அறிமுகம் : தஸ்லீமா நஸ்ரீன் எனும் கவி
தஸ்லீமா நஸ்ரீனின் எழுத்துக்கள் அதிகம் அறியப்பட்டதும் அவர் பற்றிய மதிப்பீடுகள் இந்திய அளவிலும் தமிழகச் சூழலிலும் அறிமுகமானதும் அவரது நாவல் லஜ்ஜா ஏற்படுத்திய அரசியல் விவாதங்களை முன்வைத்தது என்பதை நாம் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது. லஜ்ஜா தவிரவும் அவரது எழுத்துக்கள் எதுவும் ஆங்கிலத்திலோ பிற மொழிகளிலோ மொழி பெயர்க்கப்பட்டு அதிகமாக அறியப்படவில்லை என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும். இன்னும் ஆனந்த புரஸ்கார் விருது பெற்ற அவரது எழுத்துக்கள் கூட நமக்கு ஆங்கிலம் வழியிலோ பிற வகையிலோ கிடைப்பதில்லை. ஆகவே இலக்கியவாதிகளைப் பொறுத்த மதிப்பீடுகள் மதிப்பீடுகள் அனைத்தும் அவரது லகஜா நாவலின் அடிப்படையில் அமைந்ததாகும். அரசியல்வாதிகளைப் பொறுத்த மதிப்ப்ீடுகள் குரான் சமகாலத்துக்குப் பொருத்தமற்றது எனும் அவரது கடுமையான கடுமையான விமர்சனத்தின் பாற்பட்டு அமைவதாகும்.
லஜ்ஜா நாவல் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை வங்கத்தின் புகழ்வாய்ந்த படைப்பாளிகளான புத்ததேவ் தாஸ்குப்தா, மிருணாள் சென், அபர்ணா சென், நபனிதா தேவ்சென் போன்றவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த நாவல் பங்களாதேஷிலும் அதைத் தொடர்ந்து இலங்கையிலும் தடை செய்யப்பட்டது. இலங்கையில் பிரபல பெண்ணிலைவாதி குமாரி ஜெயவர்த்தனா இந்நாவல் மீதான தடை நீக்கப்பட வேண்டும் எனக் குரல் கொடுத்திருக்கிறார்.
தஸ்லீமா நஸ்ரீன் மீதான இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கொலை மிரட்டலைக் கண்டித்து உலகளவில் தஸ்லீமாவுக்கு ஆதரவாக ஸல்மான் ருஸ்டி, முல்க்ராஜ் ஆனந்த், குந்தர் கிராஸ், மரியா வர்கஸ் லோஸா, சுமித் சக்கவவர்த்தி ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
தஸ்லீமா மீதான கொலை மிரட்டலைக் கண்டித்தாலும்கூட ஆஸ்கர் அலி என்ஜினியர் போன்ற இடதுசாரி இஸ்லாமியக் கோட்பாட்டாளர்கள் படைப்பாளி எனும் அளவில் அவரது விமர்சனப் பார்வையை ஒப்புக் கொள்ள மறுக்கவே செய்கிறார்கள்.
இவ்வகையில் தஸ்லீமாவின் படைப்பாளுமையில் முக்கிய இடம் பெறுகிற அவரது கவிதைகள் அநேகமாக இந்தப் பரபரப்பாண விவாதங்களில் இலக்கிய வட்டாரங்களில் அதிகம் கவனம் பெறவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.
ரவீந்திரநாத் தாகூருக்குப் பின் வங்க மொழியில் எழுதுபவர்களில் உலக அளவில் அறிமுகமானவர் என தஸ்லீமா நஸ்ரீன் பற்றிக் குறிப்பிடுவார்கள். இவரது படைப்புக்கள் பற்றி வங்காளத்தின் பிரபல படைப்பாளர்களே மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கிறார்கள். இவரது உரைநடை எழுத்துக்களில் ஆழமில்லை எனும் வங்க விமர்சகர்கள் இவரது கவிதைகளில் இவர் தலை நிமிர்ந்து நிற்கிறார் என்கிறார்கள்.
வங்கமொழி விமர்சகர்களிடம் அதிக மரியாதையைப் பெற்றிருப்பதும் உலக அளவில் பெண்ணிலைவாதிகள் மத்தியில் அவர் அறியப்பட்டிருப்பதும் அவரது கவிதைகளின் மூலம் தான்.
அவரது கவிதைகள் முற்றிலும் அகவயமான கவிதைகள். ஓவியத்தில் மெக்சிக்கோ பெண் ஓவியர் பிரைடோ கலோவிடம் வெளிப்படும் முற்றிலும் தனிமையான அனுபவம் சார்ந்த அவரது படைப்புகள் போலவே முற்றிலும் தனிமை சார்ந்த கவிதைகள் தஸ்லீமாவின் கவிதைகள்.
தஸ்லீமா பெண் எனும் அளவில் அவரது ஸ்திதி குறித்த கேள்விக்கான பதில்களை அடிப்படையில் தனது உடலை அறிவது அதன் வழி தன்னையும் தான் சார்ந்திருக்கும் சகமனிதரையும் தொடர்ந்து சமூகத்தையும் அறிவது என்னும் வகையில் கவிதையில் தேடிச் செல்கிறார்.
தஸ்லீமாவின் கவிதைகளில் சமூக அனுபவம் கவிதையாகியிருப்பது என்பது மிகவும் சொற்பம் தான். அவருடைய பெரும்பாலான கவிதைகள் பாலுறவு அனுபவம் சார்ந்தவை. பாலுறவில் இடம்பெறும் வன்முறை, சந்தோஷம், ஆசை, தனிமை சார்ந்தவை.
ஆண் பெண் உறவின் ரகசியமான தருணங்களையும் அதனுள் இடம் பெறும் குளிர் போலும் உறைந்த வன்முறையின் தடங்களையும் மிக நுணுக்கமாக தஸ்லீமா அறிந்து சொல்லியிருக்கிறார். தஸ்லீமாவின் கவிதைகளை ஒரு சேரப் படித்துப் பார்ப்பவர்கள் அவரது கவிதைகளில் தொனிக்கும் தனிமைத் துயரையும் உலக அளவில் அவரது கவிதைகளில் விசேஷமாக இயங்கும் - மதங்கள் அனைத்திலும் பொதுவாக இருக்கும் பெண் உடலுக்கு எதிரான குரூரமான வன்முறை குறித்த விமர்சனத்தை மதங்கள் கடந்து பெண்ணின் பொது அனுபவமாக அவர் உருவாக்கியிருப்பதை நாம் காணமுடியும்.
மார்க்சியத்தில் நம்பிக்கையுள்ளவராகத் தன்னை உணரும் தஸ்லீமாவின் மதங்களின் பாலான வெறுப்பு என்பது பெண் உடலின் மீதான அடிப்படையான மதங்களின் வெறுப்பு, அருவருப்பு, விலக்கம் போன்றவற்றின் மீதான கடுமையான கோபத்தின் பாற்பட்டதாகும்.
இஸ்லாமின் மீதான அவரது வெறுப்பு என்பது உடனடியில் அவர் வாழ நேர்ந்த சமூகச் சூழலின் மேலான வெறுப்பாகும். இந்த வெறுப்பு இவருக்கு சம அளவில் எல்லா மதங்களின் மீதும் மதவாதிகளின் மீதும் மதப் புத்தகங்களின் மீதும் இருக்கிறது.
வங்க மொழி தவிர்த்து அவரது கனிசமான கவிதைகள் இவ்வாறாகத் தொகுக்கப்பட்டிருப்பது உலக மொழிகளிலேயெ தமிழில் இத் தொகுப்பில்தான் என நான் நினைக்கிறேன். ஏனெனில் அவரது கவிதைகளைத் தொகுக்கிற இந்த நோக்கத்தை நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன்.
