழந்தவர் என்பதனால் இந்த நினைவாற்றல் அவருக்கிருந்திருக்கலாம். காவியகாலத்தின் இரண்டாம் கட்டத்திலேயே காவியகர்த்தன் பேரறிஞனாக ஆகிறான். அறிஞர்களுக்காக எழுத ஆரம்பிக்கிறான். கம்பராமாயணமும் ரகுவம்சமும் கவிதையை சுவைக்கும் தகுதி கொண்டவர்களுக்கானவை. அவற்றின் அடிப்படை இயல்பென்பது செறிவே.
தேவதையே பாடு
பீலியூஸின் மகன் அக்கிலிஸின் சினத்தைப்பாடு
கிரேக்கர்களுக்கு அளவிலா துயர்களை கொண்டுவந்த
வெறியைப்பற்றிப்பாடு
ஹேட்ஸுக்கு வீரர்களின் உயிர்களை அனுப்பிய தீரத்தை பாடு
உடல்களை நாய்நரிகளுக்கு இரையாக்கிய வீரத்தை பாடு
மன்னரான ஆட்ரியஸும் மாவீரன் அக்கிலிஸும்
முரண்பட்டுக்கொண்டபோது
ஜோவ்வின் நோக்கம் நிறைவேறியதென்று பாடு
அவர்களை மோதவைத்த தெய்வம் எது?
ஜோவுக்கும் லீட்டோவுக்கும் மைந்தன் அவன்.
அவன் மன்னன் மேல் கோபம்கொண்டிருந்தான்
அதற்காக மக்களை அழிக்க விரும்பினான்
காரணம் தன் பூசகன் க்ரைஸஸை
மன்னன் அவமதித்ததுதான்.
இவ்வாறு சரளமாகச் செல்லும் இந்தக் கதைகூறல்முறை உண்மையில் கவிதை என்பதைவிட ஓசையிசைவுள்ள உரைநடை என்பதே சரியானது. இதை மொழியாக்கம் செய்தவர்களும் பெரும்பாலும் உரைநடையாகவே செய்திருக்கிறார்கள். இணையத்தில் கிடைக்கும் மொழியாக்கங்களில் சாமுவேல் பட்லரின் [Samuel Butler ] மொழியாக்கம் சிறந்தது. தமிழில் நாகூர் ரூமி மொழியாக்கம் செய்திருக்கிறார். சரளத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தமையால் ஒருசில இடங்களில் கவித்துவம் இல்லாமலாகிவிட்டிருந்தாலும் இந்த மொழியாக்கம் தமிழுக்கு ஒரு கொடை என்றே நினைக்கிறேன் [ கிழக்கு பிரசுரம்]
நாட்டார்த்தன்மையின் இரண்டாவது சிறப்புக்கூறு என்பது எளிமையான நம்பகமான வர்ணனைகள் மற்றும் உவமைகள். நாட்டார் இலக்கியங்கள் யதார்த்தமாக வாழ்க்கையை நோக்கும் மக்களுக்குரியவை. அவர்கள் கவிதையை ஒரு தனிக் கலைவடிவமாகக் கண்டு கற்பனையை விரிக்கப் பயிற்சியற்றவர்கள். ஆகவே கற்பனை யதார்த்த தளத்தை விட்டு மேலெழ முடியாது. கண்ணால் கண்ட, காதால் கேட்ட உண்மையான அனுபவ தளத்தைச் சார்ந்தே எல்லா வர்ணனைகளும் உவமைகளும் இருக்கமுடியும்.
உதாரணமாக தச்சோளி உதயனின் பொன்னிறத்தை வர்ணிக்கும்போது வடக்கன் பாட்டு
குன்றின்மேல் கொன்றை மலர்ந்ததுபோல்
வயநாட்டு மஞ்சள் நறுக்கியதுபோல்
என்று சொல்கிறது. அதில் எந்த அசாதாரணமான கற்பனைக்கும் இடமில்லை.
ஆனால் காளிதாசனின் ரகுவம்சம் இப்படிச் சொல்கிறது
எதிரிகளை எண்ணி வருந்திய
அவள் முகம் சட்டென்று மீண்டு
மூச்சுக்காற்று பட்டு தெளிந்த
கண்ணாடி போலானது
இங்கே வர்ணனை ஓரளவே யதார்த்தமாக இருக்கிறது. மூச்சுக்காற்றுபட்ட கண்ணாடி மங்கித் தெளிவதைப்போல மனம் மயங்கித் தெளிந்தாள் என்பது ஒரு நாட்டார் பாடலில் வரமுடியாது. இது அருவமான ஒரு மனஉணர்வை வர்ணிக்கும் முயற்சி. அதற்காக இங்கே கற்பனை ஒரு கருவியாக ஆகியிருக்கிறது. செவ்வியலாக்கத்தின் முதல்படி இதுவே. ஒரு நாட்டார் பாடகன் ஒருபோதும் அருவமானவற்றை வர்ணிக்க பிரக்ஞையுடன் முயலமாட்டான். காவியகர்த்தனுக்கு கற்பனை முதன்மையான கருவி.
அடுத்தபடி மேலும் ஐந்து நூற்றாண்டுகளுக்குப்பின் வந்த கம்பனின் காவியம். கம்ப ராமாயணம் இவ்வாறு வர்ணிக்கிறது
திடர் உடை குங்குமச் சேறும் சாந்தமும்
இடையிடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன
மிடை முலை குவடு ஒரீ மேகலை தடங்
கடலிடை புகுந்த கண் கழுழி ஆறு அரோ
பெண்களின் கண்கள் நிறைந்து வழிந்த ஆறு அவர்கள் மார்பிலணிந்த குங்குமத்தையும் சந்தனத்தையும் வண்டலாக ஆக்கி அவர்கள் கழுத்திலணிந்த ஆரத்தைச் சுழற்றியடித்துக்கொண்டு மார்பகங்களாகிய மலைகளைச் சுற்றிக்கொண்டு மேகலையாகிய கடலில் சென்று கலந்தது.
இந்த அழகியல் முற்றாக வேறானது. இங்கே கற்பனை கற்பனையின் அழகுக்காகவே ரசிக்கப்படுகிறது. செவ்வியலாக்கத்தின் உச்சம் என இதைச் சொல்வார்கள். உயர்தர செவ்வியல் கலைகளில் அந்தக்கலையின் நுட்பம் மட்டுமே ரசிக்கப்படும். அந்த நுட்பத்தை மேலும் மேலும் நுண்மையாக்கிக்கொண்டு செல்வதே அங்கே கலைத்திறன் என்று கொள்ளப்படும்.
இந்த மூன்று படிநிலைகளில் எங்கே நிற்கிறது ஹோமரின் இலியட்? கண்டிப்பாக முதல்நிலையில்தான். அதாவது நாட்டார் அழகியலில். அதுவே அதன் முதல் சிறப்பாகும்.
நான் என் கையிலிருக்கும் இந்தக் கோலின்மேல் ஆணையிடுகிறேன்
குன்றுகள்மேல் மரமாக இருந்த இந்தக் கோல்
அடிமரத்தைப் பிரிந்த பின் இனிமேல்
மீண்டும் தளிர் விடாது இலைவிரியாது.
வெண்கலக்கோடரி அதன் பட்டையை உரித்துவிட்டது
இலைகளைக் கொய்துவிட்டது
ஜீயஸின் பெயரால் நம் மூதாதையர் நீதி வழங்கும்போது
இந்தக் கோலைத்தான் பிடித்துக்கொள்கிறார்கள்.