1994 ஆம் ஆண்டு கல்கத்தா ஸண்டே பத்திரிக்கையில் வெளியான பூச்சியின கதை கவிதையை உடனடியாகவே மொழிபெயர்த்து இலண்டனிலிருந்து வெளியாகும் நாழிகை பத்திரிக்கையில் வெளியிட்டேன்.
சில கவிதைகளை அமெரிக்க இலக்கியப் பத்திரிக்கையான இந்தியானா ரிவியூ, பிரான்ஸை மையமாகக் கொண்ட தஸ்லீமாவின் வலைத்தளம், அமெரிக்க ஆசியப் பெண்களின் வலைத்தளமான சவுத் ஆசியன் வுமன்ஸ் நெட்வொர்க் அமெரிக்கப் பகுத்தறிவாளர்களின் ஹியூமனிஸ்ட் வலைத்தளம், இன்டக்ஸ் ஆன் சென்ஸர்ஷிப், லண்டன் ரிவியூ ஆப் புக்ஸ் இதழ்கள் போன்றவற்றிலிருந்து எடுத்துக் கொண்டேன். இக்கவிதைகளை அமெரிக்க தமிழ் வலைத்தளமான திண்ணைக்காக மொழிபெயர்த்து வெளியிட்டேன்.
அமெரிக்காவிலிருந்து கரோலின் ரைட் தொகுத்த த கேம் இன் ரிவர்ஸ் புத்தகத்திலிருந்தும் சில கவிதைகளைத் தேர்ந்தேன். தஸ்லீமாவின் சர்ச்சைக்குரிய நாவலான லஜ்ஜா குறித்த அறிமுகத்தையும் இப்புத்தகத்தின் இறுதியில் சேர்த்திருக்கிறேன்.
இவ்வாறு தஸ்லிமா நஸ்ரீன் எனும் ஆளுமை குறித்தும் அலரது எழுத்துக்களைப் பற்றிய விவாதங்கள் குறித்துமான பின்னணியையும் முழுமையாக இந்நுாலில் தர முயற்சி செய்திருக்கிறேன்.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான தஸ்லீமா நஸ்ரீனின் கவிதைகள் அனைத்துமே ஐம்பதுக்குள்தான் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். இந்த ஐம்பது கவிதைகளிலிருந்து அவர் ஆரம்ப நாட்களில் எழுதிய கவிதைகளில் தொடங்கி 2001 வரை அவர் எழுதியவற்றில் சிறப்பானதென்று நான் கருதுகிற என்னை ஆகர்ஷித்த நாற்பது கவிதைகளை இத்தொகுப்பில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன்.
தஸ்லீமா அவரது கவிதைகளில் பெண் உடலை இயற்கையின் வாசிப்புக்கு உரியதாக உணர்கிறார். அவரைப் பொறுத்து பெண் உடலின் கொண்டாட்டம் என்பதும் விமோசனம் என்பதும் பெண்ணிண் முழமையான ஆளுமையின் விமோசனத்திலிருந்து பிரிக்க முடியாததாகும். இதுவே தஸ்லீமா நஸ்ாீன் கவிதைகளின் தனித்தவமும் விசேஷமும் என்று தோன்றுகிறது.
பதினெட்டு கவிதைகள்
பீரங்கித் தாக்குதல்
சிறப்புப் பிரிவுக் காவலர்கள்
எனது வாசல் கதவின் முன்பாக
இருபத்தி நாலு மணி நேரமும் காவலிருக்கிறார்கள்
யார் வருகிறார்கள்
யார் போகிறார்கள் எனப் பார்த்துக் கொண்டு
நான் வெளியில் போவதை
நான் திரும்பி வருவதைப் பார்த்துக் கொண்டு
அனைத்தையும் அவர்கள்
தமது குறிப்புப் புத்தகத்தில்
பதிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
யார் எனது நண்பர்கள்
நான் சிரித்துக் கொண்டு
யாருடைய இடுப்பைத் தழுவுகிறேன்
யாருடன் நான் முணுமுணுக்கிறேன் என
அனைத்தையும்
ஆனால் அவர்களின் நோட்டுப் புத்தகத்தில்
புதிய முடியாதிருப்பது
என் சிந்தனைக்குள் என்ன வந்துபோகிறது
நான் எனது பிரக்ஞையுள்
எதை வரித்துக் கொண்டிருக்கிறேன்
என்பதை மட்டுந்தான்
துப்பாக்கிகளும்
பீரங்கிகளும் கொண்டிருக்கிற அரசுக்கு
கொசு போன்ற நான்
அச்சுறுத்தலாக இருக்கிறேன்.
**********************
சுயசித்திரம்
எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை
ஆச்சரிய விழிகளால்
நான் இயற்கையைப் பார்க்கிறேன்.
முன்னேற்றத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு
நான் எவ்வளவுதான் முன்னோக்கிப் போனாலும்
சமூகத் தீமைகள்
என் கால்களைப் பற்றி இழுக்கிறது
மெல்ல மெல்ல
என்னைப் பின்னிழுத்துவிடுகிறது.
நள்ளிரவில்
இந்த நகரத்தின் எந்த முலைக்கும்
நடக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்
எங்கேயும் அமர்ந்து
அழ வேண்டுமென நான் விரும்புகிறேன்
எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை
வீட்டுக்கு வீடு இந்த மதவெறியர்கள்
ரகசியமாக நமக்கிடையில் வேற்றுமையை விதைத்து நம்மையெல்லாம் பிரித்துவிட்டார்கள்
மனித குலததிருந்து
பெண்ணைத் தனியே பிரித்துவிட்டார்கள்
நான் பிளவுபட்டவளாகி நிற்கிறேன்
மனித உரிமைகளினின்று நான்
வஞ்சகமாகத் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறேன்
சாகசம் பொருந்திய அரசியல்வாதி
வர்க்கச் சுரண்டல் பற்றிக் கொட்டி முழக்குகிறபோது
பெருங் கைதட்டல் பெறுகிறான்
ஆனால்
தந்திரமாகப் பெண் சுரண்டல் குறித்த
எல்லாச் சொற்றொடர்களையும்
அவன் தவிர்த்து விடுகிறான்.
அப்பெண்கள் அனைவருமே
நானறிந்த அளவில்
நல்ல குணம் கொண்டவர்கள்
உலகெங்கும் மதமானது தனது
பதினெட்டு கொடுக்குகளையும் பரப்பிக் கொண்டிருக்கிறது
எனது சுழற்றலில்
தனிமை மிக்க எனது போராட்டத்தில்
எத்தனை எலும்புகளை என்னால் தகர்க்க முடியும்?
விரிந்து பரந்திருக்கம்
இந்த வலையின் சுரண்டல் கண்ணிகளில்
எத்தனையைத் தான் நான் அழிக்க முடியும்?