இந்த வரிகளில் உள்ள எளிமை இதை ஒரு நாட்டார் பாடலாகவே நிறுத்துகிறது. ஆனால் ஒரு அம்சம் தாண்டிச்செல்கிறது, இதை ஒரு காவியத்தின் வரியாக ஆக்குகிறது. அது இதில் உள்ள நுட்பமான குறிப்புதான். உயிரற்றதாக ஆக்கப்பட்ட, பட்டை உரிக்கப்பட்டு இலை கொய்யப்பட்ட, ஒன்றாகவே இது மாற்றமற்ற குலநீதியைச் சொல்கிறது!
அந்த டிரோஜன் முதியவர்கள் நல்ல பேச்சாளர்கள்.
காட்டுமரக்கிளைகளில் அமர்ந்து
நடுங்கும் குரலெழுப்பும் சிள்வண்டுகள்!
அருகே ஹெலன் வருவதைக் கண்டதும் அவர்கள்
சிறகுகள் கொண்ட சொற்களைப் பரிமாறிக்கொண்டார்கள்.
இதுவும் எளிய அழகிய நாட்டாரியல்பையே கொண்டிருக்கிறது. இதிலுள்ள அங்கதம் பேரறிஞனுடையதல்ல, எளிய மனிதர்களும் பேச்சுக்களில் சாதாரணமாகச் சொல்லத்தக்கதே. ஹோமரின் காவியத்தின் ஆதார இயல்பு இதுவே.
இந்திய காவியங்களில் வான்மீகி ராமாயணத்தில்தான் நாம் இத்தகைய எளிமையான நாட்டார்பண்புள்ள பாடல்களைக் காணமுடியும். ஆனால் வான்மீகி ராமாயணம்கூட பல பகுதிகளில் உயர்தரச்செவ்வியல்தன்மையையே வெளிப்படுத்துகிறது.

இலியட்டின் செவ்வியல்தன்மை

இலியட்டின் செவ்வியல்தன்மை எங்கே உள்ளது? என் நோக்கில் அதிலுள்ள புராணத்தன்மையே செவ்வியலம்சத்தை உருவாக்குகிறது. அந்தப் புராணத்தன்மை இந்தியப் புராணிகங்களுடன் பலவகைகளில் ஒத்துப்போவதை ஒரு பேராச்சரியமென்றே சொல்லவேண்டும். இலியட்டின் கதையில் சர்வசாதாரணமாக கடவுள்கள் ஊடாடுகிறார்கள். கடவுள்களின் பங்களிப்பால்தான் இந்தப் போர்ச்சித்தரிப்புக்கு அன்றாட தளத்தை விட்டு மேலெழும் இயல்பு கைகூடுகிறது.
இலியட் முன்வைக்கும் கடவுள்கள் நம்முடைய இன்றைய கணிப்பில் உள்ள கடவுள்தன்மை கொண்டவர்கள் அல்ல. சாகாத தன்மை, அமானுட ஆற்றல் போன்ற இயல்புகளால் அவர்கள் கடவுள்கள். மற்றபடி எல்லாவகையான மனித உணர்வுகளும் உடையவர்கள். போட்டி பொறாமை துரோகம் நட்பு காதல் எல்லாமே கொண்டவர்கள். அதாவது அவர்கள் தேவர்கள் மட்டுமே. இவர்களைக் கடவுள்கள் என்பதை விட மனித உணர்வுகளின் உச்சநிலையை பிரதிபலிக்கும் உருவகவடிவங்கள் என்றே சொல்லலாம்.
இவ்வாறு உச்சநிலை உருவகங்கள் கதைக்குள் ஊடாடும்போது காவியம் எளிய வீரகதைப்பாடல் என்ற நிலையில் இருந்து பறந்து மேலெழுகிறது. அதுவே இதன் செவ்வியல்தன்மையை தீர்மானிப்பதாகிறது. உதாரணமாக இதன் கதைநாயகனாகிய அக்கிலிஸின் பிறப்பு. ஜீயுஸ் என்ற தலைமைத் தெய்வம் [கிட்டத்தட்ட இந்திரன்] பொஸைடன் என்ற கடல்தெய்வம் [வருணன்] ஆகியோர் தீட்டிஸ் என்ற கடல்தெய்வம் மேல் காதலுறுகிறார்கள். ஆனால் அவளுக்குப் பிறக்கும் குழந்தை தந்தையை விட வல்லமைகொண்டவனாக ஆவான் என புரமைத்யூஸ் என்ற தேவனின் குறிச்சொல் இருக்கிறது.
ஆகவே தீட்டிஸை பீலியூஸ் என்ற மன்னனுக்கு மணம் செய்விக்கிறார்கள் அந்த தெய்வங்கள். அவளுக்குப் பிறக்கும் மகனே அக்கிலிஸ். அவன் மாவீரன். ஆனால் மனிதனுக்கு பிறந்தவனாதலால் மரணம் உடையவன். இதனால் அவன் அன்னை அவனை ஹயடிஸ் என்ற பாதாளத்துக்கு கொண்டுசென்று அங்கே ஓடும் ஸ்டிக்ஸ் என்ற கரிய நதியின் நீரில் முக்கி எடுக்கிறாள். அது சத்தியத்தின் நதி. அந்த நதியில் மூழ்கியவர்கள் இறப்பதில்லை. ஆனால் தீட்டிஸ் அக்கிலிஸின் குதிகாலைப் பிடித்து நீரில் முக்கினாள். ஆகவே அவன் குதிகால் மட்டும் மரணமுள்ளதாக ஆயிற்று. அதன் வழியாகவே அவன் கொல்லப்பட்டான்.
இலியட்டின் நாயகனைப்பற்றிய இந்தக் கதை நம்முடைய பல புராணங்களை நினைவூட்டுகிறது. மகாபாரத நாயகனாகிய பீமனை துரியோதனன் கைகால்களைக் கட்டி கங்கையில் போடுகிறான். கங்கையின் ஆழத்தில் இருக்கும் ஒரு பிலம் வழியாக பீமன் பாதாளத்துக்குச் சென்றுவிடுகிறான். அங்கே மாபெரும் வலிமைகொண்ட பெரும் நாகங்கள் வாழ்கின்றன. அவர்களின் தலைவனாகிய வாசுகிக்கு பீமனின் அஞ்சாமை பிடித்திருக்கிறது. பீமனுக்கு அவன் ஒரு நாகவிஷக்கலயத்தை அளிக்கிறான். அதை அருந்திய பீமன் ஆயிரம் யானை பலம் பெறுகிறான்.
ராவணன் மேலுலகம் சென்றான். கைலாயமலையை அசைத்தான். அந்த வல்லமையைக் கண்டு சிவபெருமான் அவனுக்கு சந்திரஹாசம் என்ற வில்லை வழங்கினார். அக்கிலிஸின் குதிகால் துரியோதனனின் தொடையை நினைவூட்டுகிறது.
இந்தப் பாதாள நதி சட்டென்று சிலப்பதிகாரத்தில் வரும் இட்டசித்தி பவதாரிணி என்ற இரு பொய்கைகளை நினைவூட்டுகிறது. அவையும் பாதாளத்தில் உள்ளன. முற்பிறப்பு நினைவை ஊட்ட வல்லவையும் நினைத்த காரியம் கைகூடச்செய்பவையும் ஆகும் அவை.
இந்தப் புராண அம்சங்கள் இலியட்டுக்கு ஓரு குறியீட்டமைதியை அளிக்கின்றன. இவையே அதை காவியமாக்குகின்றன.