**********************
புல்லாங்குழல்
மாடு மேய்க்கும் சிறுவர்கள் இந்நாட்களில்
இனி புல்லாங்குழல் வாசிக்கப் போவதில்லை
அவர்கள்
ஹூக்கா புகைத்து இறுமிக் கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் நெஞ்சு நிறைய சளி
பசுக்களும் எருதுகளும்
விழி நிறைய துயருடன் வரண்ட தரை பார்த்து
பாரபட்ச வானம் பார்த்து
முகத்தில் கண்ணீர காய்ந்துபோய் நிற்கிறது
மதியம் வருகிறபோது
மரத்தின் மந்திர நிழல் நீள்கிறது
மாடு மேய்க்கும் சிறுவர்கள்
மூச்சுவிட அவதிப்படுகிறாரகள்
புற்களற்ற புழதி வயல்களில் அமர்ந்து
வெறித்தபடி
எரிக்கும் சூரியன் நோக்கி
அனத்திக் கொண்டிருக்கிறார்கள்
ஆசுவாச ஒலி கேட்கிறது
காற்றின் புலம்பல் சத்தம் கேட்கிறது
மிருகங்களின் தாடைகள் அசையும் ஒலி
மரணத்தின் ஒலி -
வேறு வேறு சத்தங்கள்
பற்பல சத்தங்கள் நிரம்பிய
இந்தப் பயங்கர நிலத்தில்
புல்லாங்குழல் இசை மட்டும்
இல்லாது போயிற்று
**********************
பிளவு
இவர் உனது தந்தை-
நிஜத்தில் இவர் உனக்கு அன்னியர்
இவர் உனது சகோதரர்-
நிஜத்தில் இவர் உனக்கு அன்னியர்
இவள் உனது சகோதரி
நிஜத்தில் இவர் உனக்கு யாருமில்லை
இவள் உனது தாய்
நிஜத்தில் இவர் உனக்கு யாருமில்லை
நீ தனியள்
உன்னை தோழி என்றழைக்கிறவர்கள்
அவர்களும் உனக்குச் சொந்தமில்லை
நீ தனியள்
நீ அழும்போது உனது விரல்கள்
உனது விழிகளைத் தொட்டு கண்ணீர் துடைக்கும்
அது உனது சொந்த விரல்கள்
நீ நடக்கும் போது
அது உனது சொந்தக் கால்கள்
நீ பேசும் போது
அது உனது சொந்த நாவு
நீ சிரிக்கும் போது
மகிழ்ச்சி பொங்கும் கண்கள்
அவை உனது தோழியர்
உன்னைத் தவிர உனக்கென யாருமில்லை
ஜீவராசிகளுமில்லை
செடி கொடிகளுமில்லை
ஆனால் நீ உனக்கே உனக்கென இருக்கிறாய்
என்று எப்படித்தான் சொன்னாலும்-
நிஜத்தில் நீ
அப்படி இருக்க முடிகிறதா என்ன?
**********************
தனிமையாயிருத்தலின் தவறு
எல்லாவற்றையும் மறுத்தவளாகி நான்
உள்ளும் வெளியிலும் துரத்தப்பட்டவளானேன்
கவனிக்காது விட்ட என் நகங்கள்
நீளமாக வளர்ந்து நிற்கிறன
விரல்களில் வலியெடுத்துவிட்டது
வாராமல் விட்ட
எனது கூந்தல் சிக்குப்பிடித்துக்கிடக்கிறது
எனது கைகள் ஒவ்வொன்றும்
போட்டது போட்டபடி கிடக்கிறது
இந்த விலகிய இடத்தில் நான்
தனிமையாய் இருக்கிறேன்
புகலிடத்தில் எனது தனியறையைத் தட்ட
காற்றும் பயப்படுகிறது
சில நாய்கள் நள்ளிரவில் குரைக்கும்
அல்லது நேரங்கெட்ட மதியத்தில் கத்தும்
அவைகளும் கூட ஒரு நாள் எழுந்து
மதில் தாண்டி வெளியேறிவிட்டன
தலைமுதல் கால் வரை நீ ஒரு ஏமாற்றுக்காரன்
அயோக்கியன்
உனது
எல்லாப் பொய்களும் எனக்குத் தெரியும்
மறுபடி மறுபடி
நான் குலைந்து போகிறேன்
அழுக்குத் தண்ணீரில் மூழ்கிப் போகிறேன்
எனது களங்கமற்ற உடல்
அவமானப்படுவதைப் பார்க்கிறேன்
உனது பொய்கள் பற்றி அனைவரும் அறிவர்
இத்தனையிருந்தாலும்
தனிமையின் கொடுமை கருதித்தான்
நான் உன்னிடம் வருகிறேன்
மறுபடியும் உனது கதவைத் தட்டுகிறேன்
பிறர்
தவறாக இதைக் காதல் என்று
நினைத்துக் கொள்கிறார்கள்
**********************
பிற்பாடு
வழக்கமாக என் சகோதரி
தாகூரின் அற்புதமான பாடல்களைப் பாடுவாள்
ஸூமன் தீ போவைப் படிக்க அவள் விரும்பவாள்
அவளது மதியக் குளியலை மறந்தபடி
அவள் மார்க்ஸ் கார்க்கி தோல்ஸ்தோயில்
மனிக் பந்தோபத்யாயவின்
நாவல்களினுள் முக்குளித்திருப்பாள்.
நினைவுகளில் ஆழ்ந்திருக்க விரும்பினால் அவள்
லாரா இங்கல்சின் வெயில்டரைத் தேர்வாள்
யுத்தம் பற்றி ஒரு நாடகத்தைப் பார்த்தவிட்டு வந்து
நள்ளிரவில்
அவள் கதறியதை நான் பார்த்திருக்கிறேன்.
அற்புதமான கவிதைகளைப் படிப்பவள்
அவளது விருப்பமான கவிகள்
சங்கா நிரன் நெருதா யெவ்துஷெங்கோ போன்றவராவர்
எனது சகோதரிக்கு தோட்டத்தைப் பிடிக்காது
காடுதான் அவளுக்கு விருப்பம்
சிற்பங்கள் பார்க்க அவளுக்கு விருப்பம்
அதற்காக அவள்
பாரிசுக்கும் ஓரு முறை போனாள்
இப்போது எனது சகோதரியின் கவிதை நோட்டில்
விஸ்தாரமான
காய்கறிக் கணக்கு எழுதப்பட்ருக்கிறது
உலோக ஆபரணங்கள் அணிந்தபடி அவள்
கர்வமாகத் தலையை உயர்த்தியபடி நடக்கிறாள்
இப்போதெல்லாம்
அரசியல் பற்றிச் சிந்திப்பதில்லை என அவள்
பெருமிதத்துடன் சொல்கிறாள்.
கலாச்சாரம் எக்கேடு கெட்டும் தொலையட்டும்
அதைப் பற்றிக் கவலைப்பட அவளுக்கு நேரமில்லை
அவளது சிதாரில் புழதி படிந்துவிட்டது
அவளது தம்புரா எலி வலையாகி விட்டது
அவள் இப்போது கடைகளுக்குச் செல்லும்
நேர்த்தியான வாடிக்ககைக்காரி ஆகிவிட்டாள்
வீட்டுக்கு அவள்
மதியச் சாப்பாட்டைச் சேமித்து வைக்கவென
பீங்கான் பாத்திரங்கள் வாங்கி வருகிறாள்
புத்தம் புதிய மீன் வகைகள்
விலையுயர்ந்ததாகத் தோற்றம் தருகிற படுக்கை விரிப்புகள்
வாங்கி வருகிறாள்.
- வங்காளத்தின் சமகாலக் கவிகள் சங்கா கோஸ் மற்றும் நிரேன்ந்திரநாத் சக்கரவர்த்தி போன்றவர்கள் முறையே சங்கா நிரேன் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.-
**********************
பெண்ணுடனான சந்தோஷம்
நாம் சந்தித்த மூன்றாவது நாள் நான்
உன்னை விளிக்கும் முறை சம்பந்தமாக நீ
ஆட்சேபம் தெரிவித்தாய்
ஏழாவது நாள் நீ என்னை
சென்னை பெங்களுர் காத்மான்டு
திரும்பவும் கல்கத்தா என
அழைத்துச் செல்ல விரும்பினாய்
பதினெட்டாவது நான்
என் விரல்களின் தொடுகையை விரும்பினாய்
இரண்டாம் மாதம்
முத்தம் தரவேண்டும் எனக் கட்டாயப்படுத்தினாய்
சரியாக மூன்றரை மாதத்தின் பின்
என் உடம்பு வேண்டுமென கட்டாயப்படுத்தினாய்
எனது நேரத்தியான உடம்பிலிருந்து
நீ எதைப் பெறுவாயோ
அதை வீட்டிலிருக்கிற சாதாரணமான
ஒரு மனைவியிடமும் பெறலாம்
அல்லது அலுவலகத்தில்
உனக்குக் கீழ் இருக்கிற பெண்களிடமும் பெறலாம்
அல்லவெனில்
மிகக் குறைந்த விலைக்கு தெருவில் நிற்கிற
பெண்களிடமிருந்தும் கூட நீ பெறலாம்
இருந்தாலும்
உன்னுடைய பாத அணி தேயும் வரையிலும் நீ
என்னைச் சுற்றியே அலைகிறாய்
உன்னருகில்
என்னைக் கொணர சாதுரியங்கள் செய்கிறாய்
நீ என்னை நெருங்குவதை நான் அறியாதிருக்க
எனது கவனத்தைத் திசை திருப்புகிறாய்
இதை வியாக்கியானப்படுத்த ஒரேவழிதான் இருக்கிறது.
ஒரு பெண்ணை அனுபவிக்கும் போது
அவளை மயக்குகிற பரவசம் இல்லாமல்
நிவைில் வாசம் என்பது இல்லை.
இதை நான் உணர்ந்திருப்பதால்
எவரும் என் உடம்பின் மிது காறி உமிழ்வதற்குள்
உமது அழுக்கு மூளையை நோக்கி
நான்
இரண்டு முறை காறி உமிழந்து விடுவேன்.
**********************
விவாகரத்துக் கடிதம்
நீ என்னிலிருந்து கொஞ்சத் தூரம் போனாலும்
நீ இனி என்னுடையவன் இல்லை
நீ எல்லோருடையவும் ஆசை நாயகன் ஆவாய்
நீ யாரிடம் போனாலும்
கழுகைப் போல சதையைப் பசிப்பாய்
உனது உணவாக அது ஆகும்
விலை மாதின் உடம்புக்கும் காதலிக்கும்
உனக்கு வித்தியாசம் புரியாது
கவிதையை விட
உனக்கு குயுக்தி பிடிக்கிறது
இரவு விழும்போது
கட்டு தறியற்ற ஆயிரத்தோரு தினவு கொண்ட குதிரைகள்
உனது இரத்தத்தில் திரள்கிறது
உனது மூதாதையர்கள் எழும்பி
உன் ரத்தத்தில் களி நடனம் புரிகிறார்கள்
நான் உனக்கு
நிலவு பற்றி நிறையச் சொல்லியிருக்கிறென்
ஆனாலும் உனக்கு
முதல் பிறைக்கும் முழு நிலவுக்கும்
வித்தியாசம் புரியவேயில்லை.
காதலை விட
உனக்கு போகம் பிடித்திருந்தது.
எவருடைய காலடியிலிருந்தும்
ஓரு துளி மதுவை நக்கித் திரிந்தாய்
தலை முதல் கால்வரை நீ
மதுக் குளத்தில் மூழ்கிக் கிடக்கிறாய்
இருந்தும்
இன்னும் உன் தாகம் தீரவில்லை
நான் கனவு பற்றி உனக்கு
எத்தனையோ சொல்லியிருக்கிறென
சமுத்திரத்திற்கும் சாக்கடைக்கும்
உனக்கு வித்தியாசம் தெரியவில் ல்
நீ கொஞ்ச தூரம் போனாலும்
நீ எவருடையவும் ஆசை நாயகன் ஆவாய்
எல்லோருடையவனாகவும் இருக்கிற அவன்
என்னுடையவன் இல்லை.
**********************
முன்னேற்றத்தின் பின்னால்
ஏர்கண்டிஷன் அலுவலகத்தில் அமர்ந்திருக்கிற
இந்த அதிகாரி தனது இளமையில்
ஓரு டஜன் இளம் பெணகளையாவது
பாலியல் பலாத்காரம் செய்தவனாக இருப்பான்.
மது விருந்தினிடையில்
ரகசியமான காமத்துடன் அவனது பார்வை
அழகான பெண்ணொருத்தியின் அடிவயிற்றில் பிராய்ந்து திரும்பும்
ஐந்த நட்சத்திர விடுதிகளில்
பல்வேறு மாறுபட்ட பெண்களுடன் இவன்
வேறுபட்ட ஆசைகளைச் சோதித்திருப்பான்.
இவன் வீட்டுக்குப் போகும் போது
மனைவியை அடிப்பான்
ஒரு கைக்குட்டை பற்றிய பிரச்சினைக்காகவோ
ஒரு சட்டைக் காலர் பிரச்சினைக்காகவோ
இவன் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பிறரிடம்
சிகரெட் பிடித்தபடி
பைல்களை மேய்ந்தபடி பேசிக்கொண்டிருப்பான்
தனது வேலையாளை இவன்
மணியடித்துக் கூப்பிடுவான் பிற்பாடு கூச்சலிடுவான்
பியூனை
தேநீர் கொணரச் சொல்லிக் கட்டளையிடுவான்
அங்கேயே அமர்ந்து குடிப்பான்
பிற்பாடு இவன்
பிறருக்கு நன்னடத்தைச் சான்றிதழ் தருவான்
அந்த வேலையாள் யாருக்கும் கேட்காதபடி
பணிவுடன் சன்னமான தொனியில் பேசுவான்
வீட்டில்
எவ்வாறு குரலை உயர்த்துவான் என
எவரும் யோசித்திருக்கவே முடியாது
எவருமே சந்தேகப் படவும் முடியாது
எவ்வளவு மோசம் இவனது
வசவு வார்த்தைகள் என்பது பற்றி
எவ்வளவு அசிங்கம்
இவனது நடத்தை என்பது பற்றி
இவனது வயதொத்தவர்களைச் சேர்த்துக் கொண்டு
இவன்
சினிமாவுக்கு சில டிக்கெட்டுகள் வாங்குவான்
நாற்காலிக்கு வெளியில் கால்களை நீட்டிக் கொண்டு
அரசியல்
கலை இலக்கியம் என பலத்துக் கத்துவான்
வீட்டில் யாரோ ஒருத்தர்
தற்கொலை செய்துபடி இருப்பார்கள்
இவனது தாய்
இவனது பாட்டி
இவனது பாட்டியின் தாய்
வீடு திரும்பி இவன் மனைவியை அடிப்பான்
ஒரு சோப்புக் கட்டிக்காக
குழந்தைக்கு சளி பிடித்ததற்காக
தேநீர் வாங்கி வரும் அந்தச் சிப்பந்தி
தனது பாக்கெட்டில் லைட்டரை வைத்திருக்கும் அவன்
தனது பாக்கெட்டில்
வெகுமதியாக வாங்கிய சில்லரையையும் வைத்திருக்கும்
அவன்
முதல் மனைவி கர்ப்பந்தரிக்கவில்லை என
விவாகரத்துச் செய்தான்
இரண்டாம் மனைவி பெண் குழந்தையைப் பெற்றாள் என
விவாகரத்துச் செய்தான்
மூன்றாம் மனைவி வரதட்சணை கொண்டு வரவில்லையென
விவாகரத்துச் செய்தான்.