3

இலியட்டின் கவித்துவம்

இலியட் காவியத்தை வீரகதைப்பாடல்களில் இருந்து காவியத்தை நோக்கி நகர்ந்த ஒரு வடிவம் என்று சொல்லலாம். ஆகவே உக்கிரமான போர்ச்சித்தரிப்பே அதன் சிறப்பு. இலியட்டில் முக்கியமான கதையோட்டம் ஏதும் இல்லை. அதன் முதல் வரியே சொல்வதுபோல அது அக்கிலிஸ் என்ற மாவீரனின் ஆண்மை, ஆணவம், கட்டுக்கடங்காத சினம் ஆகியவற்றின் விரிவான சித்தரிப்பு மட்டுமே.

டிராய் என்ற நகரில் இருந்த இலியம் என்ற கோட்டையில் நிகழக்கூடிய நிகழ்ச்சிகளே இந்தக் காவியத்தில் சொல்லப்பட்டுள்ளன. அக்கிலிஸ் தீட்டிஸ் என்ற கடல்தேவதையின் மகன். அவனுடைய தாய்க்கும் தந்தைக்கும் நடக்கும் திருமணத்திற்கு ஹீரா, அதீனி, அஃப்ரோடைட்டி ஆகிய மூன்று தேவதைகளும் வந்திருக்கின்றன. அந்தத் திருமணத்துக்கு வரும் வம்புக்கார தெய்வமான எரிஸ் என்பவள் ஒரு தங்க ஆப்பிளை ஒரு மேஜைமேல் வைத்து அது உலகிலேயே அழகான தேவதைக்குப் பரிசு என அறிவிக்கிறாள். மூன்று தேவதைகளும் அதற்காகப் போட்டியிடுகின்றன
அந்தப் போட்டிக்கு நடுவராக டிராயின் இளவரசனான பாரீஸ் அழைக்கப்படுகிறான். அவனுக்கு அஃப்ரோடைட்டி, ஒரு ரகசிய வாக்குறுதியை அளிக்கிறாள். அதாவது மானுடர்களில் பேரழகியை அவனுக்கு அவள் பார்த்துக்கொடுப்பதாகச் சொல்கிறாள். அதற்கு மயங்கிய பாரீஸ், அஃப்ரோடைட்டியைத் தேவதைகளில் அழகியாகத் தேர்வு செய்கிறான். அஃப்ரோடைட்டி கண்டுபிடித்த மானுடப்பேரழகி ஹெலன். இது ஒரு முற்காலக்கதை.
ஹெலன், லீடா என்ற பெண்ணுக்கும் கிரேக்க தலைமைக்கடவுளான ஸியுஸுக்கும் பிறந்தவள். லீடா, டிரிண்டாரியூஸ் என்ற மன்னனின் மனைவி. ஸியுஸ் ஓர் அன்னப்பறவையாகச் சென்று லீடாவைக் கூடியதனால் உருவான முட்டையில் இருந்து ஹெலன் பிறந்தாள் என்பது கிரேக்க புராணம். அவளை ஸ்பார்ட்டாவின் மன்னன் மெனிலியஸ் மணந்துகொண்டார்.
மெலினியஸின் அண்ணன் அகமெம்னான். அகமெம்னான் கிரேக்கப்படைகளின் ஒட்டுமொத்தத் தளபதியாக இருக்கிறார். ஒரு கிரேக்கப் பேரரசை அமைக்கும் இலக்கு அவருக்கிருக்கிறது. கிரேக்க வெற்றிக்குத் தடையாக அவர் எண்ணுவது ட்ரோஜன்களின் டிராய் நகரைத்தான். டிராயுடன் பல பூசல்கள். அவை பேசி முடிக்கப்படுகின்றன. சமரசத்துக்கு பாரீஸும் அவனது அண்ணன் ஹெக்டரும் ஸ்பார்ட்டாவுக்கு வருகிறார்கள். அங்கே பாரீஸ் ஹெலனைப் பார்க்கிறான். பார்த்ததுமே காதல் கொள்கிறான். இந்த சந்திப்பை ஏற்பாடு செய்ததும் காதல் வரசெய்ததும் அஃப்ரோடைட்டி என்ற தெய்வம்.
பாரீஸுடன் ஹெலன் டிராய் நகருக்குச் சென்றுவிடுகிறாள். தன் 9 வயதான மகள் ஹெர்மியோனையும் விட்டுச்செல்கிறாள். இதைப் பெரிய அவமதிப்பாக மெனிலியஸ் நினைக்கிறார். ஆனால் அகமெம்னானுக்கு ஒட்டுமொத்த கிரேக்க நகரங்களையும் திரட்டி டிராயை அழிப்பதற்கு அது ஒரு நல்வாய்ப்பு. அவருடைய அறைகூவலில் 1186 கப்பல்கள் கொண்ட பெரும் கிரேக்கப்படை டிராயை வெல்வதற்காகச் செல்கிறது. பத்து ஆண்டுக்காலம் டிராய் நகரை கிரேக்கப்படைகள் முற்றுகையிட்டுப் போர் புரிகின்றன. இந்தப் போரின் கடைசி ஐம்பது நாட்களின் நிகழ்வுகளை மட்டுமே இலியட் விவரிக்கிறது.
அதாவது இதை மகாபாரதத்தின் யுத்தபர்வம் அல்லது கம்பராமாயணத்தின் யுத்தகாண்டம் மட்டும் என்று சொல்லலாம். ஒருவேளை இது முழுமையாக இருந்திருக்கலாம். ஆனால் இந்தப்பகுதியையே ஒரு முழுமையான காவியமாகக் கொள்வதே கிரேக்க, ஐரோப்பிய மரபின் வழக்கமாக இருக்கிறது.
அகமெம்னானுடன் எப்போதுமே அக்கிலிஸுக்குக் கருத்து வேறுபாடு இருந்தது. அக்கிலிஸின் தன்னிச்சையான போக்கை அகமெம்னான் விரும்பவில்லை. அக்கிலிஸுக்கு அகமெம்னானின் பேராசை பிடிக்கவில்லை. போரின் கடைசிக்காலகட்டத்தில் அகமெம்னானுக்கும் அக்கிலிஸுக்கும் மோதல் முற்றுகிறது. இந்த இடத்தில் இலியட் ஆரம்பிக்கிறது. அக்கிலிஸ் போரில் கலந்துகொள்ளாமல் விலகுகிறான். அவனை சமாதானம் செய்ய முயல்கிறார்கள். அவன் ஏற்பதில்லை.
இந்நிலையில் அக்கிலிஸின் உயிர்நண்பனான பெட்ரோகுலஸ் அக்கிலிஸுக்குப் பதிலாகப் போருக்குச் செல்கிறான். அங்கே பாரீஸின் அண்ணன் ஹெக்டரால் கொல்லப்படுகிறான். ஹெக்டரை வேறு எவராலும் வெல்ல முடியாது. ஆகவே அக்கிலிஸ் கடும் சினம் கொண்டு எழுகிறான். ஹெக்டரைக் களத்தில் கொல்கிறான். அவன் உடலைத் தேர்த்தட்டில் கட்டிக் களமெங்கும் இழுத்துச் சின்னாபின்னமாக்குகிறான். பத்து நாள் இப்படி அந்தப் பிணத்தை அவமதிக்கிறான்
ஹெக்டரின் அப்பா ப்ரியம் அக்கிலிஸிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டதனால் அந்தச் சடலத்தை விட்டுக்கொடுக்கிறான். ஹெக்டரின் இறுதிச்சடங்குடன் இலியட் முடிவடைகிறது. அதன் பின்னர் கிரேக்கர்கள் படைவிலக்கம் செய்வதாக நடித்து ஒரு மாபெரும் மரக்குதிரையை மட்டும் விட்டுச்சென்றார்கள். டிரோஜன்கள் வெற்றிக்களிப்பில் அக்குதிரையைக் கோட்டைக்குள் கொண்டுசென்றார்கள். அதனுள் ஒளிந்து இருந்த கிரேக்கர்கள் இரவில் கோட்டை வாசலைத் திறந்தார்கள். இருளில் வந்திறங்கிய கிரேக்கர்கள் கோட்டைக்குள் சென்று டிராய் நகரைப் பிடித்தார்கள்.