விடு திரும்பி இவன்
இவனது நாலாவது மவைியை அடிப்பான்
ஒரிரு பச்சை மிளகாய்களுக்காக
ஒரு பிடி சமைத்த சாப்பாட்டுக்காக
**********************
அவமானம் 7 டிசம்பர் 1992
சதிபதா தாஸ் அன்று காலை
எனது வீட்டுக்குத் தேநீருக்கு வருவதாகத் திட்டம்
மனம் நிறைந்தபடி
அரைட்டை அடித்துக் கொண்டிருப்பதும்
செஸ் விளையாடுவதும் யோசனை
சதிபதா தாஸ் தினமும் வருவது வழக்கம்
இன்நு அவன் வரவில்லை
குல்லாக்கள் அணிந்த ஒரு கூட்டம்
சதிபதா தாஸின் வீட்டுக்குள் புகுந்து
பலவந்தமாக அவனைத்
தாக்கியது என்று செய்தி வந்தது
போனவர்கள் மண்ணெண்ணையை
அறையின் எல்லா இடங்களிலும் தெளித்தார்கள்
மேசைகள் நாற்காலிகள் படுக்கைகள் அலமாரிகள்
சட்டி பானைகள்
தட்டுமுட்டுச் சாமான்கள்
துணிமணிகள் புத்தகங்கள்
என எல்லாவற்றின் மீதும் தெளித்தார்கள்
அப்புறம் எல்லாத் தீக்குச்சிகளையும்
ஒருசேரக் கொழுத்தி
மண்ணெண்ணை தெளித்த எல்லா இடங்களுக்கும்
சுண்டி விட்டார்கள்
தீ பற்றியெறிந்தபோது சதிபதா தாஸ்
வீட்டு முன்றிலில் வெறித்தபடி நின்று
தாதி பஸார் மீது களங்கமற்ற தாதிபஸார்
வானதத்தின் மீது படியும்
கறும்புகையைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
மாலையில் நான்
சதிபதா தாஸின் வீட்டுக்குப் போனேன்
சதிபதா தாஸ் தனது முதாதையரின்
சாம்பலின் மீதும்
கரிந்த கட்டடைகளின் மீதும்
தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்
இரத்தம்
அவனது உடம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்தது
மார்பிலும் முதுகிலும்
கறுத்த தழும்புகள் தெரிந்தன
அவமானத்தில் எனக்குக் கூசியதால்
என்னால்
அவனைத் தொடமுடியவில்லை
1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி பாபர் மசூதி இந்தியாவில் இடிக்கப்பட்டது. இந்துகக்கள் வெறியாட்டம் ஆடினார்கள். ஏழாம் தேதி பங்களாதேஷில் நிகழ்ந்த அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த கவிதை இது.
தாதிபஸார் டாக்காவில் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அக்கலவரத்தில் அநேகமாக முழுக் குடியிருப்புகளும் நாசமாயின.
**********************
நுார்ஜஹான்
திறந்த வெளியில் ஒரு குழிக்குள் அவர்கள்
நுார்ஜஹானை நிறுத்தியிருந்தார்கள்
அதோ அங்கே அவள் நிற்கிறாள்
தலை குனிந்து இடுப்பு வரை மண்மூடி
அவர்கள் அவள் மீது கல்லெறிகிறார்கள்
அந்தக் கற்கள் என்னைத் தாக்குகிறது
கற்கள் எனது தலையில் வீழ்கிறது
எனது நெற்றியில்
எனது மார்பில்
எனது நெற்றியில்
அவர்கள்
க்கலியிட்டபடி கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள்
சிரித்தபடி வசைகளைக் கத்தியபடி
நுார்ஜஹானது உடைந்த முன் மண்டையிலிருந்து
இரத்தம் பீறிடுகிறது
என் மண்டையிலும்
நுார்ஜஹானது விழிகள் தெறிக்கிறது
என்னுடையதும்
அவளது மூக்கு சிதைக்கப்பட்டது
என்னுடையதும்
அவளது பிளந்த மார்பினுாடே
அவளது இதயம் கிழிக்கப்பபடுகிறது
என்னுடையதும்
இந்தக் கற்கள் உங்களைத் தாக்கவில்லையா?
அவர்கள் கெக்கலியிட்டுச் சிரிக்கிறார்கள்
தங்கள் தாடிகளை நீவி விட்டுக் கொண்டு
சிரிக்கிறார்கள்
அவர்கள் சிரிக்கும்போது அவர்களது குல்லாக்களும்
சேர்ந்து சிரிக்கிறது
அவர்கள்
தமது கைத்தடிகளைச் சழற்றியபடியே சிரிக்கிறார்கள்
அவர்களது விகாரமான குருரக் கண்களிலிருந்து
கணைகள் புறப்பட்டு அவளது உடம்பைத் துளைக்கிறது
எனது உடம்பையும்
இந்தக் கணைகள்
உங்கள் உடம்பைத் துளைக்கவில்லையா என்ன?
பங்களாதேஷின் ஸில்ஹூட் மாவட்டததைச் சேர்ந்த ஏழை விவசாயியொருவரின் மகள் நுார்ஜஹான். தனது முதல் கணவரால் விவாகரத்துச் செய்யப்பட்ட அவர் 1993 ஜனவரி மாதம் மறுமணம் செய்து கொண்டார். இஸ்லாத்தில் இம்முறை அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. ஆனால் உள்ளுர் முஸ்லீம் முல்லா ஒருவரால் நுார்ஜஹானது மறுமணம் இஸ்லாத்துக்கு விரோதமானது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு சில நாட்களின் பின்பு அவர் மணலில் இடுப்புவரை புதைக்கப்பட்டு கல்லெறி தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். பிற்பாடு அவமானம் தாங்காத நுார்ஜஹான் பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
**********************
அவகல்யாணி
கல்யாணி ஒருவனாலோ நிறையப் பேராலோ
எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறாள்
அவளது கிழிந்த சேலை அறையில் கிடக்கிறது
படுக்கையும் தலையனையும் கலைந்து போய்க் கிடக்கிறது
உடைந்த வளையல்கள்
தரையில் இரத்தத் துளிகள்
காலணித் தடங்கள் சிகரெட் துண்டுகள்
அநேகமாக இதற்குப் பின்பு அவள்
அடர்ந்த கானகத்தில் கிடப்பாள்
கானக நாய்கள் அவளது
சதையைக் கொத்தாகக் கவ்விக்கொண்டு போகம்
கழுகுகள்
அவளது சதையைக் கொத்திக் கிழிக்கும்
கால்யாணியயைப் பாரத்தவர்கள்
கைக்டையால் மூக்கைப் பொத்தியபடி
ஆஆ என்பார்கள்
அப்பெண் இனிமையான குணமுள்ள பெண் என்பார்கள்
அவளது முகத்த்ில் அவர்கள் அறைந்தால் கூட
அவள் ஒரு வார்த்தை பேசமாட்டாள்
அவ்வளவு அடக்கமானவள் என்பார்கள்
ஆனால் மறுபடி அவள்
அவளது வீட்டு வாசலில் வந்து
காயமுற்று இரத்தம் கசியும் சப்பித்துப்பிய
கிழிந்து சிதைந்த உடலுடன் நின்றால்
துயரத்திலிருந்து விடுபட்டு அவளது அன்னை
அன்புடன்
அவளைத் தொட்டு சுிகிச்சை செய்து
ஆண்களால் சிதைக்கபட்ட அவளது உடலை
மறுபடி
முன்னை நிலைக்குக் கொண்டு வருவாளா என்ன?
அவளது சொந்தக்காரர்கள்
நெருங்கிய அண்டை வீட்டுக்காரர்கள்
நண்பர்கள் எவரேனும்?
அவர்களது கண்களில் அநேகமாக
கேவலப்பார்வை தோன்றும்
சிலர் வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பார்கள்
இப் பெண்
அவமானத்தைக் கொண்டவந்துவிட்டாள் என்பார்கள்
இவள் வெட்கமற்றவள் என்பார்கள்
அவளது மேலாடை நிற்காமல்
எப்போதும் சரிந்து கொண்டே இருக்கும்
வெற்றிலை போட்டு
தனது உதட்டை சிவக்க வைத்துக் கொள்வாள்
எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள்
ஆண்களைப் பற்றிக் கொஞ்சங் கூடக் கவலைப்படாமல்
லஜ்ஜையில்லாமல்
சிரித்தபடி சுற்றித் திரிவாள் என்பார்கள்
இப்படி வேறு யாருக்கும்
நடக்கவில்லை பார்த்தீர்களா என்பார்கள்
இது வேறு எவருக்கும் நேராமல் இருக்கும் போது
ஏன் இவள் மட்டும்
இப்படியான ஒரே ஒருத்தியாக இருக்கிறாள்
இவள் நிச்சயமாகக் கெட்ட பெண்தான் என்பார்கள்
நிச்சயமாகச் சந்தேகமில்லாமல்
கல்யாணி கெட்ட பெண்தான் என்பார்கள்
ஆனால் அவளைக் கொண்டு திரிகிறவர்கள்
அந்தப் பணக்காரப் பையன்கள்
அவர்கள் தான்
இந்தக் குலைந்துகிடக்கும் தேசத்தின் சொத்து
**********************
விளையாட்டு :
மாற்றுச் சுற்று
அன்றொரு நாள் ரமணா பூங்காவில்
ஒரு பையின் ஒரு இளம் பெண்ணை
விலைபேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்
நானும் ஐந்து அல்லது பத்து டாக்காவுக்கு
ஒரு வாலிபனை வாங்க விரும்பினேன்
நன்றாகச் சவரம் செய்து
மொழு மொழுவென இருக்கும் பையன்
நல்ல அழகான சட்டை அணிந்திருப்பவன்
நடுவகிடெடுத்துப் படிய வாரியிருப்பவன்
பார்க் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன்
அல்லது பிரதான சாலையில் நின்றிருப்பவன்
உடல் வாகு கொண்டவன்-
சட்டைக் காலரைப் பிடித்து அவனை
இழுத்து நான்
ரிக்ஷாவில் வீச வேண்டும் -
கழுத்திலும் வயிற்ற்ிலும் கிச்சுகிச்சு மூட்டி
அவன் துள்ளுவதைப் பார்க்க வேண்டும்
அவனை வீட்டுக்கு கூட்டிவந்து
குதிகால் உயர்ந்த செருப்பைக் கழட்டி
நன்றாக விளாச வேண்டும்
அப்புறம் அவனை வெளியே துரத்த்ியடித்துச்
சொல்ல வேண்டும் :
ஒழிந்து போக தேவடியா மகனே
நெற்றியில் பேன்ட் எய்டை ஒட்டிக் கொண்டு
அந்தப் பையன்கள் அதிகாலையில்
தெருவோரத்தில் நின்று
தங்களது சிரங்கைச் சொறிந்து கொண்டிருக்க
அவர்களது
புரையேறிய காயங்களிலிந்து வழியும் மஞ்சள் சீழை
நாய்கள் நக்கிக் கொண்டிருக்க
அவர்களைப் பார்க்கும் பெண்கள் தங்கள்
கைவளைகள் நொறுங்கும் சப்தம்
கலகலவெனக் கேட்கும்படி சிரிக்கட்டும்
நிஜமாகவே நான் எனக்கு
ஒரு வாலிபனை வாங்க விரும்புகிறேன்
ஒரு புத்தம் புதிய மெருகு குலையாத
நெஞ்சில் முடி கொண்ட பையன்
ஒரு பையனை நான் வங்கி
அவன் உடம்பு முழக்க உதைப்பேன
அவனது சுறுங்கிக் கிடக்கும்
விரையில் உதைத்துச் சொல்வேன் :
ஒழிந்து போ தேவடியா மகனே
--------------------------------------------------------------------------------
ரமணா பூங்கா பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் - டாக்கா பல்கலைக்கழகத்தை ஒட்டியிருக்கும் திறந்தவெளி பூங்காவாகும். விலைமாதர்கள் சாலையோரங்களில் நின்று கொண்டிருப்பது இங்கு அன்றாடக் காட்சியாகும். ஏழை கிராமத்துப் பெண்களும் நகர்ப்புற சேரிப் பெண்களும் இங்கு மிகவும் குறைந்த விலைக்கு தமது உடம்பை விற்கும் அவலம் சோகமயமானதாகும்.
இந்தியாவில் ரூபாய்போல பங்களாதேஷில் டாக்கா அவர்களது அடிப்படை நாணய அலகாக இருக்கிறது.
**********************
உடம்பு பற்றிய கோட்பாடு
இந்த எனது உடம்பை
வெகு காலம் நான் அறிவேன்
சமயங்களில்
இதை நான் அறிந்து கொள்ளவே முடிவதில்லை
ஒரு முரட்டுக் கை பல்வேறு சாகசங்களுடன்
எனது சந்தன நிறக் கையைத் தொடும் போது
எனது
நரம்புகளின் வீட்டில் ஒரு மணியோசை கேட்கிறது
மணியோசை அலைகிறது
இது எனது சொந்த உடல்
இதனது மொழியை
என்னாலேயே படிக்க முடியவில்லை
உடல் அதனது கதையை அதுவே
அதனது மொழியில் சொல்கிறது
இந்த விரல்கள் விழிகள்
இந்த உதடுகள் இந்த மெல்லிய பாதங்கள்
எதுவும் என்னுடையதில்லை
என்னாலேயே
என் கைகளைச் சரியாகக் கண்டடைய முடியவில்லை
என்றாலும்
இந்த உதடுகள் என்னுடையது மட்டும்தான்
இவைகள் எனது மார்புகள்தான்
இது எனது புட்டம்தான்
எனது தொடைகள்தான்
இந்தச் சதைகளில் எதுவும்
இந்த முடிச்சுகளில் எதவும்
என் கட்டுப்பாட்டில் இல்லை
எனது கட்டளைக்குக் கட்டுப்படுவதில்லை
இந்த இரண்டு அடுக்குகளிலான எனது நரம்புகளில்
ஒரு மணி துடிக்கிறது
இந்த உலகில் எவரது
விளையாட்டுப் பொருள் நான்-
ஆணினுடையதா
அல்லது இயற்கையினுடையதா?
நிஜத்தில் ஆண் அல்ல
இயற்கைதான் என் மீது விளையாடுகிறது
அதனது சபலத் தீண்டுதலுக்கு
நானொரு வீணை
ஆணின் தொடுகைக்கு நான் விழித்தெழுகிறேன்
எனது
குழந்தைமையிலிருந்து வெடித்தெழுகிறேன்
எனது கடலில்
உடனே ஒரு உயர் அலை எழகிறது
காதலின் இனிய நறுமணத்தை
எனது
இரத்தத்திலும் சதையிலும் உணரமுடிகிறதெனில்
அது இயற்கை
அதுதான் என்னோடு விளையாடுகிறது
அதனது சபலத் தீண்டுதலுக்கு
நானொரு வீணை
**********************
கதை
ஓட்டிவிட வேண்டும் போலத் தோற்றமளித்த
அந்தப் பையன்களில் ஒருவன் சொன்னான் :
எனக்குத் தீராத வலி
அவனது அடர்ந்த முடியில்
என் விரல்களை அழுத்தமாக வைத்த நான் சொன்னேன் : .