ஹெலன் பேரழகான வஞ்சமகளாகவே கிரேக்கத் தொன்மங்களில் காணப்படுகிறாள். ஹெக்டரும் பாரீஸும் இறந்தபின் அவள் பாரீஸின் தம்பியாகிய டெய்ஃபோபஸின் கள்ளக்காதலியாக இருக்கிறாள். கடைசியாக டிராய் கிரேக்கர் கையில் வீழ்ந்தபோது ஹெலென் டெய்ஃபோபஸின் வாளை ஒளித்துவைத்துவிட்டுத் தப்பி ஓடுகிறாள். அவன் மெனிலியஸ், ஒடிஸஸ் ஆகியோரின் கைகளில் நிராதரவாக சிக்குகிறான். ஹெலனின் முடிவு பற்றிக் கிரேக்க புராணங்களில் பல கதைகள் உள்ளன.
மெனிலியஸ் அவளைத் தன் கைகளால் கொல்லவேண்டுமென ஆசைப்பட்டதாகவும் ஆனால் கடைசியில் அவள் சிக்கிக்கொண்டபோது அவன் வாளைத் தூக்கியதும் அவள் தன் ஆடைகளைக் கீழே நழுவ விட, அவள் உடலின் அழகைக் கண்டு ‘இந்தப் பேரழகை எப்படி வாள் தீண்ட முடியும்!’ என்று சொல்லி அவளை ஏற்றுக்கொண்டு திரும்பவந்ததாகவும் ஒரு கதை உள்ளது. ஹோமரின் ஒடிஸியில் டெலெமேக்கஸ் நீண்ட பயணம் முடிந்து திரும்ப வந்தபோது மெனிலியஸின் மனைவியாக அவள் மீண்டும் ஸ்பார்ட்டாவில் இருந்ததைக் காண்கிறான்.
அக்கிலிஸ் பின்னர் போரில் பாரிஸால் கொல்லப்படுகிறான். அவனுடைய குதிகாலில் அம்பெய்து கொல்லும்படி அப்போல்லோ பாரிஸுக்கு ரகசியமாக வழிகாட்டுகிறது.
அக்கிலிஸின் உக்கிரமான வெறியாட்டத்தின் முடிவுடன் ஹெக்டரின் இறுதிச்சடங்குடன் இலியட் நிறைவடைகிறது.



மூன்று உச்சங்கள்

எந்த ஒரு வீரகதைப்பாடலையும்போல இலியட்டிலும் நான்கு அம்சங்களையே முக்கியமாகக் கருதவேண்டும். ஒன்று, வஞ்சினம். இரண்டு, போர்ச்சித்தரிப்பு. மூன்று, இரங்கல். இம்மூன்று இடங்களிலும்தான் கவித்துவத்துக்கான வாய்ப்புகள் உள்ளன. இலியட்டில் உள்ள வஞ்சினப்பகுதிகள் உக்கிரமான உரைகளாக அல்லாமல் இயல்பான உரையாடல்களாகவே உள்ளன. வஞ்சினத்தை ஓர் அலையின் எழுச்சியாக உருவகிக்கலாம்.
காயத்தில் இருந்து குருதி வழிவதைக் கண்டு
அகமெம்னான் அஞ்சினான்.
அச்சமற்ற மெனிலியஸும்தான்.
ஆனால் அம்பின் கொக்கிகளும் அம்புநுனியைக் கட்டிய சரடும்
காயத்துக்கு வெளியிலேயே இருக்கக் கண்டு அச்சம் தணிந்தான்
ஆனால் அகமெம்னான் நெடுமூச்செறிந்தான்
அவன் படைகளும் முனகிக்கொண்டன
மெனிலியஸின் கரங்களைப்பற்றிக்கொண்டு
அவன் சொல்லலானான்
‘அன்புள்ள சகோதரனே, எங்கள் முன்னணி வீரனாக நீ கிளம்பிச்செல்கையில்
நான் ஒரு வஞ்சினம் எடுத்தேன்
நீ கொல்லப்படுவாயென்றால் நான் பழிவாங்குவேன் என்று.
வாக்குறுதிகளை மீறி டிரோஜன்கள் உன்மேல் அம்புவிட்டிருக்கிறார்கள்
உன்னைக் காயப்படுத்தியிருக்கிறார்கள்.
ஆட்டுக்குட்டிகளின் குருதியாலும் மதுவாலும்
நட்புள்ள வலக்கைகளாலும்
நமது நம்பிக்கைகளை உறுதியிட்டோம்.
அவை பொருளிழந்து போகக்கூடாது.
ஒலிம்பஸின் ஆட்சி இங்கே இப்போதே வராமல் போகலாம்
ஆனால் என்றோ ஒருநாள் வந்தே தீரும்.
அப்போது அவர்கள் தங்கள் உயிரால்
தங்கள் மனைவிகள் குழந்தைகளின் உயிரால்
அதற்கு விலைகொடுப்பார்கள்.
அந்த நாள் வந்தே தீரும்.
ஓங்கிய இலியமும் அதனுள் வாழும் ப்ரியமும் அவன் மக்களும்
வீழ்ச்சியடைவார்கள்.
அவர்களின் இன்றைய துரோகத்திற்குத் தண்டனையாகத்
தன் உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் குரோனஸின் மைந்தனின்
அச்சமூட்டும் தலையணி அவர்கள் மேல் நிழல்பரப்பும்.
ஆம் இது நிகழ்ந்தே தீரும்.
ஆனால் மெனிலியஸ் இங்கே உன் உயிர் பிரிவதே விதியென்றால்
நான் ஆறாக் கடுந்துயர் கொள்வேன்.
அர்கோஸுக்குக் கையறுநிலையுடன் திரும்பிச் செல்வேன்.
கிரேக்கர்களும் உடனே வீடு திரும்புவார்கள்
ப்ரியமும் டிரோஜன்களும் கடும்போரிலும்
ஹெலனை விட்டுவிடவில்லை என்ற புகழை அடைவார்கள்.
இந்த டிராய் மண்ணில் கிடந்து உன் எலும்புகள் மட்கும்
உனது இலட்சியமோ நிறைவேறாது எஞ்சும்.
உன்னுடைய கல்லறைமேல் ஏதேனும் ஒரு
முட்டாள் டிரோஜன் ஏறிநின்று சொல்வான்.
‘அகம்மெம்னானின் வஞ்சினங்களெல்லாம் இப்படியே ஆகட்டும்.
வீணாகத் தன் படைகளைக் கொண்டுவந்தான்
காலியான கப்பல்களுடன் தன் வீட்டுக்கே திரும்பிச்சென்றான்
மெனிலியஸை இங்கே விட்டுச் சென்றான்.’