வயல்கள்
வெந்நிற நிலவெளியால் நிறைந்து வழிகிறது
நாம் அங்கே போய் அதில் நனைவோம் வா
மேகம் மூடிய அதிகாலையில்
நாம் அந்தக் கானகத்தைக் கடப்போம்
சீததலக்ஷா நதியில்
எதிர் நீச்சல் போடுவோம் வா
அந்தப் பையன் சொன்னான் :
நான் இப்போதெல்லாம் நிறையச் சோர்ந்து போகிறேன்
நான் அவனுக்கு கடுகு ரசம் வைத்து
இலிஸ் மீன் செய்து கொடுத்தேன்
காரமான தேங்காய்ச்சாற்றில் கலந்து
சீத்தல் மீன் துண்டங்கள்
முழுமையான வறுத்த கோழி எல்லாம் கொடுத்தேன்
சாப்பிட்டு முடிந்த பின்னால்
வெள்ளித் தாம்பாளத்தில்
வெற்றிலை பாக்கும் கொடுத்தேன்.
சாப்பிட்டான்
நிலவொளிரும் இரவில் நனைந்தோம்
அதிகாலைக் கானகத்தைக் கடந்தோம்
அந்தப் பையனின் உத்வேகமும் வேகமாயிருந்தது
மதிய நேரப் பொழுதில்
அவனது வயிறும் அவனது வேகமும் முழமையடைந்திருந்தது
அவன் சொன்னான்:
நான் போகிறேன்.
இன்னொரு நாள் அண்டை வீட்டுப் பெண்ணிடம்
அவன்
எடுத்த எடுப்பில் தனது பசி பற்றி
வலி பற்றிச் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டேன்
அந்தப் பெண் அவனுக்குக் கீழமர்ந்து
அவனுக்கு
சோறுாட்டிக் கொண்டிருந்தாள்ூ
-----------------------------------------------------------------------------
இலிஸ் மற்றும் சீத்தல்-மீன் போன்றன வங்காளதேநத்தில் விசேஷமான ஆற்று மீன் வ கைகள். இலிஸ் மீன் ஹில்ஸா என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது. இலிஸ் மீன் வடகிழக்கு அஸ்ஸாம் பகுதிகளிலும் ஆற்றில் கிடைக்கும் மீனாகும். இது ஈலிஸா மற்றும் ஈலிகா போன்ற பெயர்களிலும் வழங்கப் பெறுகிறது.
**********************
நேற்று ஒரு கெட்ட கனவினோடு
நேற்று பின் மாலையில்
பங்களா அகாதமியின் புல்வெளியில் நான்
ஒரு கெட்ட கனவைச் சந்தித்தேன்
அந்தக் கெட்ட கனவு
நிலக்கடலையைத் தின்று கொண்டு
தின்றுமுடித்த
கடலைத் தோலை துாக்கிப்போட்டு
நண்பர்களோடு குறும்பு பேசி
விளையாடிக் கொண்டிருந்தான்.
அந்தக் கெட்ட கனவின் கண்களுக்கள் நான்
மயங்கியபடி பார்த்தேன்.
அந்தக் கெட்ட கனவின் கண்களுக்குள் நான்
வைகறை நிறத்தைப் பார்த்தேன்.
கஞ்சாப் புகை காற்றில் வட்டங்களாகச் சுருண்டு
எனது கழுத்துப் பட்டையில் கலந்தது
கனவில் கிறங்கிய எனது கண்களுக்குள்
புகை மண்டிய வானத்தினுள்
அதன் நெற்றி முகப்பில நுாறாயிரம் பொட்டுகளாக
சந்தனச் சாந்து விரிந்தது
திடீரென அந்தக் கெட்டகனவு
எதைப்பற்றியும் கவலைப்படாமல் என்னை இழுத்து
தனது கைகளுக்குள் இறுக்கினான்
முத்தமிடும் வேளையிலெல்லாம் எண்ணியபடி எனக்கு
முப்பத்தியொன்பது முத்தம் பொழிந்தான்..
கெட்ட கனவின் மயிர்க்கற்றைகள்
மெல்லிய காற்றில் அசைந்தது
அவனது சட்டை பொத்தான்கள் திறந்து கிடந்தது
நிலவொளியில் நனைந்து கிடந்த நான்
பின்னிரவில் வீடு வந்து சேர்ந்தேன்
அந்தக் கெட்ட கனவு
என்னுடன் ஒட்டிக்கொண்டு வழியெங்கும்
காதலைப் பற்றிப் பேசிக் கொண்டே வந்தான்
அந்தக் கெட்ட கனவுக்கு
வெட்கமென்பது கிஞ்சிற்றும் இருக்கவில்லை
அந்த இரவு கழிந்தது
மறுநாள் பகலும் கழிந்தது
ஆனால்
அவன் போகப் போகிறேன் என்று
ஒரு முறை கூடச் சொல்லவில்லை
டாக்கா பல்கலைக் கழக வளாகத்தில் வங்க மொழி, கலாச்சாரம், நாட்டுப்புறவியல் போன்றன கற்பிக்கப்படும் இடமே பங்களா அகாதமி எனும் பெயரில் இயங்குகிறது. இளம் வயது ஆண்களும் பெண்களும் மனம் விட்டுப் பேசிப்பழகுவதற்கான சாத்தியங்கள் இங்கு அதிகம். இதுவன்றி பங்களாதேஷில் பிற இடங்களில் இளம் பெண்களும் வாலிபர்களும் பேசிப்பழகுவதற்கான சாத்தியங்கள் இல்லை.
**********************
அழையாத மணி
எத்தனையோ விஷயங்கள் ஒலிக்கிறன
உடலின் ஸெல்கள்
நடனமிடும் கால் கொலுசுகள்
வெள்ளிக் கைவளையல்கள்
மழைக்காலத் தாரைகள்
கண்ணாடி ஜன்னலில் விழும் போது
இசை அதிர்கிறது
கனவுக்குள் இசை கேட்கிறது
மனசுக்குள் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டு
தனிமை ஒலிக்கிறது
மனசுக்கு மிக நெருக்கமான
எனது வாசல் மணி மட்டும் எப்போதும்
ஒலிப்பதேயில்லை
நம்பிக்கை கொண்ட கைகள்
நான் வலது பக்கமும் இல்லை
இடது பக்கமும் இல்லை
நான் எனது மண்ணில் நிற்கிறேன்
மதத்தை அல்ல
நெறிப்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களின் கூட்டத்தை
நான் விரும்பகிறேன்
கொலைகளை அல்ல
உண்மையைத் தேடும் துாய
அருள் பொருந்திய மக்களின் முகங்களை
எனது நாட்டுக் குப் பொறுத்தமான
கலை நயமிக்க பாதையை நான் கோருகிறேன்
எனது நாட்டுக்குத் தகுதியான
அரசியலை நான் கோருகிறேன்
நான் வலது பக்கமம் இல்லை
இடது பக்கமும் இல்லை
நான் எனது மண்ணில் நிற்கிறேன்
ஆபரணங்களையல்ல
மக்களின் அம்மண உடல்களின் மீது ஆடைகளை
நான் வேண்டுகிறேன்
பசியை அல்ல
உதிர்ந்து கொண்டிருக்கும் மக்களின் நெஞ்சுக்கு
அமிழ்தத்தை நான் வேண்டுகிறேன்.