அவர்களில் ஒருவன் அப்படிச் சொன்னால்கூட
இந்த மண்பிளந்து என்னை விழுங்கட்டும்’
இலியட்டின் போர்க்களக்காட்சிகள், மூலத்தில் ஆவேசமாக வேகமான தாளத்துடன் பாடும் அமைப்பில் உள்ளன. அவற்றின் மொழியாக்கத்தின் உரைநடை வடிவத்தில் அவற்றின் முழுவீச்சையும் நாம் உணர முடியாது. போர் உச்சத்தை அந்த அலையின் சிகர நுனி எனலாம். இலியட் காவியத்தில் பெரும்பகுதி இதைப்போன்ற உக்கிரமானபோர்வர்ணனைகளால் ஆனதாகவே உள்ளது.
அறைகூவல் விடுத்து அவன் தேரைவிட்டு இறங்கியபோது
அவனுடைய கவசங்கள் ஒன்றுடன் ஒன்று உரசக் கேட்டு
அச்சமறியாத வீரர்களும் நடுங்கினார்கள்.
மேற்கத்தியக்காற்று சினத்துடன் ஓங்கி அறைகையில்
தொலைவிலிருந்து பொங்கி எழுந்து
கடற்கரை நோக்கி வந்து மோதி
முரட்டுப் பாறைகள் மேல் அறைந்து
வில்களும் முடிகளும் மேலே எழுந்து மின்ன
எல்லாப்பக்கமும் உப்புநுரை சிதற
மணல்மேல் ஓலமிட்டுப் பரவும் பேரலைபோல
கிரேக்கப்படைகள் களத்தில்
திடமாக முன்னேறிச்சென்றன.
படைத்தலைவர்கள் ஆணைகளக் கூவினர்
படைகளோ ஒரு சொல் பேசவில்லை.
எவருக்கும் நாவே இல்லையென்பதுபோலிருந்தது
அவர்களின் கட்டுப்பாடு.
அவர்கள் முன்னே செல்லும்போது
கவசங்கள் கடலலைபோல் வெயிலில் ஒளிவிட்டன.
ஆனால் டிரோஜன் படைகளின் ஓசையோ
பெரும் மந்தைகளின் உரிமையாளனின் தோட்டத்தில்
செம்மறிகளின் கூச்சலென ஒலித்தது.
வேறுவேறு இடங்களில் இருந்து வந்த
பல்வேறு மொழிகள் பேசும் அவர்களின் படைகள்
குழம்பிச் சுழித்து ஓலமிட்டன.
அவர்களை மார்ஸ் எழுச்சியூட்டியது
மறுபக்கத்தை மினர்வா ஊக்கமூட்டியது
அவர்களுடன் வந்தன பேரச்சமும் அழிவும்.
கொலைவெறிகொண்ட மார்ஸின்
களைப்பில்லாத சகோதரியோ
ஆரம்பத்தில் சிறியவளாக இருந்தாள்
பின்னர் தன் தலை விண்ணில் முட்டப் பேருருவம் கொண்டாள்
அவள் கால்களோ மண்ணிலேயே இருந்தன
அனைவருக்கும் சமமாகத் துயரத்தைப் பூசிவிட்டவளாக
அவள் களத்திலே சுற்றிவந்தாள்.
படைகள் மோதிக்கொண்டன
போர்வெறியில்
கேடயங்கள் கேடயங்களுடன் மோதின
ஈட்டிகள் ஈட்டிகளுடன் கோர்த்தன
குமிழ்வைத்த வெண்கலக் கேடயங்கள் மோதி ஒலித்தன
மரண ஓலங்கள் ஒலித்தன
கொல்பவர்களும் கொல்லப்பட்டவர்களும் வீறிட்டனர்
நிலம் குருதியால் நனைந்தது
மலைச்சிகரத்துப் பனி உருகிப் பெருக்கெடுத்த இரு நதிகள்
மலையிடுக்கில் சந்தித்துப் பெருவெள்ளமாக ஆனதைப்போல!
போர்க்களத்தில் இருதரப்பும்
வெறிகொண்டு மோதிக்கொண்ட பேரோலம்
தூரத்து மலையில் நின்ற மேய்ப்பனும்
கேட்கக்கூடியதாக இருந்தது.
இலியட் போன்ற காவியங்கள் சொல்லும் உயர்மட்ட வன்முறையின் மறுபக்கம் உக்கிரமான துயரம். கொல்லப்பட்டவர்களை எண்ணி இருப்பவர்கள் கொள்ளும் மாளாத்துயரம். இரங்கலை நாம் அந்த அலையின் இறங்கும் நிலை என உருவகிக்கலாம். இலியட்டின் கையறுநிலைக் காட்சிகளில் உச்சமானவை இரண்டு. ஒன்று நண்பன் கொல்லப்பட்டபோது அக்கிலிஸ் கொள்ளும் துயரம். எதற்கும் எந்தப் பொருளும் இல்லை என்ற ஆழமான உணர்ச்சியை அவன் அந்தத் துயரத்தின்போது அடைகிறான்.
‘அப்படியென்றால் இப்போதே நான் இறக்கிறேன்
ஏனென்றால் என் தோழனைக் காக்க முடியவில்லை என்னால்.
தன் பிறந்த வீட்டிலிருந்து வெகுதொலைவில் அவன் வீழ்ந்தான்
அவனைக் காக்கவேண்டிய என் கரங்களோ அப்போது துணையிருக்கவில்லை.
என் நாட்டுக்கு நான் திரும்ப மாட்டேன்
எனக்காக என்ன இருக்கிறது அங்கே?
வல்லமை மிக்க ஹெக்டரால் என் தோழர்கள் கொல்லப்பட்டபோது
என் நண்பன் அவனால் வீழ்த்தப்பட்டபோது
துணையிருக்க என்னால் முடியவில்லை
பூமிக்குச் சுமையாக நங்கூரமிட்ட கப்பல்களில்
வீணாக இருந்தேன் நான்.
சபையில் எனக்கு மதிப்பில்லாமலிருக்கலாம்.
கிரேக்கர்களில் நானே நிகரற்ற வீரன்.
பொறாமையே! ஒழிந்து போ
மனிதர்களிடமிருந்தும் கடவுள்களிடமிருந்தும்.
கோபமே! கூடவே ஒழி.
நீதியுள்ள மனிதனின் இதயத்தைக்கூட
அது கடினமாக்கிவிடுகிறது.
ஆன்மாவில் புகையென எழுந்து கரிபடியச்செய்கிறது
தேன் துளிகளை விட இனிமையாக ருசிக்கவும் செய்கிறது
அகமெம்னான் என்னுள் உருவாக்கிய கோபமும் அப்படித்தான்!
மாவீரன் ஹெக்டர் கொல்லப்பட்டபோது ட்ரோஜன்கள் கொள்ளும் உக்கிரமான துக்கம், பல்வேறு கையறுநிலைப் பாடல்களாக இலியட்டில் வருகிறது. ஹெக்டரின் உடலை அக்கிலிஸிடமிருந்து மீட்டுக்கொண்டுவருகிறார் ஹெக்டரின் தந்தையான ப்ரியம். அப்போது ஹெக்டரின் மனைவி அழும் கையறுநிலைப் பாடலும் இக்காவியத்தின் சிறந்த பகுதிகளில் ஒன்று.
ஹெக்டரின் சடலத்தைக் கழுதைமேல் வைத்துக்கட்டி ப்ரியம் கொண்டுவருகிறான். பெர்காமஸ் மலைமேல் ஏறி நின்று அதை ஹெக்டரின் தங்கை காஸண்ட்ரா பார்க்கிறாள். டிராய் நகரம் முழுக்கக் கேட்கும்படி அவள் அலறுகிறாள்
ட்ரோஜன்களே! டிராய் நகரப் பெண்களே!
இதுவரை நீங்கள் பார்த்ததெல்லாம்
வென்று மீளும் ஹெக்டரை.
அவனை வரவேற்றுப் பாடினீர்கள் கொண்டாடினீர்கள்
அது உண்மையென்றால்
வந்து பாருங்கள் அவனை இப்போது.
அவள் அப்படி அலறியதும் டிராய் நகரமே துக்கத்தில் மூழ்கியது. அனைவரும் வாசல்களுக்கு ஓடிவந்து அவன் சடலத்தைப் பார்த்தார்கள். அவன் உடல்மேல் விழுந்து தங்கள் முடியைப் பிய்த்துக்கொண்டு கதறியழுதார்கள். ப்ரியம் அவர்களிடம் கெஞ்சி மன்றாடி அரண்மனைக்குச் சென்று சேர்ந்தார்.
ஹெக்டரின் மனைவி ஆண்ட்ரோமக்கி கணவனின் சடலம் மேல் விழுந்து அழுதாள்.
என் துணைவனே! இளமையிலேயே இறந்தாய்
என்னை இப்போதே விதவையாக்கி
உன் இல்லத்தில் விட்டுச்சென்றாய்.
நாம் தீவினைசெய்த பெற்றோர்.
நம் மகனோ இன்னும் சிறு குழந்தை.
அவன் வாலிபனாக வளர்வானென்றே நான் இப்போது நம்பவில்லை
அதற்கு முன்னாலே இலியம் தரைமட்டமாகிவிடும்
இந்தக் கோட்டையின் காவலனே நீ தானே?
இந்த மக்களுக்கும் குழந்தைகளுக்கும் ரட்சகன் நீயல்லவா?
நமது பெண்கள் சிறைப்பிடிக்கப்பட்டுக்
கப்பல்களுக்குக் கொண்டுசெல்லப்படுவார்கள்.
நானும் அவர்களுடன் இருப்பேன்.
என் அருமை மகனும் குரூரமான உரிமையாளனிடம்
அடிவாங்கி ஊழியம் செய்யும் அடிமையாவான்.
அல்லது தன் மகனுக்கோ சகோதரனுக்கோ நண்பனுக்கோ
பழிவாங்கும் வெறியுடன் இங்கே வரும்
ஏதேனும் கிரேக்கவீரன் இவனைக்
காலைப்பிடித்துச் சுழற்றிக்
கோட்டைக்கு வெளியே எறிவான்.
ஹெக்டர் அவர்களைக் கொன்றிருப்பான்.
அவன் கையால் மண்ணில் விழுந்தவர்கள் எத்தனையோ!
ஆகவேதான் இங்கே ஒவ்வொருவரும் கதறுகிறார்கள்
ஓ ஹெக்டர்!
உங்கள் பெற்றோருக்கு எத்தகைய பெருந்துயரத்தை அளித்துவிட்டீர்கள்!
ஆனால் என் துயரமோ அனைத்தையும்விடப் பெரிதல்லவா?
ஏனென்றால் மெல்லியபடுக்கையில் கிடந்து
என்னைத் தழுவக் கைநீட்டியபடி நீங்கள் சாகவில்லையே
இன்றும் இனிமேலும் இரவுபகலாக நான் நினைவில் வைத்துக்
கண்ணீருடன் சொல்லிக்கொள்ளும் எந்த வார்த்தையும்
நீங்கள் தந்து செல்லவில்லையே’


4

நாடகத்தருணம்



‘நாடகாந்தம் கவித்வம்’ என்ற ஒரு சொல்லாட்சி உண்டு. நாடகீயத்தன்மையின் உச்சமே சிறந்த கவிதை. கம்பராமாயணத்தில் நாம் காண்பதெல்லாம் உயர்தர நாடகீயத் தருணங்களை. இலியட்டிலும் பல உச்சகட்ட நாடகத் தருணங்கள் உள்ளன. அக்கிலிஸுக்கும் அகமெம்னானுக்கும் உருவாகும் மோதல், அக்கிலிஸை அவன் தாய் உட்பட உள்ள தேவதைகள் சமாதானப்படுத்துவது, நண்பன் கொலைசெய்யப்படும்போது அக்கிலிஸ் கொள்ளும் கோபாவேசவெறி எல்லாமே நாடகத்தன்மை மிக்க இடங்கள்.
ஆனால் கடைசியில் ஹெக்டரைக் கொன்று அந்தச் சடலத்தை அக்கிலிஸ் அவமதிப்பதே நாடகத்தன்மையின் உச்சம். இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் பிற்காலக் காவியங்களில் கதைநாயகன் அறத்தைக் காக்கவே வீரத்தை கைக்கொண்டிருப்பான். அறமும் வீரமும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும். அறத்தின் செயல்பாடே வீரமாக அறத்தின் ஆயுதமே வீரமாக இருக்கும். அர்ஜுனனும் ராமனும் எல்லாம் அறநாயகர்கள். ஆனால் அக்கிலிஸ் அப்படி அல்ல. அவன் வீரன், அவ்வளவுதான். அவன் போரிடுவது அவனுடைய சொந்த ஆணவத்திற்காக, புகழுக்காக, பழிக்காக மட்டுமே.
அவ்வாறு போரிட்டு வெல்லும்போது ஹெக்டரின் பிணத்துடன் அவன் நடந்துகொள்வதை இன்று கற்பனைசெய்வதே கடினமாக இருக்கிறது. ஹெக்டரைக் கொன்றபின் தொடர்ச்சியாகப் பதினோரு நாட்கள் அந்தச் சடலத்தைத் தன்னுடன் வைத்திருக்கிறான் அக்கிலிஸ். நமது புராணங்களில் உள்ளது போல அந்தியானதும் போர் முடிவுற்று இருசாராரும் சேர்ந்து இறந்தவர்களை எரிப்பதோ புதைப்பதோ இல்லை. இருசாராரும் சேர்ந்து ஈமக்கடன்கள்செய்வதில்லை. விரோதம் சடலத்திடமும் தொடர்கிறது.
கிரேக்கப்படைகள் நடுவே தனியாக மாட்டிக்கொள்கிறான் ஹெக்டர். சளைக்காமல் போர் புரிகிறான். கடைசியில் ஆயுதமில்லாமல் அக்கிலிஸின் முன் வீழ்கிறான். அவன் உடம்பெங்கும் வெண்கலக் கவசம். கழுத்து மட்டும் மூடாமலிருக்கிறது. அந்தக் கழுத்தில் தன் ஈட்டியைச்செலுத்தி அவனைக் கொல்கிறான் அக்கிலிஸ். ‘பெட்ரோகுலஸை நீ நிர்வாணப்படுத்தியபோது நீமட்டும் பாதுகாப்பாக இருக்கப்போவதாக நினைத்தாய் அல்லவா? அப்போது நீ என்னை நினைக்கவில்லை.அவனைவிடச் சிறந்த வீரன் ஒருவன் அவனுக்காக பழிதீர்க்கக் காத்திருக்கிறான் என நீ உணரவில்லை… இப்போது உன்னை நாய்களும் பிணந்தின்னிகளும் சிதைக்கப்போகின்றன. அதன்பின்னரே நாங்கள் பெட்ரோகுலஸை அடக்கம்செய்வோம்’ என்று கொக்கரிக்கிறான். எந்த அறவிவாதமும் இல்லை. வெறும் வீரக்கொப்பளிப்பு.