முரசுகளை அல்ல
பற்றாக்குறையில் வதியும் குடிசைகளுக்கு
சோற்றுப் பருக்கையை நான் வேண்டுகிறேன்
என் மண்ணில் வாழ்வதற்குத் தகுதியான
மரணம் வரை வாழ்வதற்கான
ஒரு வீட்டைத்தான் நான் கேட்கிறேன்
பிச்சையெடுத்தலை அல்ல
ஒடுக்கப்படடவருக்கான
அனாதைகளாக வாழ்பவர்க்கான
கல்வி கற்பதற்காண உரிமையை நான் கோருகிறேன்
கையேந்தி நிற்கும் குழந்தையை அல்ல
சித்திரவதைக்குள்ளான இந்த ஒவ்வொரு வீட்டிலிருந்தும்
ஆரோக்கியமான குழந்தையை
நான் விரும்பகிறேன்
ஒடுக்குமறையாளர்களின் இரத்தம்
எனது மண்ணில் சிந்தப்படும்போது
எனது இருண்மையை நான் ஒதுக்கி வைப்பேன்
பிரம்மாண்ட சூரியனின் கீழ்
எனது கைகளை அகல விரிப்பேன்
நம்பிக்கை கொண்ட ஆயிரமாயிரம் கைகள்
எனது
கைகளின் மிது குவிவதை நான் விழைகிறேன்.
**********************
மதம்
கோபுரங்களைத் தரைமட்டமாக்குங்கள்
கோயில்களின்
மசூதிகளன
குருத்துவாராக்களின்
சர்ச்சுகளின் கட்டிடஙகள்
கொழுந்துவிடும் தீயில் எரியட்டும்
அந்த அழிவினின்றும்
நறுமணத்தைப் பரப்பிக் கொண்டு
அழகான மலர்த் தோட்டங்கள் எழட்டும்
குழந்தைப்பள்ளிகளும்
படிப்பகங்களும் அதனின்று எழட்டும்
மனிதகுல நலனின் பொருட்டு
பிரார்த்தனை மண்டபங்கள்
மருத்துவ மணைகள் அனாதை விடுதிகள்
பள்ளிக்கூடங்கள் பல்கலைக்கழகங்கள் ஆக்கப்டட்டும்
கலைக்கூடங்களாக
கண்காட்சி மையங்களாக
விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனங்களாக
பரார்ததனை மண்டபங்கள்
அதிகாலைப் பிரகாசத்தில்
பொன்னரிசி விளையும் வயல்களாக ஆகட்டும்
திறந்த வெளிகளாக நதிகளாக
ஆராவரிக்கும் அமைதியற்ற சமுத்திரங்களாக
இன்று முதல்
மதத்தின் மறு பெயர்
மனிதம் என்றாகட்டும்
**********************
என் ஆத்மாவிலிலுக்கும் ஸைபீரியா
வருடம் கடந்தபோது எனக்கு ஒரு வயது கூடிப் போனது.
புது வருடம் சுதந்திரம் பற்றிய நம்பிக்கையையோ உத்திரவாதத்தையோ கொண்டு வரவில்லை.
நாடு கடந்து வாழ்வதற்கு என்னால் முடியவில்லை.
அன்னிய நாட்டில் அன்னிய நபராக இன்னும் நான் எத்தனை காலம் கழிக்க வேண்டும்?
நாளைக்கான நம்பிககையுடன் வாழ எந்தக் காரணத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை.
எனக்கு எவர் ஒருவர் வாழ்த்துச் சொன்னாலும் நான் யோசிக்காமல் உடனே எதிர்வினை செய்கிறேன்:
எனது தாய் நாடு பங்களாதேஷுக்கு நான் போக விரும்புகிறேன்.
என் வீட்டிலிருந்து வெளியேறி பல ஆண்டுகள் போய்விட்டது.
அவளது செளந்தர்யமான முகம் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
சில சமயம் நான் உன்மத்தம் பிடித்தவளாகி விடுவேனோ என நான் பயப்படுகிறேன்.
வெளியிலிருந்து என்னைப் பார்ப்பவர்களுக்கு நான் மகிழ்ச்சியாக மன நிறைவாக இருப்பது போல் தோன்றும்.
எல்லா மனிதர்களும் வீடு திரும்பும் வேளையில் அவர்கள் விரும்பும் உணவு இருப்பிடம் உடை பற்றி நான் இங்கு கவலைப் படத் தேவையில்லை.
எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நான் ஓடி ஒளிய எனக்கு இங்கு அவசியமில்லை.
என் மீது பத்வா விதிக்க இங்கு யாருமில்லை. எனக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் இல்லை.
எனது வாழ்வில் பொங்கிப் பிரவகிக்கும் எழுததும் இனி இல்லை.
என்னைச் சுற்றிலும் அன்பு பாராட்டும் மனிதர்கள் இங்கே நிறைய இருக்கிறார்கள்.
இத்தனையிருந்தும் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என என்னால் சொல்ல முடியவில்லை.
நான் நானாக வளர்ந்த பிறந்த பூமியலிருந்து நான் வேரறுந்து போயிருக்கிறேன்.
ஐரோப்பா பல பேருக்கு கனவுகளின் பூமி ஆனால் நான் இங்கே யார்?
இந்த அன்னிய நிலத்தில் நானொரு வேரற்ற நபர்.
சொந்தம் எனகிற உணர்வு இல்லை.
வண்ணச் சாடியில் இன்னொரு பிளாஸ்டிக் பூ நான்.
மலர்கள் பூப்பதில்லை.
அதனது காலம் வருவதற்கு முன்பேயே மொட்டுக்கள் கருகிப் போகின்றன.
எனது ஆத்மாவின் ஆழத்தில் மறுபடி புஷ்பிக்கவென மறுபடி எழுதவென சிருஷ்டிக்கவென எனக்கு உந்துதல் எழுகிறது.
ஆனால் சென்ற ஆண்டு ஒரு சில கவிதைகள் தவிர ஏதும் எழுத முடியவில்லை.
எனது கண்ணீரிலும் எனது அவமானத்திலும் எனது சோர்வுற்ற ஆத்மாவிலிருந்துமான கவிதைகள் அவை.
பங்களாதேஷுக்குப் பறந்து சொல்லும் ஒரு பறவையாக இருந்துதான் எனது அவதியை நான் சொல்லமுடியும்.
குளிர் காலத்தில் பறவைகள் ஸைபீரியா மாதிரித் துாரப் பிரதேசங்களில் இருந்து பங்களாதேஷுக்கு மிக நீண்ட பிரயாணம் செய்து சூரிய ஒளியையும் கதகதப்பையும் தேடி வரும் என்பதை நான் ஞாபகம் கொள்கிறேன்.
எனது நாட்டில் என் மீது பத்வா விதிக்கப்பட்டபோது சிறை வைக்கப்பட்டபோது இத்தகைய உறைகுளிரில் நானும் அகப்பட்டேன் .
என் தலைக்கு அவர்கள் விலை வைத்த போது ஐரோப்பாதான் எனக்கு அடைக்கலம் கொடுத்து என் உயிரைக் காப்பாற்றியது.
இந்தப் பரந்த இதயத்தையும் வெம்மையையும் என்றும் நான் மறவேன்.
ஆயினும் எனது இதயம் எனது தாய் நாட்டுக்குத் திரும்ப ஏங்குகிறது.
எனது அறிந்த சூழலில் மறுபடி எழுதுபவளாக என் வாழ்வைத் தொடங்கவும் எனது மக்களுக்கிடையிலிருந்து வாழவும் நான் ஏங்குகிறேன்.
எனது பழைய எழுது மேஜையின் முன்னமர்ந்து மறுபடியும் பேனாவைக் கையிலெடுக்க ஏங்குகிறேன்.
பங்களாதேஷ் என்றென்றைக்குமான எனது ஸைபீரியாவாக ஆகிப் போய்விடுமா என்ன?

No comments:
Post a Comment