ஹெக்டர் மன்றாடுகிறான். ‘உன்னை நான் வேண்டிக்கேட்கிறேன். உன் பெற்றோரின்மேல் ஆணையிட்டுக் கெஞ்சுகிறேன். என் உடலை கிரேக்க கப்பல்களின் அருகே நாய்களுக்கு உணவாக விட்டுவிடாதே. என் பிணைத்தொகையைப் பெற்றுக்கொண்டு என் உடலை என் பெற்றோருக்குக் கொடுத்துவிடு. என் பெற்றோர் நீ கேட்டதைத் தருவார்கள். டிரோஜன் வீரர்கள் என்னை முறைப்படி எரிக்க விடு.’
ஆனால் ஹெக்டரை நோக்கிக் காறித் துப்பி அக்கிலிஸ் சொல்கிறான், ‘நாயே, என் காலைப்பிடித்து மன்றாடாதே. பெற்றோரைப்பற்றிச் சொல்லி என் மனதைக் கரைக்க முயலாதே. உன்னை வெட்டி வெட்டித் தின்னவே என் மனம் கூறுகிறது. நாய்களை உன்னிடமிருந்து நான் விரட்டப்போவதில்லை. உன் எடையைவிடப் பத்துமடங்கு பிணை கொடுத்தாலும் உன் உடலைக் கொடுத்துவிடமாட்டேன். நீ நாய்களால் உண்ணப்படுவாய். கழுகுகளால் கிழிக்கப்படுவாய்.’
ஹெக்டர் சொன்னான் ‘உன் இதயம் இரும்பாலானது. உன்னிடம் பேசி என் மூச்சு வீணானது. நீ செய்தவைக்காகக் கடவுள்கள் கோபம் கொண்டால் உன் மரணம் என் தம்பி கையால் நடக்கும்.’ அந்தச் சாபம் நடந்தது. பின்னர் அக்கிலிஸைக் கொல்ல அப்பல்லோ பாரிஸுக்கு உதவிசெய்தார். ஹெக்டர் இறந்தான்.
கிரேக்கர்கள் ஓடிவந்தார்கள். ஹெக்டரின் அற்புதமான உடல்கட்டைப் புகழ்ந்தபடி எக்காளமிட்டுச் சிரித்தபடி அவன் உடலை அவர்கள் ஈட்டியால் குத்திக் குத்திச் சிதைத்தார்கள். ‘நம் கப்பல்களை எரித்தபோது இருந்ததை விட இவன் மென்மையாக இருக்கிறான்’ என்று கூச்சலிட்டார்கள்.
அக்கிலிஸ் ஹெக்டரின் பாதங்களின் பின்னால் குதிகாலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் இருந்த சதையை நார்நாராக வெட்டினான். அதற்குள் மிருகத்தோலால் செய்யப்பட்ட வார்களை விட்டு ஹெக்டரின் கால்களைத் தன் தேரோடு இணைத்தான். தலை மண்ணில் தொங்கிக் கிடந்தது. பின்னர் தன் தேரில் ஏறிக் குதிரைகளைச் சாட்டையால் சொடுக்கி முடுக்கி சுற்றி ஓட்டினான். பின்னால் வந்துகொண்டிருந்த உடலில் இருந்து மண்ணும் புழுதியும் பறந்தது.ஹெக்டரின் அழகிய கரிய முடி இருபுறமும் பிரிந்து பறந்தது. அவன் தலை,புழுதிக்கூளமாக ஆகியது.
அதைக் கோட்டைமேல் இருந்து டிரோஜன்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தன் மைந்தனின் உடம்பு அப்படி இழுபடுவதைக் கண்டு ஹெக்டரின் அம்மா கதறி அழுதாள். அவன் அப்பா மனவேதனையுடன் முனகிக் கண்ணீர்விட்டார். நகரமே திகைத்து அழுதது.இலியம் கோட்டையே வெந்துருகியதுபோல் ஆனது. வெறிகொண்ட ஹெக்டரின் தந்தை ப்ரியம் நேராக ஓடி லாயத்திற்குச்சென்று குதிரைச் சாணத்தை அள்ளித் தன் உடலெங்கும் பூசிக்கொண்டு கதறி அழுதார்.
பத்து நாள் அப்படி சடலத்தைச் சீரழித்தான் அக்கிலிஸ். பெட்ரோக்குலஸை அடக்கம் செய்தார்கள். அவனுக்காக விளையாட்டுப்போட்டிகள் வைத்தார்கள். ஆனால் அதன்பின்னரும் அக்கிலிஸின் கோபம் அணையவில்லை. அவன் பெட்ரோக்குலஸின் புதைகுழியைச் சுற்றி ஹெக்டரின் சடலத்தை இழுத்துச் சென்றான். இரவும் பகலும் நண்பனை எண்ணி அழுதான். கண்ணீருடன் தூக்கமில்லாமல் புரண்டான்.
பன்னிரண்டாம் நாள் அப்போலோ சக கடவுள்களிடம் கோபமாகச் சொன்னார். ‘இன்னுமா உங்கள் மனம் இரங்கவில்லை? உங்களுக்கு அற உணர்ச்சியே இல்லையா? ப்ரியமும் அவன் மகனும் அளித்த வெள்ளாட்டுப்பலியையும் மதுவையும் மறந்துவிட்டீர்களா? அந்தச் சடலத்தை அவன் தந்தையிடம் கொண்டுசேர்க்க என்ன செய்யப்போகிறீர்கள்?’ அதன்பின் கடவுள்கள் கூடி அக்கிலிஸின் அன்னை தீட்டிஸை அழைத்து அக்கிலிஸிடம் தூதுபோகச் சொன்னார்கள்.
தீட்டிஸ் மகனிடம் சமாதானம் பேசுகிறாள். தனக்கு நிறைவூட்டு பிணைப்பொருட்களை கொடுத்துவிட்டு ஹெக்டரின் சடலத்தைக் கொண்டுபோகலாம் என அக்கிலிஸ் சம்மதிக்கிறான். ப்ரியம் பரிசுப்பொருட்களுடன் அக்கிலிஸைப் பார்க்கவரும் காட்சி எந்த ஒரு நவீன நாவலை விடவும் உக்கிரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அக்கிலிஸ் தன் வழக்கமான குடிசைக்குள் இருக்கிறான். அக்கிலிஸ்,சாப்பிட்டு முடித்து ஏதோ குடித்துக்கொண்டிருக்கிறான். அவனது சாப்பாட்டு மேஜையை இன்னும் எடுத்துச்செல்லவில்லை. அக்கிலிஸ் கவனிக்காமல் தன் தோழனை நினைத்துத் துயரில் ஆழ்ந்திருந்தபோது மாமன்னராகிய ப்ரியம் மெல்லக் குடிசைக்குள் நுழைந்து அக்கிலிஸின் முழங்காலருகே அமர்ந்து, தன் பிள்ளைகளைக் கொன்ற அவன் கையை எடுத்து மென்மையாக முத்தமிட்டார்.
அக்கிலிஸ் ப்ரியமைக் கண்டு மிரள்கிறான். ஊரில் கொலை செய்துவிட்டு வேற்றூரில் ஒளிந்திருப்பவன், அங்கிருப்போரால் விசித்திரமாகப் பார்க்கப்படும் போது அடையும் மருட்சியைப்போன்றது அது என்கிறார் ஹோமர். குற்றவுணர்ச்சியின் திகைப்பு அது. ஹெக்டரின் சாயலை அவன் ப்ரியம் முகத்தில் கண்டிருக்கலாம். ப்ரியம் சொன்னான். ‘கடவுளுக்கு நிகரான அக்கிலிஸ், உன் அப்பாவை நினைத்துக்கொள். அவருக்கும் எனக்கும் ஒரே வயதுதான்.அவரும் பரிதாபமாக முதுமையின் வாசலில் நிற்கிறார். அவருக்கும் அங்கே ஆயிரம் துயரங்கள் இருக்கும். ஆனாலும் நீ உயிருடன் இருக்கிறாய் என்று அவர் மகிழ்வார். நீ திரும்புவாய் என அவர் காத்திருப்பார்.’
‘ஆனால் என் வாழ்க்கையை விதி சீரழித்துவிட்டது. இந்த தேசத்தின் மிகச்சிறந்த பிள்ளைகளை நான் பெற்றேன். ஆனால் அவர்களில் ஒருவர்கூட இப்போது இல்லை. அந்தக் கோட்டைக்குள் என் மக்கள் ஐம்பதுபேர் இருந்தார்கள். அவர்களில் பத்தொன்பதுபேர் ஒருதாய்வயிற்றுப்பிள்ளைகள். அத்தனைபேரும் இறந்துவிட்டார்கள். அவர்களில் ஒரே ஒருவனை நான் நம்பியிருந்தேன். அவன் என் மகன் ஹெக்டர். அவனை நீ கொன்றுவிட்டாய். அக்கிலிஸ்!கடவுள்களுக்கு மரியாதை கொடு. என் மேல் கருணை காட்டு. ஏனென்றால் எந்தத் தந்தையும் செய்யாததை நான் செய்திருக்கிறேன். மகனைக் கொன்ற கைகளை முத்தமிட்டிருக்கிறேன்’ என்று சொல்லி ப்ரியம் ஓசையிட்டுக் கதறி அழுதான்.
அக்கிலிஸ் மனமுருகிவிட்டான். ‘இங்கே எப்படி வந்தீர்கள்? அதிலும் உங்கள் மக்களைக் கொன்றவனைக் காண? உங்கள் இதயம் இரும்பாலானதுதான். நானும் உங்களைப்போன்றே துயரம் கொண்டவன்தான். அழுதழுது களைத்துவிட்டேன், அழுகையினால் ஆகப்போவது ஏதுமில்லை. ஜீயுஸ் கடவுள் தன் அரண்மனையில் இரு ஜாடிகளை வைத்திருக்கிறார். ஒன்றில் அமுதம் ஒன்றில் விஷம். இரண்டையும் கலந்தே அவர் மனிதர்களுக்குப் பரிசுகளை அளிக்கிறார். ஆனால் சிலசமயம் அவர் விஷ ஜாடியில் இருந்து மட்டும் எடுத்துக் கொடுத்துவிடுகிறார்’ என்று அக்கிலிஸ் சொன்னான்.
‘பொறுத்துக் கொள்ளுங்கள். முடிவின்றித் துயரப்படாதீர்கள். உங்கள் மகனுக்காக அழுவதனால் அவனுக்கேதும் நன்மை இல்லை. அவனை இனி உயிருடன் மீட்க முடியாது. அதற்குள் நீங்களும் இறப்பீர்கள்’ எனக் கொன்றவன் செத்தவனின் தந்தைக்கு ஆறுதல் சொன்னான். ப்ரியம், தன் பரிசுப்பொருட்களை அள்ளி முன்னால் வைத்து ‘என் மகனைக் கொடுத்துவிடு. அவன் சடலம் நாறிக்கிடக்கையில் என்னால் இளைப்பாற முடியாது‘ என்று கேட்டான்.
அக்கிலிஸ் கோபம் கொண்டான். ‘நானே அந்தச் சடலத்தை உங்களுக்குத் திருப்பி அளிப்பதாக இருந்தேன். உங்கள் பரிசுகள் எனக்கு முக்கியமில்லை. நான் அந்த உடலைத் திருப்பி அளிப்பது என் மனச்சாட்சிக்காக’ என்றான் . குடிலைவிட்டுச் சென்று பணிப்பெண்களை அழைத்து ஹெக்டரின் உடலை நறுமணநீரில் கழுவி வெண்பட்டில் பொதியும்படி ஆணையிட்டான். அந்த உடலைப் பளபளக்கும் சவப்பெட்டியில் வைத்தபின் திரும்பிவந்து ப்ரியத்திடம் ‘உங்கள் மகனின் சடலத்தை எடுத்துச்செல்லலாம். அது நல்ல வண்டியில் வைக்கப்பட்டுள்ளது’ என்றான்.
அதன்பின் ப்ரியத்தை அக்கிலிஸ் சாப்பிட அழைத்தான். ப்ரியம் அதை மறுக்கவில்லை. அக்கிலிஸ் ஒரு வெள்ளைச்செம்மறியாட்டை அறுத்தான். அதைத் துண்டுகளாக வெட்டிச் சமைத்து ரொட்டிகளுடனும் மதுவுடனும் கொண்டுவந்து ப்ரியம் முன் வைத்தார்கள். ப்ரியம் அவற்றை உண்டான். பசியாறிய பின் அவன் அக்கிலிஸை முழுமையாகப் பார்த்தான். எவ்வளவு அழகன், எவ்வளவு வலிமையானவன் என நினைத்துக்கொண்டான். அதேபோல ப்ரியத்தின் உயரத்தையும் கம்பீரத்தையும் பார்த்து அக்கிலிஸ் வியந்தான்.
ப்ரியம் கிளம்பினான் ‘என்னை விடைகொடுத்து அனுப்பு. நான் என் மகன் கொல்லப்பட்ட பின் இதுவரை தூங்கவில்லை. எதுவும் உண்ணவில்லை. என் உடலெல்லாம் குதிரைச்சாணத்துடன் பித்தனாகக் கூச்சலிட்டுக்கொண்டிருந்தேன். இனி நான் என் கோட்டைக்குச் செல்லவேண்டும். இந்த நல்ல மதுவின் போதையில் கொஞ்சம் இளைப்பாறவேண்டும்’ ‘இல்லை. நீங்கள் இப்போது இப்படியே செல்ல முடியாது. இங்கேயே குடிலுக்கு வெளியே உறங்குங்கள். நாளைக்குச் செல்லலாம்’ என்றான் அக்கிலிஸ். அதை ப்ரியம் ஏற்றான்.
அக்கிலிஸ் ப்ரியத்துக்குக் குளிருக்குப் போர்த்திக் கொள்ளக் கம்பளியும் உயர்தர மெத்தையும் அளித்தான். ‘பெரியவரே! ஹெக்டருக்காக எத்தனை நாள் துக்கம் அனுஷ்டிக்கப்போகிறீர்கள்? அந்நாட்களில் நாங்கள் போர் புரியாமலிருப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்’ என்றான். ‘பன்னிரண்டு நாட்கள் நாங்கள் துக்கம் அனுஷ்டிப்போம். அப்போது கோட்டையை விட்டு இறங்கி மலைகளுக்குச் செல்வோம். அதற்கு அனுமதி தேவை’ என்றான் ப்ரியம். அக்கிலிஸ் ‘ஆம், அப்படி செய்வோம்’ என உறுதி அளித்தான்.
கொன்றவனும் இழந்தவனும் சேர்ந்து அருந்தும் இந்த விருந்துதான் இலியட்டின் உச்சம். உலகின் மிகச்சிறந்த நாடகத்தருணங்களில் ஒன்று. ஒரு எளிய வீரகதையைப் பெருங்காப்பியமாக்கும் இடம் இதுவே.

No comments: